Wednesday, March 28, 2007

இசையும் இசைக் கருவிகளும்

மனிதர்களில் சிலர் இப்படியும் இருக்கின்றார்கள். மன மயக்கத்தை ஏற்படுத்தும் விஷயங்களை அவர்கள் விலைக்கு வாங்குகிறார்கள். எதற்காகவெனில் அவர்கள் எவ்வித அறிவுமின்றி (மக்களை) அல்லாஹ்வின் பாதையை விட்டு பிறழச் செய்வதற்காகவும் அதை ஏளனம்செய்வதற்காகவும் தான்" (31:6).

இவ்வசனத்திலுள்ள மனமயக்கத்தை ஏற்படுத்தும் விஷயங்கள் என்பதன் கருத்து பாடல்களே என இப்னு மஸ்வூத் (ரலி)அவர்கள் கூறியுள்ளார்கள்.

'விபச்சாரம், பட்டு, மது, இசைக் கருவிகள் ஆகியவற்றை ஹலாலாக்கிக் கொள்ளக்கூடிய ஒரு கூட்டம் என்னுடைய சமுதாயத்தில் நிச்சயம் தோன்றும்' என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஆமிர் (ரலி), மற்றும் அபூமாலிக் அல்அஸ்அரி (ரலி) அறிவிக்கிறார்கள். நூல்: புகாரி.

மேலும் அனஸ் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது: 'திண்ணமாக இந்த சமுதாயத்தில் பூகம்பம், உருமாற்றம் செய்யப்படுதல், அவதூறு கூறல் ஆகியவை உண்டாகும். எப்போதெனில் அவர்கள் மதுபானங்களை அருந்தும்போது, (நடனமாடி) பாட்டுப் படிக்கும் பெண்களை ஏற்படுத்தும் போது, இசைக்கருவிகளைப் பயன்படுத்தும் போது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்' (இப்னு அபித்துன்யா) இதே கருத்து திர்மிதியிலும் உள்ளது.

நபி (ஸல்) அவர்கள் முரசு அடிப்பதைத் தடுத்துள்ளார்கள். நாதசுரம் (Pipe) பற்றிக் குறிப்பிடும் பொழுது அது தீய மோசமான சப்தம் எனக் கூறியுள்ளார்கள். இமாம் அஹ்மத் (ரஹ்) அவர்கள் முன் சென்ற மார்க்க அறிஞர்களும் யாழ் (வீணை), மேன்டலின், ரீபெக், (Mandolin, Rebec-இவை யாவும் வீணையில் ஒவ்வொரு வகை), புல்லாங்குழல், சிங்கி (Cymbal) போன்ற இசைக் கருவிகள் ஹராம் எனக் கூறியுள்ளனர்.

மேலும் நபி (ஸல்) அவர்கள் இசைக் கருவிகளைத் தடுத்துள்ள ஹதீஸில் வயலின், சிதர் (Zither-இது ஒரு வகை நரம்பு இசைக்கருவி), பியானோ, கிதார் போன்ற நவீன இசைக் கருவிகளும் அடங்கும் என்பதில் ஐயமில்லை. இன்னும் சொல்லவதானால் இந்த நவீன இசைக் கருவிகள் ஹதீஸ்களில் தடை வந்துள்ள பழங்கால இசைக் கருவிகளை விட பெருமளவு பரவசம், போதை, மற்றும் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியவையாகும். இப்னுல் கய்யூம் போன்ற அறிஞர்கள் கூறியதுபோல இசையின் போதை மதுவின் போதையை விடக் கடுமையானது. இசையுடன் பாடலும், மனமகிழ்ச்சியூட்டி பரவசப்படுத்தும் பெண்களின் குரலும் இணைந்து விட்டால் அது அதைவிடக்
கூடுதல் ஹராமாகும், கூடுதல் பாவமாகும் என்பதில் சந்தேகமில்லை.

பாடலின் வரிகள் அன்பையும் காதலையும் வெளிப்படுத்தக் கூடியதாகவும் காதலியின் அழகை வர்ணிப்பதாகவும் இருந்தால் விபரீதம் மேலும் அதிகமாகிவிடும். இதனால் தான் பாடல்கள் விபச்சாரத்திற்குத் தூது விடுகின்றது, உள்ளத்தில் நயவஞ்சகத்தை வளர்க்கின்றது என
அறிஞர்கள் கூறுகின்றனர். மொத்தத்தில் பாடல்கள் மற்றும் இசையின் பிரச்சனை இக்காலத்தில் மிகப் பெரும் குழப்பமாகவும் சோதனையாகவும் ஆகிவிட்டது.

மேலும் நம்முடைய இக்காலத்தில் பல்வேறு பொருட்களில் இசை நுழைந்து விட்டிருப்பது மிகப் பெரும் தொல்லையாகும். உதாரணத்திற்கு கைக்காடிகாரங்கள், அலாரங்கள், குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்கள், கம்யூட்டர்கள், சில தொலைப்பேசி சாதனங்கள் ஆகியவற்றை
சொல்லலாம். இவற்றைத் தவிர்ப்பதற்கு பெரும் மன உறுதி வேண்டும் என்றாகி விட்டது. அல்லாஹ்தான் உதவி செய்ய வேண்டும்.

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.

பொய் சாட்சி சொல்லுதல்

அல்லாஹ் கூறுகிறான்: "எனவே விக்கிரகங்கள் எனும் அசுத்தத்திலிருந்து தவிர்ந்து கொள்ளுங்கள். பொய்யான பேச்சுகளிலிருந்தும் விலகியிருங்கள். அல்லாஹ்வுக்கு எதனையும் இணையாக்காது, அவனுக்கே ஒருமனப்பட்டவர்களாய்த் திகழுங்கள்" (22:30,31)

அபூபக்ரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ''பெரும் பாவங்களில் மிகப் பெரும் பாவத்தை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மூன்று முறை கேட்டார்கள்! அதற்கு நாங்கள், அல்லாஹ்வின் தூதரே! அறிவியுங்கள் என்றோம். அதற்கவர்கள், அல்லாஹ்வுக்கு இணை வைப்பது, பெற்றோரை நிந்திப்பது என்று கூறினார்கள். சாய்ந்திருந்த அவர்கள் நிமிர்ந்து உட்கார்ந்து, அறிந்து கொள்ளுங்கள்! பொய் சொல்வதும் பொய் சாட்சி கூறுவதும் தான், அறிந்து கொள்ளுங்கள்! பொய் சொல்வதும் பொய் சாட்சி கூறுவதும் தான் என்று கூறினார்கள். நிறுத்த மாட்டார்களா? என்று நான் கூறும் அளவுக்கு அவற்றைத் திரும்ப திரும்பக் கூறிக் கொண்டிருந்தார்கள். புகாரி (5976), முஸ்லிம்.

பொய் சாட்சி சொல்வதைப் பற்றிய எச்சரிக்கை இங்கு திரும்பத் திரும்பக் கூறப்பட்டிருப்பதற்குக் காரணம் மக்கள் அதை சாதாரணமாக எண்ணுவதும், அதன்பால் தூண்டக்கூடிய பகைமை, பொறாமை போன்ற காரணங்கள் அதிகமாக இருப்பதாலும், அதனால் பெரும் தீமைகள் விளைவதாலும் தான். பொய் சாட்சியால் எத்தனை உரிமைகள் பாழாகியுள்ளன! எத்தனை நிரபராதிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்! அதுமட்டுமா பொய் சாட்சியினால் எத்தனையோ பேர் தங்களுக்கு உரிமை இல்லாதவற்றை அடைந்துள்ளனர்! எத்தனையோ பேருக்கு போலியான குடும்ப உறவு ஏற்பட்டுள்ளது.

பொய் சாட்சி சொல்வதை சாதாரணமாகக் கருதுவதில் இதுவும் அடங்கும். சிலர் நீதிமன்றங்களில் தான் சந்திக்கும் (முன் பின் தெரியாத) ஒருவரிடம் எனக்கு நீ சாட்சி சொல், உனக்கு நான் சாட்சி சொல்கிறேன் என்று கூறுகின்றனர். பிறகு உண்மை நிலவரம் என்ன, சூழ்நிலை என்ன என்று தெரிந்திருக்க வேண்டிய விஷயங்களிலும் கூட எதுவும் தெரியாமலேயே ஒருவருக்கு ஒருவர் சாட்சி கூறிக் கொள்கின்றனர்.

உதாரணமாக இவன்தான் இந்த நிலத்துக்கு அல்லது இந்த வீட்டுக்குச் சொந்தக்காரன், அல்லது இவன் குற்றமற்றவன் என்று சாட்சி சொல்லிக் கொள்கின்றனர். ஆனால் அவனை (முதல் முறையாக) நீதிமன்ற வாசலிலோ அல்லது தெருவிலோ தான் சந்தித்திருப்பார்கள். இது பொய்யான, போலியான சாட்சியாகும் சாட்சி கூறுவதென்பது "நாங்கள் அறிந்ததை வைத்தே சாட்சி சொல்கிறோம்" (12:81) என்று திருக்குர்ஆனில் சொல்லப்பட்டிருப்பது போல அமைய வேண்டும்.

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.

தங்கம், வெள்ளிப் பாத்திரங்கள்

தற்காலத்தில் வீட்டிற்குத் தேவையான சாமான்களை விற்பனை செய்யும் கடைகளில் எந்தக் கடையிலும் தங்கம், வெள்ளிப் பாத்திரங்கள் அல்லது தங்கம், வெள்ளி முலாம் பூசப்பட்ட பாத்திரங்கள் இல்லாமலில்லை. அவ்வாறே செல்வந்தர்களுடைய வீடுகளும், பல ஹோட்டல்களும், இன்னும் சொல்வதானால் இந்த தங்கம், வெள்ளிப் பாத்திரங்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் சிலர், சிலருக்கு வழங்கும் உயர்ந்த அன்பளிப்புப் பொருள்களாகவும் ஆகி விட்டன.

இன்னும் சிலர் தங்களுடைய வீடுகளில் அவற்றை வைத்துக் கொள்வதில்லை. ஆயினும் மற்றவர்களுடைய வீடுகளிலும் அவர்களின் வலிமா-விருந்துகளிலும் கலந்து கொள்ளும்போது அவற்றைப் பயன்படுத்துகின்றனர். இவையனைத்தும் மார்க்கத்தில் ஹராமாக்கப்பட்ட காரியங்களாகும். இப்பாத்திரங்களைப் பயன்படுத்துவது பற்றி நபி (ஸல்) அவர்கள் மூலம் கடுமையான எச்சரிக்கையும் வந்துள்ளது. அவர்கள் கூறியதாவது:

'நிச்சயமாக தங்கம்,வெள்ளிப் பாத்திரங்களில் உண்பவன் அல்லது பானம் அருந்துபவன் தன் வயிற்றினுள் நரக நெருப்பையே நிரப்புகிறான்' அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி), நூல்: முஸ்லிம்.

இந்தச் சட்டம் உணவுக்காகப் பயன்படுத்தப்படும் எல்லா வகைப் பண்ட - பாத்திரங்களையும் எடுத்துக் கொள்ளும். உதாரணமாக தட்டு, கரண்டி வகைகள், கத்திகள், விருந்தினருக்காகப் பயன்படுத்தப்படும் பாத்திரங்கள், திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் இனிப்புப் பணடங்களை வைக்கப் பயன்படுத்தப்படுகின்ற டப்பாக்கள் போன்றவை.

இன்னும் சிலரோ நாங்கள் இப்பாத்திரங்களைப் பயன்படுத்துவதில்லை. ஆனால் கண்ணாடிப் பெட்டிகளில் அழகுக்காக மட்டுமே வைத்துக் கொள்கிறோம் என்கின்றனர். இதுவும் கூடாது. ஏனெனில் இது உபயோகப்படுத்துவதற்கான வழியைத் திறந்து விடும் என்பதற்காக.

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.