Wednesday, April 26, 2006

அந்நியப் பெண்ணைப் பார்த்தல்

"(நபியே!) நம்பிக்கை கொண்ட ஆண்களிடம், அவர்கள் தங்கள் பார்வையைத் தாழ்த்திக் கொள்ளும் படியும் தங்களுடைய வெட்கத்தலத்தைப் பாதுகாத்துக் கொள்ளும்படியும் நீர் கூறும். இதுவே அவர்களுக்கு மிகத் தூய்மையானதாகும். அவர்கள் செய்யும் அனைத்தையும் திண்ணமாக அல்லாஹ் நன்கு அறிந்தவனாக இருக்கிறான்" (24:30) கண்கள் செய்யும் விபச்சாரம் (விலக்கப்பட்டவைகளைப்) பார்ப்பதாகும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (புகாரி)

மார்க்கம் அனுமதிக்கின்ற ஒரு அவசியத் தேவைக்காகப் பார்ப்பது விதிவிலக்காகும். உதாரணமாக ஒருவன் தான் மணமுடிக்க விரும்பும் பெண்ணைப் பார்ப்பது, மருத்துவர் நோயாளையைப் பார்ப்பது போல. இவ்வாறே ஒரு பெண் அந்நிய ஆணை தவறான நோக்குடன் பார்ப்பதும் ஹராமாகும். அல்லாஹ் கூறுகிறான்: "மேலும் (நபியே!) நம்பிக்கை கொண்ட பெண்களிடம் கூறும்: அவர்கள் தம் பார்வைகளைப் பேணிக் கொள்ளட்டும். தங்களுடைய வெட்கத்தலங்களைப் பாதுகாக்கட்டும்" (24:31)

அதுபோல தாடி, மீசை முளைக்காத இளைஞனையும் அழகான வாலிபனையும் இச்சையுடன் பார்ப்பதும் விலக்கப்பட்டதாகும். ஒரு ஆண் இன்னொரு ஆணின் மர்மஸ்தானத்தையும், ஒரு பெண் இன்னொரு பெண்ணின் மர்மஸ்தானத்தையும் பார்ப்பது ஹராமாகும். எந்த எந்த மர்ம உறுப்பைப் பார்ப்பது கூடாதே அதைத் தொடுவதும் கூடாது. துணிக்கு மேல் தொட்டாலும் சரியே.

சில செய்திதாள்களில், பத்திரிக்கைகளில், சினிமாக்களில் வரக்கூடிய (ஆபாசமான) படங்களை, அவை நிஜமல்லவே, வெறும் படங்கள் தானே எனும் அடிப்படையில் பார்ப்பது ஷைத்தானின் திருவிளையாடல் ஆகும். இவற்றில் தீமைகளும் காம உணர்வு தூண்டப்படுவதும் தான் இருக்கின்றன என்பது வெள்ளிடைமலை.

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.

Friday, April 21, 2006

அந்நிய ஆணுடன் பெண் தனியே பயணித்தல்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'மண முடிப்பதற்கு விலக்கப்பட்ட ஆண் துணையுடன் அல்லாது ஒரு பெண் பயணம் செய்ய வேண்டாம்' அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்:புகாரி, முஸ்லிம். இத்தடை ஹஜ் எனும் புனிதப் பயணம் உட்பட எல்லாப் பயணங்களையும் உள்ளடக்கும். மணமுடிப்பதற்கு ஆகுமான - அந்நிய ஆணுடன் அவள் பயணம் செல்வது தீய மனிதர்களை அவளுடன் சில்மிஷங்கள் செய்யத் தூண்டும். பலவீனமான அவள் சில போது அதற்கு ஆட்பட வேண்டியது வரும். அல்லது குறைந்த பட்சம் அவளுடைய மானம் மரியாதைக்குக் களங்கமாவது ஏற்பட்டு விடும்.

இது போன்றே அந்நிய ஆணுடன் ஒரு பெண் விமானத்தில் பயணமாவதும் ஹராமாகும். கணவனோ, சகோதரனோ வழி அனுப்பி வைக்கத்தானே செய்கிறார். கணவனோ, சகோதரனோ வரவேற்க வருகிறார் தானே என்று மக்கள் நினைக்கலாம். அப்போதும் அது கூடாததே! ஏனெனில் அவளுக்கு அடுத்த சீட்டில் அவளுடன் பயணம் செய்பவர் யார்? (அந்நியன் தானே!) விமானத்தில் ஏதாவது கோளாறு ஏற்பட்டு வேறொரு விமான நிலையத்தில் விமானம் தரை இறக்கப்பட்டாலோ, விமானம் புறப்பட தாமதமாகி விட்டாலோ, புறப்படு நாள் மாறி விட்டாலோ நிலைமை என்னாவது? இது போன்ற சம்பவங்கள் ஏராளம் நடந்திருக்கின்றன.

மஹ்ரமான துணைக்கு நான்கு நிபந்தனைகள் உள்ளன. அவன் முஸ்லிமாக, பருவமடைந்தவனாக, புத்தி சீர் நிலையிலுள்ளவனாக, ஆணாக இருக்க வேண்டும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியது போல. 'அல்லாஹ்வையும் மறுமையையும் நம்பக்கூடிய எந்தப் பெண்ணுக்கும் மூன்று அல்லது மூன்றுக்கு மேற்பட்ட நாட்கள் பயணமாவது ஹலால் இல்லை. அவளுடன் அவளுடைய தந்தையோ, மகனோ, கணவனோ, சகோதரனோ அல்லது அவள் மணமுடிப்பதற்கு விலக்கப்பட்ட (மஹ்ரமான) ஆண் துணை இருந்தாலே தவிர!' அறிவிப்பவர்: அபூ ஸயீத் (ரலி), நூல்: முஸ்லிம்.

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.

Sunday, April 16, 2006

பெண்கள் நறுமணத்துடன் வெளியே சுற்றுதல்

ஒரு பெண் நறுமணம் பூசிக் கொண்டு அதன் வாடையை மக்கள் நுகர வேண்டுமென்பதற்காக அவர்களைக் கடந்து சென்றால் அவள் விபச்சாரியாவாள் (அஹ்மத்) என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரித்திருந்தும் இன்றைய காலத்தில் இது மிக அதிகமாகக் காணப்படுகிறது. சில பெண்கள் இதை எந்த அளவுக்கு அலட்சியமாக, சாதாரணமாக எடுத்துக் கொண்டார்கள் எனில் வாசனைத் திரவியங்களைத் தடவிக் கொண்டு தம்முடைய டிரைவர், வியாபாரி, மற்றும் பள்ளிக்கூடத்தின் காவலாளி ஆகியோரின் அருகில் சர்வ சாதாரணமாகச் செல்கின்றனர்.

ஆனால் வாசனைத் திரவியத்தைத் தடவிக் கொண்ட பெண் மீது எந்த அளவு ஷரீஅத் கடுமை காட்டியிருக்கிறதெனில் அத்தகைய பெண் வீட்டை விட்டு வெளியே செல்ல விரும்பினால் - பள்ளிக்குச் செல்வதாக இருந்தாலும் சரி - கடமையான குளிப்பைப் போன்று குளித்து விட்டுச் செல்ல வேண்டும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'எந்தப் பெண் நறுமணம் பூசிக் கொண்டு பிறர் அந்த வாடையை நுகர வேண்டும் என்பதற்காக பள்ளிக்குச் செல்கின்றாளோ அவள் கடமையான குளிப்பைப் போன்று குளிக்காத வரை அவளுடைய தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது' (அஹ்மத்)

திருமண வைபவங்களும், பெண்கள் நிகழ்ச்சிகளுக்கும் புறப்படும் பெண்கள் புறப்படும் முன் பெண்கள் வாசனைத் திரவியங்களைப் பயன்படுத்தி விட்டுச் செல்கின்றனர். மட்டுமல்ல அதிகம் மணம் கமழக்கூடிய வாசனைத் திரவியங்களைத் தடவிக் கொண்டு கடை வீதிகளில், வாகனங்களில், ஆண், பெண் கலந்திருக்கும் கூட்டங்களில், சபைகளில், ரமளான் இரவுகளில் பள்ளிகளுக்கும் கூட செல்கின்றனர்! இதனை நாம் அல்லாஹ்விடம் தான் முறையிட வேண்டியதிருக்கிறது.

பெண்கள் பயன்படுத்தும் வாசனைப் பொருள் மணம் உள்ளடங்கியும் நிறம் எடுப்பாகவும் இருக்க வேண்டும் என்று ஷரீஅத்தில் கூறப்பட்டுள்ளது. எல்லாம் வல்ல அல்லாஹ் நம்மீது கோபம் கொள்ளாமலும், அறிவீனர்களான ஆண்களோ, பெண்களோ செய்கின்ற குற்றத்துக்காக நல்லோர்களான ஆண்களையும், பெண்களையும் தண்டிக்காமல் இருக்கவும் மேலும் நம் அனைவருக்கும் நேரான வழியை அவன் காட்டவும் நாம் பிரார்த்திப்போமாக!

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.

Monday, April 10, 2006

அந்நியப் பெண்ணுடன் முஸாஃபஹா செய்தல்

சமூகப் பழக்கவழக்கங்களில் சில நம் சமுதாயத்தில் இறைமார்க்கத்தையும் விஞ்சி விட்டன. அதுபோல மக்களின் தவறான பழக்கங்களும், பாரம்பரிய நடைமுறைகளும் இறைச்சட்டங்களை எந்த அளவுக்கு மிகைத்து விட்டன எனில் யாருக்கேனும் ஷரீஅத்தின் சட்டங்களை நீ எடுத்துச் சொன்னால், அவற்றை ஆதாரத்தோடு நிரூபித்து, சான்றுகளையும் தெளிவு படுத்தினால் உடனே உன்னை பழமைவாதி, அடிப்படைவாதி, குடும்ப உறைவை குலைப்பவன், நல்ல எண்ணங்களில் சந்தேகத்தை ஏற்படுத்துபவன்... என்றெல்லாம் அவதூறு கூறி விடுவர். அத்தகைய பழக்கவழக்கங்களில் ஒன்றுதான் அந்நியப் பெண்ணுடன் முஸாஃபஹா செய்தல்.

சிறிய தந்தையின் மகள், மாமி மகள், தாய் மாமன் மகள், சின்னம்மா மகள், அண்ணன் - தம்பி மனைவி, சிறிய தந்தையின் மனைவி, மாமாவின் மனைவி போன்ற பெண்களுடன் முஸாஃபஹாச் செய்வது நம் சமுதாயத்தில் தண்ணீர் குடிப்பதை விடவும் சாதாரண விஷயமாக மாறி விட்டன. (தமிழ் நாட்டில் இந்தப் பழக்கம் இல்லை) மார்க்க ரீதியாக இச்செயல் எவ்வளவு ஆபத்தானது தெளிந்த நோக்குடன் சிந்தித்துப் பார்த்தால் அதைச் செய்ய மாட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'உங்களில் ஒருவர் அவருக்கு ஹலால் இல்லாத பெண்ணைத் தொடுவதை விட அவரது தலையில் இரும்பு ஊசியால் குத்துவதே மேல்' அறிவிப்பவர்: மஅகல் பின் யஸார் (ரலி) நூல்: தப்ரானி

இச்செயல் நபி (ஸல்) அவர்கள் கூறியதுபோல கை செய்யும் விபச்சாரம் என்பதில் ஐயமில்லை. இப்னு மஸ்வூத் (ரலி) அறிவிக்கிறார்கள்: 'கண்கள் விபச்சாரம் செய்கின்றன, கைகள் விபச்சாரம் செய்கின்றன, கால்களும் விபச்சாரம் செய்கின்றன, மர்ம உறுப்பும் விபச்சாரம் செய்கின்றது என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்' நூல்: அஹ்மத்

முஹம்மத் (ஸல்) அவர்களை விட தூய உள்ளம் கொண்டவர் உலகில் யாரேனும் உண்டா? அவ்வாறிருந்தும் 'நான் பெண்களிடம் முஸாஃபஹா செய்ய மாட்டேன்' என்றெல்லாம் கூறியுள்ளார்கள். அஹ்மத், தப்ரானியில் இதற்கு சான்றுள்ளது.

அண்ணலாரின் மனைவி ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் மீது ஆணையாகச் சொல்கிறேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கரம் எந்தப் பெண்ணுடைய கரத்தின் மீதும் பட்டதே இல்லை. எனினும் வாய்மொழி மூலமே அவர்களிடம் (பெண்களிடம்) பைஅத் - உறுதிப் பிரமாணம் பெறுவார்கள். (முஸ்லிம்)

அறிந்து கொள்ளுங்கள்! சில கணவர்கள் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளட்டும். அவர்கள் ஒழுக்கமுள்ள தம் மனைவியரை, தம் சகோதரர்களிடம் முஸாஃபஹா செய்யா விட்டால் விவாகரத்துச் செய்து விடுவதாக எச்சரிக்கின்றனர்.

இங்கு ஒரு விஷயத்தை அறிந்து கொள்வது அவசியமாகும். அதாவது திரைக்கு அப்பால் நின்று கொண்டு கையில் ஒரு துணியைப் போட்டுக் கொண்டு முஸாஃபஹாச் செய்தால் அது கூடும் என்றாகி விடாது. நேரடியாகச் செய்வது, துணியை வைத்துச் செய்வது ஆகிய இரண்டும் தடுக்கப்பட்டவை தான்.

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.

Sunday, April 02, 2006

அந்நியப் பெண்ணுடன் தனித்திருத்தல்

ஷைத்தான் மனிதர்களை குழப்புவதற்கும் விலக்கப்பட்டவைகளில் அவர்களை வீழ்த்துவதற்கும் பெரும் ஆர்வம் கொண்டவன். இதனால்தான் அல்லாஹ் நம்மை இப்படி எச்சரிக்கிறான்: "நம்பிக்கை கொண்டவர்களே! ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள். யாரேனும் அவனுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றினால் மானக்கேடானவை மற்றும் தீயவற்றைச் செய்யுமாறே ஷைத்தான் அவனை ஏவுவான்" (24:21). மனிதனின் இரத்தம் ஓடும் நாளங்களில் எல்லாம் ஷைத்தான் ஓடுகின்றான். மனிதர்களை மானக்கேடானவற்றில் வீழ்த்துவதற்கு ஷைத்தான் கையாளும் வழிகளில் ஒன்றுதான் அந்நியப் பெண்ணுடன் ஒரு ஆண் தனித்திருப்பதாகும். இதனால் தான் இறைமார்க்கம் இப்பாதையை அடைத்து விட்டது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'எந்த ஆணும் (அந்நியப்) பெண்ணுடன் தனித்திருக்க வேண்டாம். ஏனெனில் மூன்றாவதாக ஷைத்தான் இருப்பான்' அறிவிப்பவர்: புரைதா (ரலி), நூல்: திர்மிதி

பனூ ஹாஷிம்களில் சிலர் அஸ்மா பின் உமைஸ் (ரலி) அவர்களிடம் வந்தனர். அப்போது அஸ்மா (ரலி) அபூபக்கர் (ரலி) அவர்களின் மனைவியாக இருந்தார்கள். (சிறிது நேரத்திற்குப்) பிறகு அபூபக்கர் (ரலி) வந்ததும் அவர்களைக் கண்டார்கள். கணவன் இல்லாத வீட்டிற்கு அவர்கள் வந்ததை அபூபக்கர் (ரலி) விரும்பவில்லை. அதனால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அதைத் தெரிவித்தார்கள். மேலும் நான் இதை (தவறாக அல்லாமல்) நல்லதாகவே கருதுகிறேன் என்றும் கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், திண்ணமாக அல்லாஹ் அவளைக் குற்றமற்றவளாக ஆக்கியிருக்கின்றான் எனக் கூறிவிட்டு மிம்பரில் ஏறி, 'இதற்குப் பிறகு எந்த ஆணும் கணவன் வீட்டில் இல்லாத போது ஒரு பெண்ணிடம் செல்லக் கூடாது. அவருடன் ஒருவரோ இருவரோ சேர்ந்து சென்றாலே தவிர' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) நூல்: முஸ்லிம்.

எனவே எந்த ஆணும் தம் சகோதரரின் மனைவி அல்லது வேலைக்காரி போன்ற அந்நியப் பெண்ணுடன் அல்லது பெண் மருத்துவருடனும் வீட்டிலோ அறையிலோ அல்லது காரிலோ தனித்திருப்பது கூடாது. ஆயினும் பெரும்பாலோர் இதில் அலட்சியமாகவே இருக்கின்றனர். தம் மீதோ பிறர் மீதோ நம்பிக்கை வைத்து இப்படி நடந்து கொள்கின்றனர். இதனால் மானக்கேடான காரியங்களில் அல்லது அதற்கான தூண்டுதல்களில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்பட்டு விடும். மட்டுமல்ல குழந்தைகள் தவறான வழியில் பிறத்தல், சந்ததிக் கலப்பு ஏற்படுதல் எனும் வருந்தத்தக்க நிலையும் அதிகரித்து விடும்.

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.