Thursday, March 30, 2006

மனைவியருக்கிடையில் அநீதமாக நடத்தல்

அல்லாஹ் தனது வேதத்தில் நமக்கு அறிவுறுத்திய விஷயங்களில் மனைவியருக்கிடையே நீதமாக நடந்துக் கொள்ள வேண்டும் என்பதும் ஒன்றாகும். அல்லாஹ் கூறுகிறான்: "நீங்கள் எவ்வளவுதான் விரும்பினாலும் மனைவியரிடையே நேர்மையாக நடந்து கொள்வது சாத்தியமாகாது. ஆனால் (ஒரே மனைவியின் பக்கம்) முற்றிலும் சாய்ந்து மற்றவளை அந்தரத்தில் விடப்பட்டவள் போன்று ஆக்கி விடாதீர்கள். நீங்கள் உங்கள் நடத்தையைச் சீராக்கிக் கொண்டு அல்லாஹ்வுக்கு அஞ்சி வாழ்ந்தால் திண்ணமாக அல்லாஹ் மன்னிப்பு வழங்குபவனாகவும் கருணையுள்ளவனாகவும் இருக்கிறான்" (4:129)

அல்லாஹ் விரும்பும் நீதம் என்பது மனைவியருடன் இரவு தங்குவதில் நீதமாக நடந்து கொள்வதும், உணவு, உடை, உறைவிடம் ஆகியவற்றில் ஒவ்வொருவருக்கும் உரிய உரிமையை வழங்குவதும் ஆகும். நீதம் என்பது என்பு செலுத்துவதில் அல்ல. ஏனெனில் அதில் மனிதன் நீதமாக நடந்து கொள்ள முடியாது.

மக்களில் சிலர் தம்மிடம் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியர் இருக்கும்போது ஒரு மனைவியின் பக்கமே முற்றிலும் சாய்ந்து மற்றவளை கவனிக்காமல் விட்டு விடுகின்றனர். அந்த ஒருத்தியிடம் மட்டும் அதிக இரவுகள் தங்குகின்றனர். அல்லது மற்றவளை விட்டு விட்டு ஒருத்திக்கு மட்டும் செலவு செய்கின்றனர். இது ஹராம் - தடுக்கப்பட்டதாகும். அவர் மறுமையில் எந்த நிலையில் வருவார் என்பதை பின்வரும் நபிமொழி கூறுகிறது. அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'ஒருவருக்கு இரு மனைவியர் இருந்து ஒரு மனைவியின் பக்கம் அவர் (முழுமையாகச்) சாய்ந்து விட்டால் மறுமையில் அவரது ஒரு புஜம் சாய்ந்த நிலையில் வருவார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்' (அபூதாவூத், தாரமி)

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.

Tuesday, March 21, 2006

மலப்பாதையில் உடலுறவு

பலவீனமான ஈமானுடைய ஒரு சிலர் தம் மனைவியின் மலத்துவாரத்தில் உடலுறவு கொள்வதிலிருந்து விலகி பேணுதலாக இருப்பதில்லை. இது பெரும்பாவங்களில் ஒன்றாகும். இவ்வாறு செய்பவரை நபி (ஸல்) அவர்கள் சபித்துள்ளார்கள். அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'பெண்ணின் பின் துவாரத்தில் புணர்பவன் சாபத்திற்குரியவன் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்' (அஹ்மத்)

இன்னும் சொல்வதானால் 'மாதவிடாய் ஏற்பட்ட பெண்ணிடம் அல்லது பெண்ணின் பின் துவாரத்தில் உடலுறவு கொண்டவன், அல்லது குறிகாரனிடம் சென்றவன் முஹம்மதுக்கு இறக்கி அருளப்பட்ட (வேதத்)தை நிராகரித்து விட்டான் எனவும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்' அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: திர்மிதி

நற்சிந்தனையுடைய மனைவியர் சிலர் இதனை மறுத்தாலும் சில கணவன்மார்கள் இதற்கு நீ இணங்கவில்லையெனில் உன்னை விவாகரத்துச் செய்து விடுவேன் என மிரட்டுகின்றனர். இன்னும் சிலரோ இது கூடுமா? கூடாதா? என மார்க்க அறிஞர்களிடம் விளக்கம் கேட்பதற்கு வெட்கப்படக்கூடிய தம் மனைவியரை இது கூடும் என்ற சந்தேகத்தில் ஆழ்த்தி ஏமாற்றி விடுகின்றனர். சிலபோது பின்வரும் குர்ஆன் வசனத்தையும் அவளுக்கு ஆதாரமாகக் காட்டுகின்றனர்.

அல்லாஹ் கூறுகிறான்; "உங்கள் மனைவியர் உங்கள் விளைநிலங்களாவர். உங்கள் விளைநிலங்களுக்கு நீங்கள் விரும்பும் முறையில் செல்லுங்கள்" (2:223). ஆனால் திருக்குர்ஆனுக்கு விளக்கமாக ஹதீஸ்கள் அமைந்திருக்குமென்பது நாம் அறிந்த ஒன்றாகும். கணவன் தன் மனைவியின் பிறப்பு உறுப்பில் அவன் விரும்பும் முறையில் முன்புற வழியாகவோ பின்புற வழியாகவோ உடலுறவு கொள்ளலாம் என்பதை திண்ணமாக நபி (ஸல்) அவர்கள் தெளிவு படுத்தியே உள்ளனர். அப்படியிருக்க பின் துவாரமென்பது பிறப்பு உறுப்பு அல்லவே.

இத்தகைய தீமையின் காரணங்களுள் மற்றொன்று என்னவெனில், தூய்மையான திருமண வாழ்க்கையில் பிரவேசிப்பதற்கு முன் அறியாமைக்காலத்து அருவருக்கத்தக்க தீய நடத்தைகளை அனந்தரப் பழக்கங்களாக பெறுகிறான் மனிதன். மேலும் ஹராமென விலக்கப்பட்ட விநோதமான பாலுணர்வு அனுபவங்களுடன் அல்லது ஆபாசமான படங்களின் தீய காட்சிகளால் நிறைந்த சிந்தனையுடன் வருகிறான். இத்தகைய பாவங்களிலிருந்து பாவமன்னிப்புத் தேடாமலேயே தூய்மையான திருமண வாழ்க்கையில் பிரவேசித்து விடுகிறான்.

ஆக இச்செயல் - கணவன் மனைவி இருவரும் இதனைப் பொருந்திக் கொண்டாலும் - ஹராமானதே என்பது தெளிவு. ஏனெனில் ஒரு ஹராமைப் பொருந்திக் கொள்வது அதை ஹலாலாக மாற்றி விட முடியாது.

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.

Saturday, March 18, 2006

மாதவிடாய்க் காலத்தில் உடலுறவு

"இன்னும் மாதவிடாய்ப் பற்றியும் உம்மிடம் கேட்கிறார்கள். நீர் கூறும்: அது ஓர் தூய்மையற்ற நிலை, ஆகவே மாதவிடாய்க் காலத்தில் பெண்களை விட்டும் விலகி இருங்கள். அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை அணுகாதீர்கள்" (2:222) அவள் தூய்மையடைந்து குளிக்காத வரை அவளிடம் உறவு கொள்வது கூடாது. அல்லாஹ் கூறுகிறான்: "பிறகு அவர்கள் தூய்மையடைந்து விட்டால் அல்லாஹ் உங்களை ஏவிய முறைப்படி அவர்களிடம் செல்லுங்கள்" (2:222)

இது எவ்வளவு பெரிய மோசமான பாவமென்பதை பின்வரும் நபிமொழி உணர்த்துகிறது. 'யாரேனும் மாதவிடாய் ஏற்பட்ட பெண்ணிடம் அல்லது பெண்ணின் பின் துவாரத்தில் உறவு கொண்டால் அல்லது குறிகாரனிடம் சென்றால் முஹம்மதுக்கு இறக்கியருளப்பட்ட (வேதத்)தை அவன் நிராகரித்து விட்டான் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்' அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: திர்மிதி

இதனை ஒருவர் வேண்டுமென்றே அல்லாமல் தவறுதலாக, (அதன் சட்டத்தை) அறியாமல் செய்து விட்டால் அவர் மீது எந்தக் குற்றமுமில்லை. வேண்டுமென்றே (சட்டம்) அறிந்து செய்தால், சில அறிஞர்களின் கூற்றின் பிரகாரம் அவர் பரிகாரம் செய்வது அவசியமாகும். பரிகாரம் பற்றி கூறப்படக்கூடிய ஹதீஸை அவர்கள் சரி காணுகின்றனர். பரிகாரம் என்பது ஒரு தினார் அல்லது பாதி தினார் தர்மம் செய்வதாகும். இந்த ஒரு தினார் அல்லது பாதி தினார் கொடுப்பதிலேயும் அவர்கள் கருத்து வேறுபாடு கொள்கின்றனர்.

சிலர் கூறுகின்றனர்: அவ்விரண்டில் ஒன்றை அவர் தெரிவு செய்து கொள்ளலாம். அதாவது விரும்பினால் ஒரு தினாரோ பாதி தினாரோ கொடுக்கலாம். இன்னும் சிலர் கூறுகின்றனர்: மாதவிடாய் காலத்தின் கடைசி கட்டத்தில் உதிரப்போக்கு மிகவும் குறைந்து விடும்போதோ அல்லது அவள் குளிப்பதற்கு முன்போ அவளிடம் அவர் உறவு கொண்டால் அவர் பாதி தினார் கொடுக்க வேண்டும். உதிரபோக்கு அதிகம் ஏற்படுகின்ற மாதவிடாயின் ஆரம்ப கட்டத்தில் அவளிடம் அவர் உறவு கொண்டால் அவர் ஒரு தினார் கொடுக்க வேண்டும். ஒரு தினார் என்பது மக்களுடைய வழக்கத்தில் உள்ள அளவின்படி 4.25 கிராம் தங்கமாகும். இந்த அளவு தங்கத்தையோ இதன் மதிப்புக்கு ஈடான ரொக்கப் பணத்தையோ அவன் தர்மம் செய்யலாம்.

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.

Monday, March 13, 2006

ழிஹார்

அறியாமைக் காலத்தில் பயன்படுத்தப்பட்ட - இந்த சமுதாயத்திலும் பரவி இருக்கின்ற பல வார்த்தைகளில் ழிஹாரும் ஒன்று. அதாவது ஒரு கணவன் தன் மனைவியிடம் 'நீ எனக்கு என் தாயைப் போன்றவள்', 'நீ எனக்கு என் சகோதரியைப் போன்றவள்' என்பன போன்ற மோசமான வார்த்தைகளைக் கூறுவர். இதற்கு ழிஹார் எனப்படும். பெண்ணுக்கு இதிலே அநீதியிருப்பதால் இறைமார்க்கம் இதை அறுவருப்பாகக் கருதுகிறது. இது பற்றி அல்லாஹ் இவ்வாறு கூறியுள்ளான்:

"உங்களில் எவர்கள் தம் மனைவியரை ழிஹார் செய்கின்றார்களோ அவர்களின் மனைவியர் அவர்களுக்கு அன்னையராகி விட மாட்டார்கள். அவர்களைப் பெற்றெடுத்தவரே அவர்களின் அன்னையராவர். அவர்கள் வெறுக்கத்தக்க பொய்யான சொல்லையே கூறுகின்றனர். திண்ணமாக அல்லாஹ் பெரிதும் பிழை பொறுப்பவனும் மன்னிப்பவனும் ஆவான்" (58:2)

இது விஷயத்தில் இறைமார்க்கம் பரிகாரத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த பரிகாரம், தவறுதலாக ஒருவரைக் கொலை செய்து விட்டால் அதற்கு செய்ய வேண்டிய பரிகாரத்தைப் போல, இன்னும் ரமழான் பகலில் (நோன்பு வைத்துக் கொண்டு) ஒருவர் தம் மனைவியிடம் தாம்பத்தியத்தில் ஈடுபட்டு விட்டால் அதற்குச் செய்ய வேண்டிய பரிகாரத்திற்கு ஒத்த கடுமையான பரிகாரமாகும். ழிஹார் செய்தவர் இந்தப் பரிகாரத்தைச் செய்யாதவரை மனைவியுடன் இல்லறம் நடத்தக் கூடாது.

அல்லாஹ் கூறுகிறான்: "எவர்கள் தம் மனைவியரை ழிஹார் செய்து பின்னர் தாங்கள் கூறிய சொல்லை விட்டும் திரும்பி விடுகின்றார்களோ அவர்கள் - இருவரும் ஒருவரையொருவர் தொடும் முன்பாக அடிமையை விடுதலை செய்ய வேண்டும். இவ்வாறே உங்களுக்கு அறிவுரை கூறப்படுகிறது. மேலும் நீங்கள் எவற்றைச் செய்கின்றீர்களோ அவற்றை அல்லாஹ் மிகவும் அறிந்தவனாக இருக்கின்றான். இனி எவருக்கேனும் அடிமை கிடைக்கவில்லை எனில், அவ்விருவரும் தொடும் முன் இரண்டு மாதம் தொடர்ந்து நோன்பு நோற்க வேண்டும். ஒருவர் இதற்கு சக்தி பெறாவிட்டால், அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். இந்தக் கட்டளை ஏன் அளிக்கப்படுகிறதென்றால், அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர் மீதும் நீங்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான். இவை அல்லாஹ்வினால் நிர்ணயிக்கப்பட்ட வரம்புகளாகும். மேலும் நிராகரிப்பவர்களுக்கு துன்புறுத்தும் தண்டனை இருக்கின்றது" (58:34)

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.

Tuesday, March 07, 2006

காரணமின்றி பெண் விவாகரத்துக் கோரல்

பெரும்பாலான பெண்கள் ஒரு சின்னப் பிரச்சனை ஏற்பட்டாலும் தங்கள் கணவன்மார்களிடம் விவாகரத்தைக் கோர விரைகின்றனர். அல்லது தான் விரும்பும் பொருளை தன் கணவன் கொடுக்காவிட்டால் மனைவி அவனிடம் விவாகரத்தைக் கோருகின்றாள். சில சமயம் அவள் சில குழப்பமூட்டுகின்ற உறவினரால் அல்லது அண்டை வீட்டாரால் இவ்வாறு நடந்து கொள்வதற்குத் தூண்டப்படுகிறாள். சில சமயம் 'நீ ஓர் ஆண் பிள்ளையாக இருந்தால் என்னை விவாகரத்துச் செய்து பார்' என்பது போன்ற உணர்வுகளைத் தூண்டக்கூடிய வார்த்தைகளால் தன் கணவனிடம் சவால் விடுகிறாள்.

விவாகரத்தால் பெரும் பிரச்சனை ஏற்படும் என்பது அறிந்ததே! குடும்பம் சிதைந்து குழந்தைகள் சின்னா பின்னமாகி விடுவர். பலனளிக்காத நேரத்தில் கைசேதப்பட வேண்டியது வரும். இதனாலும் இன்னபிற காரணங்களாலும் தான் விவாகத்துச் செய்வதை மார்க்கம் தடை செய்திருப்பதில் உள்ள தத்துவம் தெரிய வருகிறது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'எந்தப் பெண்ணாயினும் ஒரு காரணமும் இல்லாமல் தன் கணவரிடம் விவாகரத்துக் கோரினால் சுவனத்தின் வாடை அவளுக்கு ஹராமாகி விடும்' அறிவிப்பவர்: ஸவ்பான் (ரலி) நூல்: அஹ்மத்

'விவாகரத்துக் கோரக்கூடிய பெண்கள் நயவஞ்சகர்கள்' என்பதும் நபிமொழி. உக்பா பின் ஆமிர் (ரலி) அறிவிக்கும் இந்நபிமொழி தப்ரானியில் உள்ளது.

மார்க்கம் அனுமதிக்கின்ற காரணம் இருந்தால், உதாரணமாக கணவன் தொழுகையை விட்டு விடுகிறான் அல்லது போதைப் பொருளைப் பயன்படுத்துகிறான் அல்லது விலக்கப்பட்ட காரியத்தைச் செய்ய தனது மனைவியை நிர்பந்திக்கிறான் அல்லது அவளை துன்புறுத்தியோ அல்லது இறைமார்க்கம் அவளுக்கு வழங்கி இருக்கின்ற உரிமைகளைத் தர மறுத்தோ அவளைக் கொடுமைப் படுத்துகிறான். பிறகு அறிவுரைகளும், சீர்திருத்த முயற்சிகளும் அவனுக்கு எந்த பலனையும் அளிக்கவில்லையெனில் இதுபோன்ற சந்தர்ப்பங்களில் ஒரு பெண் தன்னையும் தன் மார்க்கத்தையும் காத்துக் கொள்வதற்காக விவாகரத்தைக் கோரினால் அவள் மீது எந்தக் குற்றமும் கிடையாது.

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.

Friday, March 03, 2006

கணவனின் படுக்கைக்கு வர மறுத்தல்

ஒரு பெண் தன் கணவன் படுக்கைக்கு அழைக்கும் போது மார்க்க ரீதியான தக்க காரணம் இல்லாமல் வராமலிருப்பது ஹராமாகும்.

'ஒருவர் தன் மனைவியை படுக்கைக்கு அழைக்கும் போது அவள் வர மறுத்தால் அவள் மீது அவன் கோபம் கொண்ட நிலையில் அந்த இரவை அவன் கழித்தால் விடியும் வரை வானவர்கள் அவளை சபிக்கின்றனர் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்' அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), (புகாரி)

தனக்கும் தன் கணவனுக்குமிடையே பிரச்சனை ஏற்படும் போது பெரும்பாலான பெண்கள் அவனைத் தண்டிப்பதாக எண்ணிக் கொண்டு அவனுக்கு இல்லற சுகத்தை மறுத்து விடுகின்றனர். சில வேளை இதனால் பெரும் தீங்குகள் ஏற்படும். அவற்றில் ஒன்று கணவன் தவறான வழிக்குச் செல்வது. சிலவேளை விவகாரம் அவளுக்கு எதிராகத் திரும்பி, கணவன் அவளுக்கு மேல் இன்னொருத்தியை மணப்பதைப் பற்றி வினயமாகச் சிந்திக்கத் தலைப்படலாம்.

எனவே கணவன் படுக்கைக்கு அழைக்கும் போது நபி (ஸல்) அவர்களின் கட்டளைக்கு கீழ்படிந்து, விரைந்து அந்த அழைப்பை ஏற்றுக் கொள்வது மனைவியின் கடமையாகும். 'ஒரு மனிதன் தன் மனைவியை படுக்கைக்கு அழைத்தால் அவள் (பயணம் புறப்படுவதற்காக) ஒட்டகத்தின் சேணத்தின் மேல் அமர்ந்திருந்தாலும் செல்லட்டும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்' அறிவிப்பவர்: ஸைத் பின் அர்க்கம். (பஸ்ஸார்)

அதே நேரத்தில் தன்னுடைய மனைவி நோயாளியாகவோ, கர்ப்பிணியாகவோ அல்லது வேறு ஏதேனும் துன்பத்தில் இருந்தால் அது போன்ற சமயங்களில் அவளை இல்லறத்திற்கு நிர்பந்திக்காதிருப்பது கணவன் மீது கடமையாகும். காரணம் அவ்விருவருக்கும் இடையே பிணக்கு ஏற்படாமல் கருத்தொற்றுமை நீடிக்க வேண்டும் என்பதற்காக.

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.