Monday, February 27, 2006

ஒரினப் புணர்ச்சி

லூத் (அலை) அவர்களுடைய சமுதாயத்தினர் செய்து வந்த குற்றம் ஒன்று இருந்தது. அதுதான் ஆணும் ஆணும் புணர்வது. அல்லாஹ் கூறுகிறான்: "மேலும் நாம் லூத்தை அனுப்பினோம். அப்போது அவர் தம் சமூகத்தாரிடம் கூறினார்: 'உங்களுக்கு முன்னால் உலக மக்கள் யாரும் செய்திராத மானக்கேடான செயல்களை நீங்கள் செய்கின்றீர்கள். (மோகம் கொண்டு) ஆண்களிடம் செல்கின்றீர்கள், வழிப்பறி செய்கின்றீர்கள், உங்கள் சபைகளில் வைத்தே தீய செயல்களில் ஈடுபடுகின்றீர்கள்'. அதற்கு அவருடைய சமூகத்தாரின் பதில், 'நீர் உண்மையாளராயின் அல்லாஹ்வின் வேதனையை எங்களுக்குக் கொண்டுவாரும்' என்பதாகவே இருந்தது" (29;28,29)

இந்த இழிவான படுமோசமான குற்றத்துக்காக அதைச் செய்தவர்களை அல்லாஹ் நான்கு வகையான தண்டனைகளைக் கொடுத்துத் தண்டித்தான். வேறெந்த சமூகத்தையும் அல்லாஹ் இப்படித் தண்டித்ததில்லை. அவை: அவர்களின் கண்களைக் குருடாக்கினான். அவர்கள் வசித்த ஊரை தலைகீழாக புரட்டினான். அவர்களின் மீது சுட்ட கற்களை தொடர்ந்து பொழியச் செய்தான். அவர்கள் மீது பேரிடியை விழச் செய்தான்.

(முஹம்மத் (ஸல்) அவர்கள் கொண்டு வந்த) இந்த ஷரீஅத்தின் சரியான கூற்றின்படி வாளால் வெட்டிக் கொல்வதே இக்குற்றத்தைச் செய்த இருவரின் தண்டனையாகும். அவ்விருவரும் சுய விருப்பத்தின்படி அதைச் செய்திருந்தால். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'லூத் (அலை) சமுதாயத்தினர் செய்த செயலை செய்யக் கூடியவர்களை நீங்கள் கண்டால் செய்தவனையும் செய்யப்பட்டவனையும் கொன்று விடுங்கள்'அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: அஹ்மத்

இது போன்ற மானக்கேடான செயல்களால் நம் முன்னோர்களின் காலத்தில் இல்லாத உயிர்க்கொல்லி நோயான எய்ட்ஸ் போன்ற பல்வேறு தொற்று நோய்கள் இன்றைய காலத்தில் பரவி வருவதைப் பார்க்கும் போது இக்குற்றத்துக்கு இத்தகைய தண்டனை விதித்திருப்பதில் இறைவனுடைய நுட்பம் நமக்குத் தெரிய வருகிறது.

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.

Wednesday, February 22, 2006

விபச்சாரம்

மனிதனின் கண்ணியம், மானம் மரியாதையையும், அவனது சந்ததிகளையும் பாதுகாப்பது ஷரீஅத்தின் - இறைமார்க்கத்தின் நோக்கங்களில் ஒன்றாக இருப்பதால் இறைமார்க்கத்தில் விபச்சாரத்திற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அல்லாஹ் கூறுகிறான்: "மேலும் விபச்சாரத்தின் பக்கமே நெருங்காதீர்கள்! திண்ணமாக அது மானங்கெட்ட செயலாகவும், தீய வழியாகவும் இருக்கின்றது" (7:32) இன்னும் சொல்வதானால் பெண்கள் கட்டாயம் பர்தா அணிய வேண்டும், ஆண், பெண் இருபாலாரும் தம் பார்வையைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும், பெண்கள் அந்நிய ஆண்களுடன் தனித்திருக்கக் கூடாது என்றெல்லாம் கட்டளை பிறப்பித்து விபச்சாரத்தின் பால் இட்டுச் செல்லக்கூடிய அனைத்து வழிகளையும் ஷரீஅத் அடைத்து விட்டது.

திருமணமானவர் (ஆணோ, பெண்ணோ) விபச்சாரம் செய்தால் கடுமையாக தண்டிக்கப்படுவார். அவருக்குரிய தண்டனை மரணிக்கும் வரை அவர் மீது கல்லெரிய வேண்டும். இது, அவர் செய்த தீய செயலின் விளைவை அவர் சுவைப்பதற்காகவும் அவருடைய உடலிலுள்ள ஒவ்வொரு உறுப்பும் விபச்சாரக் குற்றத்தைச் செய்யும் போது இன்பத்தை அனுபவித்தது போல இப்போது வேதனையை அனுபவிப்பதற்காகவும் ஆகும். திருமணமாகாதவர் அதாவது முறையாகத் திருமணம் செய்து இல்லறத்தில் ஈடுபடாதவர் விபச்சாரம் செய்தால் அவருக்கு அதிக அளவு கசையடி கொடுக்க வேண்டும். ஷரீஅத்துடைய குற்றவியல் சட்டத்தில் நூறு கசையடிகள் என்று வந்துள்ளது. மட்டுமல்ல குற்றவாளிக்கு அவமானமும் (மற்றவர்களுக்கு படிப்பினையும்) ஏற்படும் வகையில் முஃமின்களின் ஒரு கூட்டத்துக்கு மத்தியில் அத்தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும். மேலும் முழுமையாக ஒரு வருடத்திற்கு அவரை நாடு கடத்தி இழிவை ஏற்படுத்த வேண்டும்.

விபச்சாரம் செய்தவர்களுக்கு கப்றில் வேதனையாவது, அவர்கள் ஒரு அடுப்பில் நிர்வாணமாகக் கிடப்பார்கள். அதன் மேல்புறம் குறுகலாகவும் கீழ்ப்புறம் விசாலமாகவும் இருக்கும். கீழிருந்து நெருப்பு மூட்டப்படும். அப்போது அவர்கள் ஓலமிடுவர். மேலே வந்து அதனை விட்டும் வெளியேற எத்தனிப்பர். பிறகு நெருப்பு அணைக்கப்படும் போது அவர்கள் உள்ளே திருமிபி விடுவர். இவ்வாறு கியாம நாள் வரை செய்யப்படும்.

வயது கடந்து மண்ணறையைச் சந்திக்கும் நேரம் நெருங்கி விட்ட ஒரு மனிதர் - இது நாள் வரையில் அல்லாஹ் அவருக்கு (திருந்துவதற்கான) அவகாசம் அளித்திருந்தும் - தொடர்ந்து விபச்சாரம் செய்து வந்தால் விவகாரம் இன்னும் மோசமாகும். அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்: 'மூவரிடம் அல்லாஹ் மறுமையில் பேச மாட்டான், அவர்களை (பாவங்களிலிருந்து) பரிசுத்தப்படுத்தவும் மாட்டான், அவர்களுக்கு துன்பமிகு வேதனை இருக்கிறது. அவர்கள், வயது கடந்தும் விபச்சாரம் செய்தவர், மகாப் பொய்யனாக உள்ள அரசன், ஆணவம் கொண்ட ஏழை ஆகியோராவர் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்' (முஸ்லிம்)

விபச்சாரம் செய்து சம்பாதிப்பது சம்பாத்தியங்களில் தீய சம்பாத்தியமாகும். தனது மானத்தை விற்று சம்பாத்தியம் செய்யும் ஒரு விபச்சாரி - ஹதீஸில் வந்துள்ளது போல - பாதி இரவு கழிந்ததும் வானத்தின் வாயில்கள் திறக்கப்படுகின்ற சமயத்தில் பிரார்த்தனை அங்கீகரிக்கப்படும் பாக்கியத்தை விட்டும் தடுக்கப்பட்டவளாவாள். அல்லாஹ்வின் வரம்புகளை மீறுவதற்கு தேவையும், வறுமையும் பொதுவாக மார்க்கம் அனுமதிக்கின்ற காரணமாக அமையாது. பட்டினி கிடந்தாலும் படி தாண்ட மாட்டாள் பத்தினி என்பது பழமொழி.

தற்காலத்தில் ஆபாசத்தினுடைய அனைத்து வாயில்களும் திறக்கப்பட்டு விட்டன. அதற்கான வழியை ஷைத்தான் தன்னுடைய சூழ்ச்சியாலும் தன் நண்பர்களுடைய சூழ்ச்சியாலும் எளிதாக்கி விட்டான். பாவிகளும், தீயவர்களும் அவனைப் பின்பற்றலானார்கள். அதனால் பெண்கள் தங்கள் அழகு, அலங்காரங்களை வெளிக்காட்டுவது அதிகமாகி விட்டது. ஆபாசங்களும், அந்நியப் பெண்களைப் பார்த்தலும், ஆண்களும் பெண்களும் இரண்டறக் கலந்து விடுதலும் பரவலாகி விட்டன. மஞ்சள் பத்திரிக்கைகளும், நீலப்படங்களும் பரவி விட்டன. தீமைகள் நிறைந்த, கட்டுப்பாடற்ற நாடுகளுக்கு பயணமாவது அதிகரித்து விட்டது. விபச்சார விடுதிகளும், பாலியல் பலாத்காரங்களும், கற்பழிப்புகளும் பெருகி விட்டன. கருக்கலைப்புகளும் தவறான வழியில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகமாகி விட்டன.

இறைவா! உனது அருளையும் அன்பையும் மன்னிப்பையும் உன் புறத்திலிருந்து பாதுகாப்பையும் உன்னிடம் வேண்டுகிறோம். அதன் மூலம் ஆபாசங்கள் மற்றும் மானக்கேடானவற்றை விட்டும் எங்களைப் பாதுகாப்பாயாக! மேலும் எங்கள் உள்ளங்களைத் தூய்மைப்படுத்தி, எங்கள் கற்புகளைக் காத்திடவும் விலக்கப் பட்டவைகளுக்கும் எங்களுக்கும் மத்தியில் ஒரு திரையை ஏற்படுத்தவும் வேண்டுகிறோம்.
எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.

Saturday, February 18, 2006

வெங்காயம், பூண்டு!

வெங்காயம், பூண்டு சாப்பிட்டதோடு பள்ளிக்கு வருதல்
அல்லாஹ் கூறுகிறான்: "ஆதத்தின் மக்களே! ஒவ்வொரு தொழுகையின் போதும் உங்களை அலங்கரித்துக் கொள்ளுங்கள்" (7:31) 'பூண்டையோ வெங்காயத்தையோ உண்டவர் நம்மை விட்டும் அல்லது நம் பள்ளியை விட்டும் விலகியிருக்கட்டும். தனது வீட்டில் உட்கார்ந்து கொள்ளட்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்'
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: புகாரி)
ஜாபிர் (ரலி) மேலும் அறிவிப்பதாவது: 'வெங்காயம், வெள்ளைப்பூண்டு மற்றும் வெறுக்கத்தக்க வாடையுடைய செடியைச் சாப்பிட்டவர் நம் பள்ளியின் பக்கம் நெருங்கவே வேண்டாம். மனிதர்கள் எதன் மூலம் தொல்லை அடைகிறார்களோ அதன் மூலம் மலக்குகளும் தொல்லை அடைகின்றனர் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்' (முஸ்லிம்)

ஒரு முறை ஜும்ஆ நாளில் உமர் (ரலி) அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். தமது உரையில் இவ்வாறு கூறினார்கள்: 'மக்களே! நீங்கள் இரண்டு செடிகளை உண்கிறீர்கள். அவ்விரண்டையும் கெட்ட வாடையுடையதாகவே நான் கருதுகிறேன். அவை வெங்காயம், வெள்ளைப் பூண்டு. நான் நபி (ஸல்) அவர்களைப் பார்த்திருக்கிறேன், பள்ளியில் ஒருவரிடம் அதன் வாடையை உணர்ந்தால், அவரை வெளியேற்றும்படி உத்தரவிடுவார்கள். பிறகு பகீஃ எனுமிடத்திற்கு அவர் வெளியேற்றப்படுவார். எனவே யாரேனும் அதைச் சாப்பிட விரும்பினால் நன்கு சமைத்துச் சாப்பிடட்டும்'
அறிவிப்பவர்: மிதான் பின் அபீதல்ஹா (ரலி) நூல்: முஸ்லிம்

சிலர் தம் வேலைகளை முடித்துக் கொண்டு அப்படியே பள்ளிக்கு வந்து விடுகின்றனர். அவர்களின் அக்குள்களிலிருந்தும், காலுறைகளிலிருந்து வெறுக்கத்தக்க வாடை வெளியேறுகிறது. இதுவும் கூடாததாகும். இதைவிடவும் மோசமானது என்னவென்றால் பீடி, சிகரெட் குடிப்பவர்கள் அதைக் குடித்து விட்டு பள்ளிக்கு வருகின்றனர். அதன் மூலம் மலக்குகளுக்கும் தொழுகின்றவர்களுக்கும் தொல்லை தருகின்றனர்.
எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.

Tuesday, February 14, 2006

வேண்டுமென்றே இமாமை முந்துவது

மனிதன் இயல்பாகவே அவசரப்படக் கூடியவனாக இருக்கிறான். "மனிதன் பெரிதும் அவசரக்காரனாக இருக்கிறான்" என்று அல்லாஹ் கூறுகிறான். (17:11) நிதானம் அல்லாஹ்வின் புறத்திலிருந்து ஏற்படுகின்றது. அவசரம் ஷைத்தானின் புறத்திலிருந்து ஏற்படுகின்றது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி), நூல்: பைஹகீ

ஒருவன் ஜமாஅத்துடன் தொழும் போது தனது வலது பக்கமோ அல்லது இடது பக்கமோ தொழுகின்ற பெரும்பாலோர் ருகூவிலும், சுஜூதிலும், பொதுவாக ஒவ்வொரு தக்பீரிலும் ஏன் ஸலாம் கொடுப்பது உட்பட எல்லா நிலைகளிலும் பெரும்பாலும் இமாமை முந்துவதைக் கவனிக்கலாம். ஏன் சில சமயம் அவன் கூட இதற்கு விதிவிலக்காக இருக்க முடியாது. பெரும்பாலோரிடம் சாதாரணமாகத் தோன்றக்கூடிய இத்தகைய செயல் குறித்து நபி (ஸல்) அவர்கள் மூலமாக கடுமையான எச்சரிக்கை வந்துள்ளது. அவர்கள் கூறினார்கள்: 'இமாமுக்கு முன் தலையை உயர்த்துபவர், தமது தலையை கழுதையின் தலையாக அல்லாஹ் மாற்றி விடுவான் என்பதை அஞ்ச வேண்டாமா?' அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), முஸ்லிம். தொழுகையாளி தொழுகைக்கு வரும்போதே அமைதியாகவும் கம்பீரமாகவும் வர வேண்டும் என்ற கட்டளை இருக்கும் போது தொழுகையில் எவ்வாறு இப்படி நடந்து கொள்ள முடியும்?

சிலர், இமாமை பிந்துவது ஒரு வகையில் இமாமை முந்துவதைப் போல எண்ணிக் கொள்கின்றனர். எனவே ஒரு விஷயத்தை நாம் அறிந்து கொள்ள வேண்டும். பிக்ஹ் கலை அறிஞர்கள் இது விஷயத்தில் அழகான ஒரு அடிப்படையைக் கூறி இருக்கிறார்கள். என்னவெனில் இமாம் அல்லாஹ் அக்பர் என்று கூறி முடித்தவுடன் மஃமூம்கள் பின் தொடர ஆரம்பிக்க வேண்டும். அதற்கு முந்தவும் கூடாது. பிந்தவும் கூடாது. இதுவே சிறந்ததாகும். நபித்தோழர்கள் தம் தொழுகையில் நபி (ஸல்) அவர்களை முந்தாமலிருப்பதற்கு மிகுந்த அக்கறை எடுத்துக் கொள்வார்கள்.

பர்ராஉ பின் ஆஸிப் (ரலி) கூறுகிறார்கள்: 'நபித்தோழர்கள் நபி (ஸல்) அவர்களின் பின்னால் நின்று தொழுவார்கள். அவர்கள் ருகூவிலிருந்து தமது தலையை உயர்த்தி பிறகு தமது நெற்றியை நிலத்தில் வைக்காத வரை யாரும் (ஸஜ்தாவுக்காக) தமது முதுகை வளைப்பதை நான் பார்த்ததில்லை. அதன் பிறகே பின்னால் உள்ள அனைவரும் ஸஜ்தாவில் வீழ்வார்கள்' (முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் முதுமையை அடைந்த போது, தமது அசைவுகளில் ஒரு விதத் தாமதம் ஏற்பட்ட போது தம் பின்னால் தொழக் கூடியவர்களுக்கு இப்படி உணர்த்துவார்கள்: 'மக்களே! எனக்கு வயதாகி விட்டது. ருகூவிலும் சுஜூதிலும் என்னை முந்தாதீர்கள்' முஆவியா பின் அபீ சுஃப்யான் அறிவிக்கக்கூடிய இச்செய்தி பைஹகீயில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இக்கருத்து அபூதாவூதிலும் உள்ளது.

இமாம் தொழுகை நடத்தும் போது தக்பீர் கூறுவதில் நபி வழிப்படி நடக்க வேண்டும். அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கும் நபிமொழியில் இவ்வாறு வந்துள்ளது: 'அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகைக்காக நின்றால் தக்பீர் கூறுவார்கள். பிறகு ருகூவு செய்யும் போது தக்பீர் கூறுவார்கள்... பிறகு (ஸஜ்தாவுக்காக) குனியும் போது தக்பீர் சொல்வார்கள். பிறகு (ஸஜ்தாவிலிருந்து) தமது தலையை உயர்த்தும் போது தக்பீர் சொல்வார்கள். பிறகு (மீண்டும்) ஸஜ்தா செய்யும் போது தக்பீர் கூறுவார்கள். பிறகு (ஸஜ்தாவிலிருந்து) தமது தலையை உயர்த்தும் போது தக்பீர் சொல்வார்கள். பிறகு இவ்வாறே தொழுது முடிக்கும் வரை அனைத்து ரக்அத்துகளிலும் நடந்து கொள்வார்கள். அதுபோல இரண்டாம் ரக்அத்தில் (அத்தஹிய்யாத்தில்) அமர்ந்த பிறகு (மூன்றாம் ரக்அத்துக்காக) எழும்போதும் தக்பீர் கூறுவார்கள்' (புகாரி)

இமாம் தமது அசைவுகளுடன் தக்பீரையும் அமைத்துக் கொண்டால் மஃமூம்களும் முன்பு கூறப்பட்ட முறை பிரகாரம் இமாமை அக்கறையோடு பின்பற்றினால் ஜமாஅத்துடைய ஒழுங்கு அனைவருக்கும் நிறைவேறிவிடும்.

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.

Sunday, February 12, 2006

தொழுகை!

தொழுகையில் வீணான காரியங்களும் அதிகப்படியான அசைவுகளும்
இவை எப்படிப்பட்ட ஆபத்து எனில் தொழுகையாளிகளில் பலர் இவற்றிலிருந்து விடுபட முனைவதில்லை. காரணம் அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைகளைப் பேணுவதில்லை.

அல்லாஹ் கூறுகிறான்: "அல்லாஹ்வின் திரு முன் உள்ளச்சத்தோடு நில்லுங்கள்" (2:238)

மேலும் கூறுகிறான்: "திண்ணமாக இறைநம்பிக்கையாளர்கள் வெற்றி பெற்று விட்டனர். அவர்கள் எத்தகையவர்கள் எனில் தங்களின் தொழுகையில் பயபக்தியை மேற்கொள்கின்றார்கள்" (23:1,2)

தொழுகையில் சுஜூத் செய்யும் போது சுஜூத் செய்யுமிடத்தில் மணலை சமப்படுத்துவது குறித்து நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டபோது, 'நீ தொழுது கொண்டிருக்கும் போது மணலை சமப்படுத்தாதே! அவ்வாறு செய்துதான் ஆக வேண்டுமென்றால் பொடிப் பொடிக் கற்களை சமப்படுத்துவதற்காக ஒரு முறை செய்து கொள்' எனக் கூறினார்கள்.
அறிவிப்பவர்: முஅய்கீப் (ரலி) நூல்: அபூதாவூத்

தொழுகையில் அதிகமான அசைவுகள் தேவையில்லாமல் தொடர்ந்து நடைபெறுவது தொழுகையை வீணாக்கி விடும் என கல்வியாளர்கள் கூறுகிறார்கள். அவ்வாறாயின் அல்லாஹ்வின் திருமுன் நின்று கொண்டு வீணான காரியங்களைச் செய்பவர்களின் நிலை என்ன? அல்லாஹ்வின் திருமுன் நின்று கொண்டு அவர்கள் தம் கடிகாரத்தைப் பார்க்கின்றார்கள், ஆடையைச் சரி செய்கிறார்கள், விரலை மூக்கில் விடுகிறார்கள், இடது புறமும், வலது புறமும், மேல் நோக்கியும் பார்க்கிறார்கள், தம் பார்வை பறிக்கப்பட்டு விடும் என்றோ, தம் தொழுகையை விட்டும் ஷைத்தான் திசை திருப்பி விடுவான் என்றோ அவர்கள் அஞ்சுவதில்லை.

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.

Thursday, February 09, 2006

தொழுகையில் அமைதியின்மை

'திருட்டுக் குற்றங்களில் மிகப் பெரும் குற்றம் தொழுகையில் திருடுவதாகும். திருடர்களில் மோசமான திருடன் தொழுகையில் திருடுபவனே! என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதும் அல்லாஹ்வின் தூதரே! தொழுகையில் ஒருவன் எப்படித் திருடுவான்? எனத் தோழர்கள் வினவினர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அவன் தொழுகையில் ருகூவையும் சுஜூதையும் முழுமையாகச் செய்ய மாட்டான் எனக் கூறினார்கள்' அறிவிப்பவர்:அப்துல்லாஹ் அபீகதாதா (ரலி) நூல்: அஹ்மத்

தொழுகையில் அமைதியை விட்டு விடுவது, ருகூவில் - சுஜூதில் முதுகை நேராக வைக்காமலிருப்பது, ருகூவிலிருந்து நிமிர்ந்த பிறகு முதுகை நேராகக் கொண்டு வராதது, இரண்டி ஸஜ்தாவுக்கு மத்தியிலுள்ள அமர்வில் முதுகை நேராக வைக்காமலிருப்பது ஆகியவை பெரும்பாலான தொழுகையாளிகளிடம் வெளிப்படையாகக் காணப்படுகின்றன. தங்கள் தொழுகையில் அமைதியைக் கடைபிடிக்காத இத்தகையவர்கள் இல்லாத பள்ளிகளே கிடையாது எனலாம். அமைதியைக் கடைபிடிப்பது தொழுகையின் முதல் நிலைக் கடமையாகும். இதல்லாமல் தொழுகை நிறைவேறாது. இந்த விஷயம் ஆபத்தானதாகும். 'ருகூவிலும், சுஜூதிலும் தமது முதுகை நேராக வைக்காதவரை ஒருவரது தொழுகை நிறைவேறாது' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூமஸ்வூத் (ரலி), (அபூதாவூத்)

எனவே இது தீய செயலாகும். இதைச் செய்பவர் எச்சரிக்கைக்கும் கண்டனத்திற்கும் உரியவர் என்பதில் ஐயமில்லை. அபூஅப்துல்லாஹ் அல்அஷ்அரி (ரலி) அறிவிக்கிறார்கள்: 'நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களுக்குத் தொழுகை நடத்தி விட்டு அவர்களில் ஒரு குழுவினருடன் அமர்ந்திருந்தனர். ஒரு மனிதர் வந்து தொழுதார். ருகூவு செய்யலானார். சுஜூதில் காக்கை கொத்துவது போல அவசர அவசரமாகச் செய்தார். உடனே நபி (ஸல்) அவர்கள், இவரைப் பார்த்தீர்களா? (அவசர அவசரமாகத் தொழுகின்ற) இந்த நிலையில் யார் மரணிக்கின்றாரோ அவர் முஹம்மதுடைய மார்க்கத்தில் மரணிக்க மாட்டார். இவர் காக்கை இரத்தத்தைக் கொத்துவது போல அவசர அவசரமாகத் தொழுகிறார். ருகூவையும் சுஜூதையும் காக்கை கொத்துவது போல அவசர அவசரமாகச் செய்பவருக்கு உதாரணம் பசித்தவனுக்கு ஒத்திருக்கிறது. அவன் ஒன்றிரண்டு பேரித்தம் பழங்களை (அவசர கோலத்தில்) உண்ணுகிறான். அது அவனுக்கு என்ன பலனைத் தரப் போகிறது?' எனக் கூறினார்கள். (இப்னு குஸைமா)

ருகூவையும் சுஜூதையும் பரிபூரணமாகச் செய்யாத ஒருவரைக் கண்ட ஹுதைஃபா (ரலி) அவர்கள், 'நீ (முறையாகத்) தொழவில்லை. இந்நிலையில் நீ மரணித்து விட்டால் முஹம்மத் (ஸல்) அவர்களை எந்த இயற்கை மார்க்கத்தில் அல்லாஹ் படைத்தானோ அந்த இயற்கை மார்க்கத்தில் நீ மரணிக்க மாட்டாய்' எனக் கூறியதாக ஸைத் பின் வஹ்ப் (ரஹ்) கூறினார்கள். (புகாரி)

எனவே தொழுகையில் அமைதியை விட்டு விட்டவர் அதன் சட்ட நிலையை அறிந்து கொண்டால் அந்த தொழுகையின் நேரம் கடந்துவிட வில்லையெனில் அதைத் திருப்பித் தொழுவது அவசியமாகும். காலம் கடந்து விட்ட தொழுகைகளுக்காக (அவற்றை திருப்பித் தொழ முடியாதமைக்காக) அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடிக் கொள்ளட்டும். அவற்றைத் திருப்பித் தொழ வேண்டிய அவசியமில்லை. பின்வரும் ஹதீஸ் இதை உணர்த்துகிறது: 'தொழுகையில் அமைதி நிலையைப் பேணாத ஒருவரைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், 'நீர் சென்று திருப்பித் தொழும். திண்ணமாக நீர் தொழவில்லை' எனக் கூறினார்கள். (சுருக்கம் - முஸ்லிம்)

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.

Friday, February 03, 2006

தீயவர்களிடம் அமர்தல்

நயவஞ்சகர்கள், தீயவர்களிடம் அமர்தல்
அதாவது நயவஞ்சகர்கள் மற்றும் தீயவர்களிடம் என்பது மகிழ்வுடன் அல்லது அவர்களுக்கு மகிழ்வூட்டுவதற்காகவாகும்.

உறுதியான ஈமான் இல்லாத பெரும்பாலோர் கெட்டவர்களுடன், தீயவர்களுடன் அமர்ந்து கலந்துறவாட விரும்புகிறார்கள். ஏன் அல்லாஹ்வின் மார்க்கத்தையும் அதைப் பின்பற்றி நடக்கக் கூடியவர்களையும் குறை கூறக்கூடியவர்களுடனும், கேலி செய்யக் கூடியவர்களுடனும் கலந்துறவாடுகின்றனர். இத்தகைய செயல் சந்தேகமில்லாமல் விலக்கப்பட்டதும் ஈமானை மாசுபடுத்தக்கூடியது ஆகும்.

அல்லாஹ் கூறுகிறான்: "(நபியே!) நம் வசனங்கள் பற்றிக் குறை கூறிக் கொண்டிருப்போரை நீர் கண்டால் அவர்கள் அதனை விட்டு வேறு பேச்சில் ஈடுபடும் வரை நீர் அவர்களை விட்டும் ஒதுங்கி விடும். மேலும் எப்பொழுதேனும் ஷைத்தான் உம்மை மறதியில் ஆழ்த்தி விட்டால் அத்தவறை உணர்ந்து கொண்ட பிறகு அக்கிரமம் செய்யும் இக்கூட்டத்தாரோடு நீர் உட்காராதீர்" (6:68)

இந்நிலையில் அவர்களுடன் அமர்வது கூடாது. அவர்கள் நெருங்கிய உறவினர்களாக இருந்தாலும் சரியே. அல்லது அவர்களுடைய பழக்கவழக்கங்கள் மென்மையாகவும் பேச்சுகள் இனிமையாகவும் இருந்தாலும் சரியே. ஆனால் அவர்களை சரியான மார்க்கத்தின் பால் அழைக்கவும் அவர்களின் தவறான கொள்கைக்கு மறுப்புக் கொடுக்கவும் எவர்கள் விரும்புகிறார்களோ அவர்களைத் தவிர. அத்தகையவர்கள் அவர்களுடன் அமர்வது கூடும். ஆயினும் அப்படி அவர்களுடன் அமர்ந்து அவர்களுடைய போக்கை விரும்புவதோ அல்லது வாய் மூடி மௌனமாக இருப்பதோ கூடாததாகும். அல்லாஹ் கூறுகிறான்: "நீங்கள் அவர்கள் மீது திருப்திக் கொண்டாலும் அல்லாஹ் பாவிகளான இத்தகைய மக்கள் மீது (ஒரு போதும்) திருப்தி கொள்ளமாட்டான்" (9:96)
எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.