Friday, July 21, 2006

வேலைக்காரனுக்கு கூலி கொடுக்காதிருத்தல்

வேலைக்காரனுக்கு அவனுடைய உரிமையை (கூலியை) விரைவாக வழங்கிட நபி (ஸல்) அவர்கள் ஆர்வமூட்டியுள்ளார்கள். 'வேலைக்காரனுக்கு அவனுடைய வேர்வை உலர்வதற்குள் கூலியை கொடுத்து விடுங்கள்' என்பது நபிமொழி. அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: முஸ்லிம்.

முஸ்லிம் சமுதாயத்தில் காணப்படும் பல்வேறு அநியாயங்களில் தொழிலாளர்கள், பணியாளர்கள், வேலைக்காரர்கள் ஆகியோருக்கு அவர்களின் உரிமைகளை வழங்காதிருப்பது ஒன்றாகும். இதற்குப் பல்வேறு வடிவங்கள் உள்ளன. அவற்றுள் சில வருமாறு:

வேலைக்காரனுடைய உரிமையை முழுவதும் கொடுக்க மறுப்பது, அவனிடம் அதற்கான ஆதாரம் இல்லாமல் செய்து விடுவது, இத்தகையவனுடைய உரிமை இவ்வுலகில் பறிபோனாலும் மறுமையில் அல்லாஹ்விடத்தில் வீணாகிவிடாது. அப்போது அநீதியிழைத்தவன் அநீதி இழைக்கப்பட்டவனுடைய பொருளை உண்ட நிலையில் வருவான். அவனுடைய நன்மைகளை எடுத்து அவனால் பாதிக்கப்பட்டவனுக்குக் கொடுக்கப்படும். அவனுடைய நன்மைகள் தீர்ந்து விட்டால் பாதிக்கப்பட்டவனுடைய தீமைகளை எடுத்து அவன் தலையில் போட்டு அவனை நரகில் தள்ளப்படும்.

கூலியை குறைத்துக் கொடுப்பது: அதாவது வேலைக்காரனுக்கு அவனுடைய கூலியை முழுமையாக வழங்காமல் அநியாயமாகக் குறைத்து விடுவது.

அல்லாஹ் கூறியுள்ளான்: "அளவில் மோசடி செய்வோருக்குக் கேடுதான்" (83:1). சில முதலாளிகள் செய்வது இதற்கு உதாரணமாகும். அதாவது தொழிலாளர்களை அவர்களுடைய நாடுகளிலிருந்து ஒரு குறிப்பிட்ட சம்பளத்துக்கு ஒப்பந்தம் செய்து அழைத்து வருவது, அவர்கள் வேலையில் சேர்ந்தபின் ஒப்பந்தத்தை மாற்றி கூலியைக் குறைத்துக் கொடுப்பது. அப்போது தொழிலாளர்கள் வேண்டா வெறுப்புடனேயே வேலையில் ஈடுபடுகின்றனர். தங்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளை நிரூபிக்க இயலாதவர்களாக ஆகிவிடுகின்றனர். அதனால் தங்கள் நிலைமையை அல்லாஹ்விடமே முறையிடுகின்றனர்.

அநியாயக்கார அந்த முதலாளி முஸ்லிமாகவும் தொழிலாளி காஃபிராகவும் இருந்தால் முதலாளியின் இச்செயல் அத்தொழிலாளி இஸ்லாத்திற்கு வருவதற்கு தடையாகி விடு(வது மட்டுமல்ல இஸ்லாத்தைப் பற்றித் தவறாக விளங்குவதற்கும் காரணமாகி விடு)கிறது. அதன் பாவமும் அந்த முதலாளிக்கு வந்து விடுகிறது.

நிர்ணயிக்கப்பட்ட வேலைக்கும் கூடுதலான வேலைகளை கொடுத்து, அல்லது வேலை நேரத்தைக் கூட்டி, அடிப்படைக் கூலியை மட்டுமே கொடுப்பது. மேலதிகமான வேலைகளைச் செய்ததற்கான கூலியைக் கொடுக்காமலிருப்பது.

கூலி வழங்குவதில் கால தாமதம் செய்வது: தொழிலாளர்களின் கூலியை, அவர்கள் மிகுந்த சிரமப்பட்டு, திரும்பத் திரும்பக் கேட்டு, பல முறை முறையிட்டு, நீதிமன்றத்தின் கதவைத் தட்டிய பிறகே கொடுப்பது. முதலாளி கூலியைத் தாமதப்படுத்துவதின் நோக்கம் திரும்பத் திரும்பக் கேட்டு, தொழிலாளியை சோர்வடையச் செய்வதற்காகக் கூட இருக்கலாம். பிறகு அவன் தனது உரிமையை - ஊதியம் கேட்பதை விட்டு விடுவான். அல்லது தொழிலாளர்களின் ஊதியங்களை தனது தொழிலில் முடக்கி பலன் பெறுவதற்காகக் கூட இருக்கலாம்.

இன்னும் சில முதலாளிகள் அந்த ஊதியங்களை வட்டிக்கு விடுகின்றனர். ஆனால் இந்த ஏழைத் தொழிலாளியோ தன் அன்றாட உணவுக்குக் கூட காசு இல்லாமல் சிரமப்படுகிறான். மட்டுமல்ல தன் மனைவி, மக்களின் செலவுக்கும் அவனால் பணம் அனுப்ப முடியவில்லை. அவர்களின் தேவையை நிறைவு செய்வதற்காகத்தானே அவன் நாடு துறந்து வந்திருக்கின்றான். இத்தகைய அக்கிரமக்காரர்களுக்குக் கேடுதான்! துன்புறுத்தக்கூடிய ஒரு நாளின் தண்டனையின் வாயிலாக.

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்: 'அல்லாஹ் கூறுகிறான்: மறுமையிம் மூன்று பேர்களுடன் நான் சண்டையிடுவேன். ஒருவன் எனது பெயரால் வாக்குக் கொடுத்து ஏமாற்றியவன், மற்றொருவன் சுதந்திரனை விற்று அதன் கிரயத்தை உண்டவன், மூன்றாமவன் ஒருவரைக் கூலிக்கு அமர்த்தி அவரிடம் முழுமையாக வேலையை வாங்கிக் கொண்டு கூலியைக் கொடுக்காதவன்' (புகாரி)

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.

Saturday, July 15, 2006

பரிந்துரைக்காக அன்பளிப்புப் பெறுதல்

மக்களிடையே பெரும் செல்வாக்கும் அந்தஸ்தும் ஒரு மனிதனுக்கு அல்லாஹ் வழங்கிய அருட்கொடையாக எப்பொழுது ஆகுமெனில் அதற்காக அவன் நன்றி செலுத்தும் போதுதான். முஸ்லிம்களுக்கு நன்மை செய்வதற்காக இந்த செல்வாக்கைப் பயன்படுத்துவது இவ்வருட்கொடைக்கு நன்றி செலுத்துவதாக அமையும். ஏனெனில் 'உங்களில் யாரேனும் தன் சகோதரனுக்கு நன்மை செய்ய முடிந்தால் செய்யட்டும்' என நபி (ஸல்) அவர்கள் பொதுவாகக் கூறியிருப்பதில் இது அடங்குகிறது. இந்த நபிமொழி ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்க முஸ்லிமில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஒருவர் தன் செல்வாக்கைப் பயன்படுத்தி, அல்லாஹ்வுக்காக என தூய எண்ணத்துடன் தன் சகோதர முஸ்லிமுக்கு ஒரு நன்மை செய்தால் அல்லது ஒரு அநீதியைத் தடுத்தால் - அதே நேரத்தில் விலக்கப்பட்ட எதையும் செய்யாமல் அல்லது யாருடைய உரிமையிலும் கை வைக்காமல் இருந்தால் அத்துடன் அவனுடைய எண்ணம் தூய்மையானதாக இருந்தால் அவன் அல்லாஹ்விடத்தில் நற்கூலியைப் பெறுவான்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'பரிந்துரை செய்யுங்கள். நற்கூலி வழங்கப்படுவீர்கள்' அறிவிப்பவர்: அபூமூஸா (ரலி), நூல்: முஸ்லிம். ஆனால் பரிந்துரை செய்ததற்காக கூலியோ பிரதி உபகாரமோ பெற்றுக் கொள்ளக் கூடாது. ஆதாரம்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 'ஒருவர் இன்னொருவருக்குப் பரிந்துரை செய்து, அதற்காக அவருக்கு வழங்கப்படுகின்ற அன்பளிப்பை பெற்றுக் கொண்டால் அவர் வட்டியின் பல வாசல்களில் மிகப் பெரிய வாசலில் நுழைந்தவராவார்' அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி), நூல்: அஹ்மத்.

மக்களில் சிலர் தங்களின் செல்வாக்கைப் பயன்படுத்தி அல்லது பரிந்துரை செய்து ஒருவருக்கு வேலை வாங்கித் தருவதற்கு அல்லது இடமாற்றம் வாங்கித் தருவதற்கு அல்லது ஒரு நோயாளிக்கு மருத்துவம் செய்து கொடுக்க இன்னும் இதுபோன்ற உதவிகளைச் செய்து கொடுப்பதற்காக ஒரு தொகையை கேட்கின்றனர். அறிஞர்களின் சரியான கூற்றின் பிரகாரம் இது ஹராமாகும். முன்னர் கூறப்பட்ட அபூஉமாமா (ரலி) அறிவிக்கும் நபிமொழியே இதர்கு ஆதாரமாகும். மட்டுமின்றி ஹதீஸின் வெளிப்படையான அர்த்தத்தைப் பார்க்கும்போது கேட்காமல் கொடுக்கப்படும் பொருள்களைப் பெறுவதும் ஹராம் தான். நன்மையைச் செய்யக்கூடியவனுக்கு மறுமையில் அல்லாஹ்விடம் கிடைக்கும் கூலி மட்டுமே போதுமானதாகும்.

ஒரு காரியத்தில் பரிந்துரை செய்யக் கோரி ஹஸன் பின் ஸஹ்ல் (ரஹ்) அவர்களிடம் ஒருவர் வந்தார். அதை அவர் நிறைவேற்றிக் கொடுத்தார். அதற்காக அம்மனிதர் அவர்களுக்கு நன்றி செலுத்த வந்தார். அப்போது அந்த மனிதரிடம் ஹஸன் பின் ஸஹ்ல் (ரஹ்) அவர்கள் எதற்காக எங்களுக்கு நன்றி செலுத்துகிறீர், பொருளுக்கு ஜகாத் இருப்பது போலவே பதவியின் பேரில் ஜகாத் கொடுக்க வேண்டியுள்ளது என்றே நாங்கள் கருகிதுகிறோம் எனக் கூறினார்கள். (அல் - ஆதாப் அஷ்ஷரஇய்யா)

இந்த இடத்தில் ஒரு விஷயத்தைச் சுட்டிக் காட்டுவது பொருத்தமானதாகும். அதாவது ஒருவர் தன்னுடைய வேலையை முடித்துத் தருவதற்காக சம்பளத்திற்கு ஒருவரை நியமிப்பதற்கும் ஒருவர் தன்னுடைய பதவியை, செல்வாக்கைப் பயன்படுத்தி பரிந்துரை செய்து கூலி பெறுவதற்கும் இடையில் பெருத்த வித்தியாசம் உள்ளது. முந்தியது மார்க்கத்தின் நிபந்தனைகளுடன் கூலி பெறுதல் எனும் அடிப்படையில் ஆகுமானதாகும். பிந்தியது ஹராமானதாகும்.

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.

Monday, July 10, 2006

நிலத்தை அபகரித்தல்

இறையச்சம் இல்லாமல் போய் விடுமானால் சக்தியும் உபாயமும் அவற்றைப் பெற்றிருப்பவர்களுக்கே கேடாகி விடுகிறது. அவற்றை, பிறரின் பொருள்களை அபகரிப்பது போன்ற அக்கிரமத்திற்குப் பயன் படுத்துகிறார்கள். இந்த அக்கிரமத்தைச் சார்ந்ததுதான் நிலங்களை அபகரித்தல். இதன் முடிவு மிகப் பெரிய துன்பத்தில் கொண்டு போய் சேர்த்து விடும்.

'ஒரு ஜாண் அளவு நிலத்தை அநியாயமாக ஒருவன் அபகரித்தால் இறுதி நாளில் அவன் ஏழு பூமிக்கடியில் அமிழ்த்தப்படுவான்' என்பது நபிமொழி. அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: புகாரி.

'ஒருவன் ஒரு ஜாண் நிலத்தை அநியாயமாக அபகரித்தால் மறுமையில் அதை ஏழு பூமிகளின் இறுதிவரை தோண்டும்படி அல்லாஹ் அவனை ஏவுவான். பின்னர் மக்களிடையே தீர்ப்புச் செய்யப்படும் வரை (அவன் அபகரித்த) அந்த நிலத்தை அவனுடைய கழுத்தில் மாலையாக அணிவித்து விடுவான்' என்பதும் நபிமொழி. அறிவிப்பவர்: யஃலா பின் முர்ரா (ரலி) நூல்: அஹ்மத்.

தப்ரானியின் அறிவிப்பில் ...மறுமையில் அதை ஏழு பூமிகளின் அடிப்பாகம் வரைக் கொண்டு வரும்படி அல்லாஹ் அவனை ஏவுவான்... என்று உள்ளது.

நில அடையாளைக் கல்லை, நிலத்தின் எல்லைகளை மாற்றி அண்டை வீட்டாரின் நிலத்தை தன் நிலத்தோடு சேர்த்து விசாலப்படுத்திக் கொள்வதும் இதில் அடங்கும். பின்வரும் நபிமொழியும் இதையே சுட்டிக் காட்டுகிறது.

'நில அடையாளக் கல்லை மாற்றுபவனை அல்லாஹ் சபிப்பானாக!' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அலீ (ரலி) நூல்: முஸ்லிம்.

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.

Monday, July 03, 2006

லஞ்சம் கொடுப்பதும், வாங்குவதும்

உரிமையை அழிப்பதற்கோ, பொய்யைச் செல்லுபடியாக்குவதற்கோ - மக்களிடையே தீர்ப்புச் சொல்லக்கூடிய நீதிபதிக்கு லஞ்சம் கொடுப்பது குற்றமாகும். காரணம் இது தீர்ப்பில் நேர்மை தவறுவதற்கும் நியாயம் கிடைக்க வேண்டியவர்களுக்கு அநீதி இழைப்பதற்கும் இட்டுச் செல்லும். மேலும் இது குழப்பத்தை உருவாக்கும். அல்லாஹ் கூறுகிறான்: "மேலும் நீங்கள் ஒருவர் மற்றவரின் பொருளை தவறான முறையில் உண்ணாதீர்கள். மேலும் பிற மனிதர்களுடைய பொருள்களில் ஏதேனும் ஒரு பகுதியை அநீதமான முறையில் தின்பதற்காக - அது தவறு என நீங்கள் அறிந்திருந்தும் - அதற்குரிய வாய்ப்பைப் பெற அதிகாரிகளைஅணுகாதீர்கள்" (2:188)

(ஒரு விவகாரத்தில்) தீர்ப்புப் பெறுவதற்காக லஞ்சம் கொடுப்பவனையும் லஞ்சம் வாங்குபவனையும் அல்லாஹ் சபிப்பானாக! என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்' அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்:அஹ்மத்.

ஆனால் நீதியை அடைவதோ அநீதியைத் தடுப்பதோ லஞ்சம் கொடுக்காமல் சாத்தியம் ஆகாதெனில் இத்தகைய (நிர்பந்தமான) சூழ்நிலையில் லஞ்சம் கொடுப்பவன் இந்த எச்சரிக்கையில் சேரமாட்டான்.

இந்தக் காலத்தில் லஞ்சம், பெருமளவு பெருகி விட்டது. எந்த அளவுக்கு எனில் சில ஊழியர்களுக்கு அவர்களுடைய ஊதியத்தை விடக் கூடுதல் வருமானமாக லஞ்சம் ஆகிவிட்டது. அதுமட்டுமல்ல பல கம்பெனிகளுடைய வரவு, செலவு கணக்கு (பட்ஜெட்)களில் பல்வேறு (மறைமுகமான) பெயர்களில் லஞ்சம் கொடுக்கல், வாங்கல்கள் பதிவு செய்யப்படுகிறது. பெரும்பாலான கொடுக்கல், வாங்கல்கள் எப்படி மாறி விட்டன என்றால் அவை ஆரம்பமாவதும் லஞ்சம் மூலமாகத்தான் முடிவதும் லஞ்சம் மூலமாகத்தான். அதனால் ஏழைகள் பெரும் துன்பங்களுக்கு ஆளாகின்றனர். இதனால் (மனிதர்களிடம் ஒப்படைக்கப்பட்ட) பல்வேறு பொறுப்புகள் பாழாகி விட்டன. தொழிலாளிகள் கெட்டுப் போவதற்கும் அதனால் முதலாளிகள் நஷ்டம் அடைவதற்கும் இதுதான் காரணம். அது மட்டுமல்ல லஞ்சம் கொடுப்பவருக்குத் தான் வேலை சிறப்பாக முடித்துக் கொடுக்கப்படுகிறது. எவர் லஞ்சம் கொடுக்கவில்லையோ அவருடைய வேலை சிறப்பாக முடித்துக் கொடுக்கப்படுவதில்லை. அல்லது அவருடைய வேலை தாமதப்படுத்தப்படுகிறது.

லஞ்சம் கொடுத்தவர்கள் லஞ்சம் கொடுக்காதவர்களுக்குப் பிறகு வந்தும் அவர்களுக்கு வெகு முன்பாகவே வேலையை முடித்து விட்டுச் சென்று விடுகின்றனர். முதலாளிகளுக்குச் சேரவேண்டிய பணங்கள் லஞ்சம் காரணமாக முகவர்களின் பாக்கெட்டுகளில் சேர்ந்து விடுகிறது. இதுபோன்ற காரணங்களால் தான் இந்தத் தீமையிலும் இது சம்பந்தபட்டவற்றிலும் பங்கு பெறுபவர்களை அல்லாஹ் தனது அருளை விட்டும் தூரமாக்கட்டும் என நபி (ஸல்) அவர்கள் சபித்திருப்பதில் ஆச்சரியமில்லை.

அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'லஞ்சம் கொடுப்பவர் மீதும் லஞ்சம் வாங்குபவர் மீதும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டுமாக! என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்' (இப்னுமாஜா)

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.