Saturday, January 28, 2006

சத்தியம் செய்தல்

அல்லாஹ் அல்லாதவற்றின் மீது சத்தியம் செய்தல்

அல்லாஹ் தன்னுடைய படைப்பினங்களில் தான் நாடியதைக் கொண்டு சத்தியம் செய்கிறான். ஆனால் மனிதர்களைப் பொருத்தவரையில் அல்லாஹ்வை விடுத்து மற்றவற்றைக் கொண்டு சத்தியம் செய்வது கூடாது. என்றாலும் பெரும்பாலான மக்களுடைய பேச்சுகளில் அல்லாஹ் அல்லாததைக் கொண்டு சத்தியம் செய்யும் வழக்கம் இருந்து வருகின்றது. எந்த மகத்துவம் அல்லாஹ்வுக்கே தவிர வேறு எவருக்கும் பொருந்தாதோ அத்தகைய மகத்துவம் சத்தியத்தில் உள்ளது.

இப்னு உமர் (ரலி) அறிவிப்பதாவது: 'அறிந்து கொள்ளுங்கள். நீங்கள் உங்களுடைய தந்தையர் மீது சத்தியம் செய்வதை திண்ணமாக அல்லாஹ் தடை செய்திருக்கிறான். (உங்களில்) யாரேனும் சத்தியம் செய்வதாக இருந்தால் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்யட்டும். இல்லையென்றால் மௌனமாக இருக்கட்டும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்' (புகாரி). இப்னு உமர் (ரலி) மேலும் அறிவிப்பதாவது: 'அல்லாஹ் அல்லாதவற்றின் மீது யார் சத்தியம் செய்கிறாரோ அவர் இணைவைத்து விட்டார் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்' (அஹ்மத்), 'அடைக்கலப் பொருளின் மீது யார் சத்தியம் செய்கிறாரோ அவர் நம்மைச் சார்ந்தவரல்ல எனவும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்' அறிவிப்பவர்: புரைதா (ரலி). நூல்: அபுதாவூத்.

எனவே கஃபா, அடைக்கலப் பொருள், உதவி, கண்ணியம், இன்னாருடைய பரகத், இன்னாருடைய வாழ்வு, நபியின் அந்தஸ்து, அவ்லியாக்களுடைய அந்தஸ்து, தாய், தந்தை, குழந்தைகள் இன்னும் இது போன்றவற்றின் மீது சத்தியம் செய்வது ஹராமாகும். யாரேனும் இவ்வாறு செய்து விட்டால் அதற்கான பரிகாரம் ஆதாரப்பூர்வமான நபிமொழியில் வந்துள்ளது போல 'லா இலாஹ இல்லல்லாஹ்' என்று கூறுவதாகும். 'உங்களில் ஒருவர் சத்தியம் செய்யும் போது லாத், உஸ்ஸாவின் மீது சத்தியமாக (நமது நாடுகளில் முஹ்யுத்தீன் ஆண்டவர், ஷாஹுல் ஹமீது ஆண்டவர் மீது சத்தியமாக என்று கூறுவது போல) என்று கூறினால் அவர் 'லா இலாஹ இல்லல்லாஹ்' என்று கூறட்டும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்' அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) (புகாரி).

இதே அடிப்படையில் இன்னும் பல ஹராமான, ஷிர்க்கான வார்த்தைகள் உள்ளன. சில முஸ்லிம்கள் அவற்றைக் கூறி வருகின்றனர். உதாரணமாக அல்லாஹ்வைக் கொண்டும் உன்னைக் கொண்டும் பாதுகாப்புத் தேடுகிறேன், அல்லாஹ்வின் மீது உன் மீதும் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ளேன், இது அல்லாஹ்வினாலும் உன்னாலும் தான் கிடைத்தது, அல்லாஹ்வையும் உன்னையும் தவிர எனக்கு வேறு யார் இருக்கிறார், எனக்காக வானத்தில் அல்லாஹ்வும் பூமியில் நீயும் இருக்கிறாய், அல்லாஹ்வும் இன்னாரும் இல்லையென்றால் இஸ்லாத்திற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, காலத்தின் கோலமே! - இன்னும் இதுபோன்ற காலத்தைத் திட்டும்படியான வாசகங்கள். உதாரணமாக கெட்டகாலம், நேரம் கெட்ட நேரம், காலத்தின் சூழ்ச்சி போன்ற வாசகங்கள். ஏனெனில் காலத்தைத் திட்டுவது அதனை படைத்த இறைவனைத் திட்டுவது போலாகும் - இயற்கையின் நாட்டம், படைப்பினங்களின் பெயருடன் 'அப்து' என்ற வார்த்தையைச் சேர்த்துக் கூறப்பட்ட பெயர்கள் - உதாரணமாக அப்துல் மஸீஹ், அப்துன் நபி, அப்துர் ரஸூல், அப்துல் ஹுஸைன். (அப்து என்பதன் பொருள் அடிமை ஆகும். அப்து என்பதை அல்லாஹ்வின் பெயர்களுடன் மட்டுமே சேர்க்க வேண்டும்.)

இதுபோல தவ்ஹீதுக்கு எதிரான நவீன சில வாசகங்களும், சொல் வழக்குகளும் உள்ளன. இஸ்லாமிய சோஸலிஸம், இஸ்லாமிய ஜனநாயகம், மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு, மதம் இறைவனுக்குரியது நாடு மக்களுக்கு உரியது, மொழி, இனவாதம், புரட்சி வாதம்.

மலிகுல் முலூக் (அரசர்களுக்கெல்லாம் அரசர்), காழியுல் குழாத் (நீதிபதிகளுக்கெல்லாம் நீதிபதி) என்ற வார்த்தைகளையும் இந்த அர்த்தத்திலுள்ள வார்த்தைகளையும் ஒரு மனிதருக்குச் சொல்வதும், அதுபோல ஸய்யித் (தலைவர், எஜமான்) என்ற வார்த்தையையும் அதே அர்த்தத்திலுள்ள வேறு வார்த்தைகளையும் - அது எந்த மொழியிலிருந்தாலும் சரி நயவஞ்சகனுக்கும் காஃபிருக்கும் சொல்வதும், இப்படியாகி விட்டதே! அப்படியாகி விட்டதே! இப்படி இருந்திருக்கக் கூடாதா! அப்படி இருந்திருக்கக் கூடாதா! இவ்வாறு இருந்திருந்தால், அப்படி இருந்திருந்தால், இப்படி நடந்திருந்தால், அப்படி நடந்திருந்தால் என்பன போன்ற அதிருப்தி, வருத்தம், கை சேதம் போன்ற அர்த்தங்களைத் தரக்கூடிய - ஷைத்தானிய செயலுக்கு வழி திறந்து விடக்கூடிய வார்த்தைகளைப் பயன்படுத்துவதும், இறைவா! நீ விரும்பினால் என்னை மன்னிப்பாயாக! என்று கூறுவதும் விலக்கப்பட்டவையாகும்.

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.

Saturday, January 21, 2006

துற்குறி

துற்குறி என்பது அபசகுனமாகும். அல்லாஹ் கூறுகிறான்: "அவர்களுக்கு ஒரு நன்மை வந்து விட்டால் இது எங்களுக்கு வரவேண்டியதுதான் என்று கூறுவார்கள். அவர்களுக்கு ஏதேனும் துன்பம் நேர்ந்து விட்டாலோ மூஸாவையும் அவர்களுடன் உள்ளவர்களையும் (தமக்கு நேர்ந்த) அபசகுனமாகக் கருதுவார்கள்" (7:131)

அரபுகள் பயணம் மேற்கொள்ள அல்லது வேறு ஏதேனும் ஒரு காரியத்தைச் செய்ய நாடினால் ஒரு பறவையைப் பிடித்து பறக்க விடுவார்கள். அது வலது பக்கமாகப் பறந்தால் அதை நற்குறியாகக் கருதி அந்த காரியத்தைச் செய்ய ஆரம்பிப்பார்கள். அது இடது பக்கமாகப் பறந்தால் அதைத் துற்குறியாக - அபசகுனமாகக் கருதி செய்ய நினைத்த காரியத்தை விட்டு விடுவார்கள். இவ்வாறு செய்வதின் சட்ட நிலையை நபி (ஸல்) அவர்கள் பின்வரும் நபிமொழியில் தெளிவு படுத்தியுள்ளார்கள். 'சகுனம் பார்ப்பது ஷிர்க்காகும்' அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி), நூல்: திர்மிதி, அபுதாவூத்

தடுக்கப்பட்டதும் தவ்ஹீதின் நிறைநிலைக்கு எதிரானதுமான இத்தகைய நம்பிக்கையில் பின்வருபவையும் அடங்கும்: சில மாதங்களையும் சில நாட்களையும் பீடையாகக் கருதுவது. உதாரணமாக ஸபர் மாதத்தில் திருமணம் போன்ற நல்ல காரியங்களைத் தவிர்த்தல், ஒவ்வொரு மாதத்திலும் கடைசிப் புதன் நீடித்த துர்ப்பாக்கியத்திற்குரிய நாள் என்று நம்புதல். அதுபோல சில எண்களை (உதாரணமாக 9,13, 103), சில பெயர்களை அல்லது சில நபர்களை அபசகுனமாகக் கருதுவது. உதாரணமாக ஒருவர் தன் கடையைத் திறக்கச் செல்லும்போது வழியில் ஒரு குருடரைக் கண்டால் அவரைத் துற்குறியாகக் கருதி திரும்பி விடுதல். ஆக இப்படிப்பட்ட அனைத்து நம்பிக்கைகளும் ஹராமான, ஷிர்க்கான காரியங்களாகும். இவ்வாறு செய்வோரை விட்டும் நபி (ஸல்) அவர்கள் விலகிக் கொண்டனர்.

இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அறிவிக்கிறார்கள்: 'ஒருவர் சகுனம் பார்ப்பாரெனில் அல்லது அவருக்காக சகுனம் பார்க்கப்படுகிறதெனில் , ஒருவர் ஜோசியம் பார்ப்பாரெனில் அல்லது அவருக்காக ஜோசியம் பார்க்கப்படுகிறதெனில், ஒருவர் சூனியம் செய்தாரெனில் அல்லது அவருக்காக சூனியம் செய்யப்படுகிறதெனில் இப்படிப்பட்டவர்கள் நம்மைச் சேர்ந்தோர் அல்லர் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்' (தப்ரானி)

இந்தச் செயல்களில் ஒன்றை யாரேனும் செய்து விட்டால் பின்வரும் ஹதீஸில் வந்துள்ளது போல அதற்குப் பரிகாரம் செய்ய வேண்டும்.

'ஒருவர் சகுனம் பார்த்து தான் நாடிய காரியத்தைச் செய்யாது பின்வாங்கினால் அவர் அல்லாஹ்வுக்கு இணைவைத்து விட்டார் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதும் அல்லாஹ்வின் தூதரே! அதற்குப் பரிகாரம் என்ன? எனத் தோழர்கள் வினவினர். "அல்லாஹும்ம லா கைர இல்லா கைருக வலா தைர இல்லா தைருக வலா இலாஹ கைருக" என்று கூறுவதாகும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்' அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி), (அஹ்மத்)

(பொருள்: இறைவா! நீ வழங்கும் நன்மையைத் தவிர வேறு எதுவும் நன்மையாக இருக்க முடியாது. நீ ஏற்படுத்தும் சகுனத்தைத் தவிர வேறு எதுவும் தீய சகுனமாக இருக்க முடியாது. வணக்கத்திற்குரிய இறைவன் உன்னைத் தவிர வேறு யாரும் இருக்க முடியாது)

துற்சகுனம் பார்ப்பது மனிதர்களின் இயல்பாகும். அது அதிகரிக்கவும் செய்யும், குறையவும் செய்யும். இதற்குரிய முக்கியமான சிகிச்சையாவது தவக்குல் - அல்லாஹ்வையே முழுவதுமாகச் சார்ந்திருத்தல் எனும் பண்பாகும். இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் கூறியது போல: 'நம்மில் எவருக்கும் இத்தகைய எண்ணம் ஏற்படாமலில்லை. எனினும் தவக்குல் - அல்லாஹ்வையே முழுவதுமாகச் சார்ந்திருப்பதன் மூலம் அல்லாஹ் அதனைப் போக்கி விடுகிறான்' (அபுதாவூத்)

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.

Wednesday, January 18, 2006

வழிபாடுகளில் முகஸ்துதி

நற்செயல்கள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமாயின் அவை முகஸ்துதியை விட்டும் நீங்கி அல்லாஹ்வுக்காக என தூய எண்ணத்துடனும் நபிவழியைப் பின்பற்றியும் செய்யப்பட்டிருக்க வேண்டும். மக்கள் பார்க்க வேண்டும் மெச்ச வேண்டும் என்பதற்காக எவன் வழிபாடு செய்கிறானோ அவன் சிறிய இணைவைப்பைச் செய்தவன் ஆவான். அவனுடைய செயல் அழிந்து விடும். உதாரணமாக மக்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக ஒருவன் தொழுவதைப் போல.

அல்லாஹ் கூறுகிறான்: "இந்த நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை ஏமாற்றுகிறார்கள். (உண்மையில்) அவனே இவர்களை ஏமாற்றத்திற்குள்ளாக்கி இருக்கின்றான். இவர்கள் தொழுகைக்காக எழுந்து நின்றால் சோம்பல் பட்டவர்களாகவே நிற்கிறார்கள். மக்களுக்குக் காட்டிக் கொள்ளவே தொழுகிறார்கள். இன்னும் அல்லாஹ்வை மிகக் குறைவாகவே நினைவு கூறுகிறார்கள்" (4:142)

இதுபோலவே ஒருவன் மக்களிடம் பிரபலமாக வேண்டும் என்பதற்காக ஒரு நற்செயலைச் செய்தால் அவன் ஷிர்க்கில் வீழ்வான். இப்படிச் செய்பவனுக்கு நபிமொழியில் எச்சரிக்கை வந்துள்ளது. நபி (ஸல்) கூறினார்கள்: 'மக்கள் கேட்க வேண்டும் என்பதற்காக ஒருவன் ஒரு செயலைச் செய்தால் அல்லாஹ் அதனை (அவர்கள்) கேட்கும்படிச் செய்து விடுவான். மாக்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக ஒருவன் ஒரு செயலைச் செய்தால் அல்லாஹ் அதனை (அவர்கள்) பார்க்கும்படிச் செய்திடுவான். (மறுமையில் அதற்கு கூலி கிடைக்காது'
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: முஸ்லிம்

அல்லாஹ்வையும் மக்களையும் நாடி ஒருவன் ஒரு செயலைச் செய்தால் அவனது செயல் அழிந்து விடும். ஹதீஸ் குத்ஸியில் வந்துள்ளதாவது: 'இணையாளர்களின் இணைவைப்பை விட்டும் நான் தேவையற்றவன். என்னுடன் மற்றவர்களை இணையாக்கி ஒருவன் ஒரு செயலைச் செய்தால் (அதற்காக கூலி ஏதும் வழங்காமல்) அவனையும் அவனது இணைவைப்புச் செயலையும் நான் விட்டு விடுவேன் என அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்'
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்

ஒருவன் அல்லாஹ்வுக்காக என தூய எண்ணத்துடன் ஒரு செயலைச் செய்ய ஆரம்பிக்கிறான். பிறகு திடீரென அவனுள் முகஸ்துதி தோன்றி விடுகிறது எனில் அவன் அந்த முகஸ்துதியை வெறுத்து அது நீங்க கடுமையாகப் போராடினால் அவனது செயல் சரியானதாக ஆகிவிடும். ஆனால் அவனுள் ஏற்பட்ட அந்த முகஸ்துதியை அவன் திருப்தி கொண்டால் அதிலே அவனது உள்ளம் சாந்தியடைந்தால் பெரும்பாலான அறிஞர்களின் கூற்றுப்படி அவனுடைய செயல் வீணாகி விடும்.

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.

Sunday, January 15, 2006

வீணான நம்பிக்கைகள்

அல்லாஹ் பலனை ஏற்படுத்தாத பொருட்களில் பலன் இருப்பதாக நம்புதல்

இதுவும் ஷிர்க்காகும். உதாரணமாக சிலர் ஜோதிடர் அல்லது சூனியக்காரனின் ஆலோசனையின் பேரில் அல்லது முன்னோர்களின் வழக்கத்தின் அடிப்படையில் கயிறு, உலோக வளையம், சிப்பி, தாயத்து, தகடு போன்றவற்றில் பலன் இருப்பதாக நம்புகிறார்கள். அதனால் கண் திருஷ்டிக்காகவும், துன்பம் நீங்குவதற்காகவும் அது வராமல் தடுப்பதற்காகவும் அவற்றை தங்களுடைய மற்றும் தங்கள் குழந்தகளுடைய கழுத்துக்களிலோ அல்லது உடலில் வேறு எங்கேனும் கட்டிக் கொள்கிறார்கள். அல்லது தங்கள் வீடுகளில், வாகனங்களில் மாட்டிக் கொள்கிறார்கள். மேலும் இதே நோக்கத்திற்காக பல வகையான கற்கள் பதித்த மோதிரங்களையும் அணிகிறார்கள். இவையனைத்தும் சந்தேகமில்லாமல் அல்லாஹ்வின் மீது தவக்குல் - நம்பிக்கை வைப்பதற்கு எதிரானவையாகும். இவை மனிதனுக்கு பலவீனத்தையே அதிகப்படுத்தும். மட்டுமல்ல ஹராமானவற்றைக் கொண்டு மருத்துவம் செய்வதைச் சார்ந்தவையாகும் இவை.

இத்தகைய தாயத்து, தகடுகளில் பெரும்பாலானவற்றில் வெளிப்படையான ஷிர்க்கான வாசகங்களும் சில ஜின், ஷைத்தான்களிடம் பாதுகாப்புத் தேடும்படியான வாசகங்களுமே உள்ளன. அல்லது புரியாத வரைபடங்கள் அல்லது விளங்க முடியாத எழுத்துக்களே இருக்கின்றன. ஓதிப்பார்க்கின்ற சிலர் தாயத்து தகடுகளில் குர்ஆன் வசனங்களோடு ஷிர்க்கான வாசகங்களையும் சேர்த்து எழுதுகின்றனர். இன்னும் சிலரோ திருக்குர்ஆன் வசனங்களை சிறுநீர், மாதவிடாய் இரத்தம் போன்ற அசுத்தங்களின் மூலம் எழுதுகின்றனர். ஆக மேற்குறிப்பிட்ட அனைத்தையும் தொங்க விட்டுக் கொள்வது அல்லது கட்டிக் கொள்வது ஹராமாகும். 'யார் தாயத்தைக் கட்டித் தொங்க விட்டுக் கொள்கிறாரோ திண்ணமாக அவர் இணைவைத்து விட்டார்' என்பது நபிமொழி. அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி), நூல்: அஹ்மத்.

இவ்வாறு செய்பவன் - அல்லாஹ்வை விடுத்து இந்த தாயத்து தகடுகளும் நன்மை, தீமை அளிக்கக் கூடியவை என நம்பினால் அவன் இணை வைத்தவன் ஆவான். மிகப் பெரும் ஷிர்க்கைச் செய்து விட்டவனாவான். நன்மை, தீமை அளிப்பதற்கு இவையும் ஒரு காரணம் என நம்பினால் (அல்லாஹ் அப்படி ஏற்படுத்தவில்லை என்பது தனி விஷயம்) அவன் சிறிய இணைவைப்பைச் செய்து விட்டவனாவான். இது காரண காரியங்களில் இணை வைத்தல் என்பதில் அடங்கும்.

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.

Monday, January 09, 2006

நட்சத்திரங்களின் மீது நம்பிக்கை வைத்தல்

அதாவது சம்பவங்களிலும் மனிதர்களின் வாழ்விலும் நட்சத்திரங்களின் தாக்கம் இருப்பதாக நம்புவது. இதுவும் ஷிர்க்காகும்.

ஸைத் பின் ஹாலித் (ரலி) அறிவிப்பதாவது: 'ஹுதைபிய்யா எனும் இடத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு சுப்ஹு தொழுகை நடத்தினார்கள். இரவு மழை பெய்திருந்தது. தொழுது முடித்ததும் மக்களை முன்னோக்கி, உங்கள் இறைவன் என்ன கூறினான் தெரியுமா? என வினவினார்கள். அதற்கு, அல்லாஹ்வும் அவன் தூதருமே நன்கறிந்தவர்கள்! என தோழர்கள் கூறினர். பிறகு, 'என்னுடைய அடியார்களில் என்னை நம்புபவர்களும் என்னை மறுப்பவர்களும் இருக்கின்றார்கள். அல்லாஹ்வின் அருளாலும் அவனுடைய கருணையாலும் தான் எங்களுக்கு மழை பொழிந்தது எனக் கூறியவர் என்னை நம்பியவரும் நட்சத்திரத்தை நிராகரித்தவரும் ஆவார். இன்னின்ன நட்சத்திரங்களால் தான் எங்களுக்கு மழை பொழிந்தது எனக் கூறியவர் என்னை நிராகரித்தவரும் நட்சத்திரத்தை ஏற்றுக் கொண்டவரும் ஆவார்' என இறைவன் கூறினான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

பத்திரிக்கைகளில் வரக்கூடிய ராசிபலன்களில் நம்பிக்கை வைப்பதும் இந்த வகையைச் சேர்ந்தது தான். அதிலுள்ள நட்சத்திர மற்றும் வானசாஸ்திரங்களை ஒருவன் நம்பினால் அவனும் இணை வைத்தவனாவான். ராசிபலனை ஒருவன் ஆறுதலுக்காகப் படித்தால், அவன் பாவியாவான். ஏனெனில் ஷிர்க்கான விஷயங்களைப் படித்து ஆறுதலடைவது கூடாததாகும். இன்னும் சொல்வதானால் சில வேளை ஷைத்தான் அவனுடைய உள்ளத்தில் ராசிபலனைப் பற்றிய நம்பிக்கையை விதைத்து விடுவான். பிறகு அது ஷிர்க்கில் வீழ்வதற்கு சாதனமாக அமைந்து விடும்.

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.

Wednesday, January 04, 2006

சூனியம், ஜோதிடம், குறி பார்த்தல்

பரவலாகக் காணப்படக்கூடிய ஷிர்க்கின் வகைகளில் சூனியம், ஜோதிடம், குறிபார்த்தல் ஆகியவையும் அடங்கும்.

சூனியம் செய்வது குஃப்ர் எனும் இறை நிராகரிப்பாகும். நாசத்தைத் தரக்கூடிய ஏழு பெரும் பாவங்களில் ஒன்றாகும். அதில் தீமை இருக்கிறதே தவிர நன்மையில்லை. சூனியத்தைக் கற்றுக் கொள்வதைப் பற்றி அல்லாஹ் கூறுகிறான்: "(உண்மையில்) தங்களுக்கு தீங்கிழைப்பதையும் எவ்வித நன்மையையும் தராததையுமே கற்றுக் கொண்டார்கள்" (2:102)
மேலும் கூறுகிறான்: "சூனியக்காரன் எங்கு சென்றாலும் (ஒரு போதும்) வெற்றி பெறமாட்டான்" (20:69) சூனியம் பார்க்கச் செல்பவன் காஃபிராவான். அல்லாஹ் கூறுகிறான்: "அவர்கள் சுலைமானுடைய ஆட்சியின் போது ஷைத்தான்கள் ஓதியவற்றையே பின்பற்றினார்கள். ஆனால் சுலைமான் ஒருபோதும் நிராகரிப்பவர் - காஃபிர் அல்லர். ஷைத்தான்கள் தாம் நிராகரிப்பவர்கள். அவர்கள் தாம் மனிதர்களுக்கு சூனியத்தைக் கற்றுக் கொடுத்தார்கள். மேலும் பாபிலோனில் ஹாரூத், மாரூத் என்ற இரு வானவர்களுக்கும் இறக்கி வைக்கப்பட்டதையும் அவர்கள் பின்பற்றினார்கள். ஆனால் அவ்விருவரும் நிச்சயமாக நாங்கள் சோதனையாக இருக்கிறோம். (இதைக் கற்று) நீங்கள் காஃபிர்களாகி விடாதீர்கள் என்று கூறி எச்சரிக்காத வரையில் எவருக்கும் அந்த சூனியத்தைக் கற்றுக் கொடுக்கவில்லை" (2:102)

சூனியக்காரன் பற்றிய சட்ட நிலை, அவனைக் கொலை செய்ய வேண்டும். அவனுடைய சம்பாத்தியம் விலக்கப்பட்டது, மோசமானது என்பதாகும். அறிவீனர்களும் அக்கிரமக்காரர்களும் பலவீனமான ஈமான் உடையவர்களும் சிலரின் மீது வரம்பு மீறுவதற்காக அல்லது அவர்களைப் பழிவாங்குவதற்காக சூனியம் செய்ய சூனியக்காரர்களிடம் செல்கிறார்கள்.

மேலும் மக்களில் இப்படியும் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் சூனியத்தை எடுப்பதற்காக சூனியக்காரர்களிடம் செல்வதன் மூலம் ஹராமான செயலைச் செய்கிறார்கள். இத்தகையவர்கள் மீது கடமை என்னவெனில் அவர்கள் அல்லாஹ்வின் பக்கம் திரும்பி ஸூரத்துல் இக்லாஸ், ஸூரத்துல் ஃபலக், ஸூரத்துந் நாஸ் போன்ற அவனுடைய வார்த்தைகள் மூலம் நிவாரணம் தேட வேண்டும்.

மறைவான விஷயங்களை அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறிய மாட்டார்கள். இப்படியிருக்க ஜோதிடம் பார்ப்பவன், குறி பார்ப்பவன் ஆகிய இருவரும் மறைவான விஷயங்களைத் தாம் அறிவதாக வாதிட்டால் அவ்விருவரும் மகத்துவமிக்க அல்லாஹ்வை நிராகரிப்பவர்களாவர். இவர்களில் பெரும்பாலோர் பணம் பறிப்பதற்காக அப்பாவி மக்களை ஏமாற்றுகின்றனர். இதற்காக அவர்கள் மணலில் கோடு கிழித்துப் பார்ப்பது, சோழி போட்டுப் பார்ப்பது, கைரேகை பார்ப்பது, பீங்கானில் நீர் உற்றி பார்ப்பது, கண்ணாடியில் பார்ப்பது போன்ற பல்வேறு வழிமுறைகளைக் கையாளுகின்றனர்.

இவர்கள் ஒரு உண்மை கூறினால் 99 முறை பொய் கூறுவார்கள். கற்பனைகளை அள்ளி வீசக்கூடிய இவர்கள் கூறுவது எந்த ஒரு தடவை உண்மையாகிறதோ அதை மட்டும் இந்த அப்பாவி மக்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் எதிர்காலத்தை அறிந்து கொள்வதற்காகவும், திருமணம், வியாபாரம் போன்ற காரியங்களில் நன்மை, தீமையை அறிந்து கொள்வதற்காகவும், காணாமல் போன பொருட்களை கண்டு பிடிப்பதற்காகவும் அவர்களிடம் செல்கின்றனர்.

இப்படி எதிர்காலத்தைக் கணித்துச் சொல்பவர்களிடம் சென்று அவர்கள் கூறுவதை ஒருவன் நம்பினால் அவன் காஃபிராவான். இஸ்லாத்தை விட்டும் வெளியேறியவனாவான். ஆதாரம்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்: 'எவன் ஜோதிடம் அல்லது குறிகாரனிடம் சென்று அவன் சொல்வதை நம்புகிறானோ அவன் முஹம்மதுக்கு இறக்கி அருளப்பட்ட(வேதத்)தை நிராகரித்தவன் ஆவான். (அஹ்மத்)

ஆனால் அவர்களிடம் செல்பவன் மறைவானவற்றை அவர்கள் அறிவார்கள் என நம்பாமல் என்ன சொல்கிறார்கள் என்று பரிசோதிப்பதற்காகச் செல்வானாயின் அவன் காஃபிராக மாட்டான். மாறாக அவனது நாற்பது நாட்களின் தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'யார் ஜோசியக்காரனிடம் சென்று எதையேனும் கேட்டால் அவரது நாற்பது நாட்களின் தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது' (முஸ்லிம்).

ஆயினும் அவனுடைய தொழுகை ஏற்றுக் கொள்ளப்படா விட்டாலும் நாற்பது நாட்கள் அவன் தொழுவதும் இப்பாவத்திற்காக தவ்பா செய்வதும் அவன் மீது கடமையாகும்.

இன்ஷா அல்லாஹ் எச்சரிக்கை தொடரும்.