Monday, August 04, 2008

முடிவுரை

இதுவரை மக்களிடத்தில் பரவலாகக் காணப்படுகின்ற விலக்கப்பட்ட காரியங்களை முடிந்தவரை இங்கு கூறியுள்ளோம். எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் அவனுடைய திருப்பெயர்களின் மூலம் இறைஞ்சுவோமாக! அவன் நமக்கும் அவனுக்கும் நாம் மாறு செய்வதற்கும் இடையில் அரணாக இருக்கக்கூடிய இறையச்சத்தையும், அவனுடைய சுவனத்தின் பால் சேர்த்து வைக்கக்கூடிய வழிபாட்டையும் தருவானாக!

நம்முடைய பாவங்களையும், நம்முடைய காரியங்களில் நாம் வரம்பு மீறுவதையும் அவன் மன்னித்தருள்வானாக! அவன் விலக்கிய விலக்கல்களை விடுத்து அவன் ஹலாலாக்கியவற்றை மட்டும், அவன் அல்லாதவர்களை விடுத்து அவனுடைய அருளை மட்டும் நமக்குப் போதுமாக்கித் தருவானாக! நம்முடைய பாவங்களைக் கழுவி, நம்முடைய தவ்பாவை ஏற்றுக் கொள்வானாக! திண்ணமாக அவன் யாவற்றையும் செவியேற்பவனும் (அழைப்பவரின் அழைப்புக்கு) பதில் தருபவனும் ஆவான். மேலும் நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும் அவர்களுடைய குடும்பத்தினர் மற்றும் தோழர்கள் அனைவர் மீதும் அவனுடைய கருணையும் சாந்தியும் உண்டாவதாக! எல்லாப் புகழும் அகில உலகத்தின் அதிபதியாகிய அல்லாஹ்வுக்கே!

மீண்டும் ஒரு நல்லொழுக்கம் போதிக்கும் நூலுடன் சந்திக்கும் வரை.
உங்கள் அன்புள்ள jafarsafamarva

இந்த நூலை மென்னூலாக இறக்கம் செய்து கொள்ள இங்கே சுட்டவும்: http://islamkural.com/home/?page_id=1954

முஸ்லிமை வெறுத்தல்

முஸ்லிம்களுக்கு மத்தியில் உறவு முறிவை உருவாக்குவது ஷைத்தானின் சூழ்ச்சிகளில் ஒன்று. ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுகின்ற பெரும்பாலோர் மார்க்கம் அனுமதிக்காத காரணங்களுக்காகவெல்லாம் தம் சகோதர முஸ்லிமை வெறுக்கின்றனர். தங்களிடையே உள்ள உறவை முறித்துக் கொள்கின்றனர். ஒன்று கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட ஏதாவது கருத்து வேறுபாடு காரணமாக இருக்கலாம். அல்லது வேறு ஏதாவது அற்பமான காரணமாக இருக்கலாம்.

இந்த உறவு முறிவு நீண்ட காலத்திற்கு நீடிக்கும். சில சமயம், நான் உன்னிடம் பேசவே மாட்டேன் என சத்தியம் செய்து விடுகின்றனர். அவன் வீட்டு வாசல்படியில் கூட மிதிக்கக் கூடாதென சத்தியம் செய்கின்றனர். வழியில் அவனைக் கண்டால் புறக்கணித்து விடுகின்றனர். ஏதேனும் ஒரு சபையில் அவனை சந்தித்தால் அவனுக்கு முன்னால் பின்னால் இருப்பவரிடம் மட்டும் முஸாஃபஹா செய்து விட்டு அவனைத் தாண்டிச் சென்று விடுகின்றனர். முஸ்லிம் சமுதாயம் பலவீனமடைவதற்கு இதுவும் ஒரு காரணமாகும். இதனால் தான் இது விஷயத்தில் இஸ்லாமியச் சட்டமும், எச்சரிக்கையும் மிகக் கடுமையானதாக இருக்கின்றது.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது: 'தன் சகோதரனை மூன்று நாட்களுக்கு மேல் வெறுப்பது எந்த முஸ்லிமுக்கும் ஆகுமானதல்ல. அவ்வாறு மூன்று நாட்களுக்கு மேல் யாரேனும் வெறுத்து அந்த நிலையில் அவர் மரணமடைந்தால் நரகம் செல்வார்' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூதாவூத்)

அபூகராஷ் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது: 'ஒருவன் தன் சகோதரனை ஒரு வருடம் வெறுத்தால் அவன் அவனைக் கொலை செய்தவன் போலாவான்' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்: அதபுல் முஃப்ரத்.

முஸ்லிம்களுக்கு மத்தியில் உள்ள உறவைத் துண்டிப்பதினால் விளையும் தீங்குகளில் இறைவனுடைய மன்னிப்புக் கிடைக்காமல் போவது ஒன்றே போதும்.

'ஒவ்வொரு வாரமும் இருமுறை - திங்கள், வியாழன் ஆகிய இருநாட்களில் மனிதர்களின் செயல்கள் (இறைவனிடம்) எடுத்துக் காட்டப்படுகின்றன. அப்போது மூமினான ஒவ்வொரு அடியாருக்கும் மன்னிப்பு வழங்கப்படும். பகைத்துக் கொண்ட இருவரைத் தவிர. அவ்விருவரையும் விட்டு விடுங்கள் அல்லது அவ்விருவரின் விவகாரத்தை ஒத்திப் போடுங்கள் - அவ்விருவரும் சமாதானம் ஆகும் வரை!' என வானவர்களிடம் கூறப்படும். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி). நூல்: முஸ்லிம்

சண்டைப் போட்டுக் கொண்ட இருவரில் யார் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கொரி திருந்துகிறாரோ அவர் தன் நண்பரிடம் சென்று ஸலாம் சொல்ல வேண்டும். இப்படி அவர் நடந்து கொள்ளும் பட்சத்தில் அவருடைய நண்பர் அவரை (ஏற்க) மறுத்து விட்டால் - அவருடைய பொறுப்பு நீங்கி விடும். (அவர் மீது எந்தக் குற்றமும் இல்லை) மறுத்தவர் மீதே குற்றம் எஞ்சியிருக்கும்.

அபூஅய்யூப் அல் - அன்ஸாரி (ரலி) அறிவிக்கிறார்கள்: 'ஒருவர் தன் சகோதரனை மூன்று நாட்களுக்கு மேல் பகைத்துக் கொள்ளக் கூடாது. இருவரும் சந்திக்கும் போது ஒருவரை ஒருவர் புறக்கணித்துச் செல்லக் கூடாது. அவ்விருவரில் யார் முதலில் ஸலாம் சொல்கிறாரோ அவரே சிறந்தவர்' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

ஆனால் இவ்வாறு பகைத்துக் கொள்வதற்கு தொழுகையை விடுதல், மானக்கேடான காரியங்களில் பிடிவாதமாக இருத்தல் போன்ற மார்க்க ரீதியான காரணம் இருந்தால், அதே நேரத்தில் பகைத்துக் கொள்வது தவறிழைப்பவனுக்கு பலனளிக்கும் என்றிருந்தால் - அதாவது அவன் தன் தவறை உணர்ந்து சரியான நிலைக்குத் திரும்புவான் என்றிருந்தால் பகைத்துக் கொள்வது கடமையாகின்றது. ஆனால் பகைத்துக் கொள்வதால் தவறிழைத்தவன் மேலும் வரம்பு மீறிய போக்கையே மேற்கொள்கிறான், பாவம் செய்வதிலேயே பிடிவாதமாக இருக்கிறான் எனில் இந்த நேரத்தில் பகைத்துக் கொள்வது பொருத்தமாக இருக்காது. ஏனெனில் அதனால் மார்க்கம் விரும்புகின்ற நன்மை ஏற்படாது. மாறாக தீமையே அதிகரிக்கும். எனவே இதுபோன்ற சமயத்தில் அவனுக்குத் தொடர்ந்து அறிவுரை வழங்குவதும் நல்லுபதேசமும், நல்லுபகாரமும் செய்வதுமே ஏற்றமானதாகும்.

இன்ஷா அல்லாஹ் அடுத்த பதிப்பில் முடிவுரை.

முகத்தில் அடிப்பதும் சூடு போடுவதும்

'முகத்தில் அடிப்பதையும் முகத்தில் சூடு போடுவதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள்' என ஜாபிர் (ரலி) அறிவிக்கிறார்கள். (முஸ்லிம்)

முகத்தில் அடித்தல்: சில தந்தையர்களும், ஆசிரியர்களும் குழந்தைகளைத் தண்டிக்கும் போது கையால் அல்லது வேறு பொருளால் அவர்களின் முகத்தில் அறைந்து விடுகின்றனர். அதுபோலவே சிலர் தமது வேலைக்காரர்களை அடித்து விடுகின்றனர். இது ஹராமாகும். மேலும் எந்த முகத்தின் மூலம் அல்லாஹ் மனிதனைக் கண்ணியப்படுத்தி இருக்கின்றானோ அந்த முகத்தை இழிவுபடுத்துவதுமாகும். முகத்தில் அடிப்பது சிலவேளை முகத்திலுள்ள சில முக்கியப் புலன்களை இழக்கச் செய்துவிடும். அதனால் வருந்த வேண்டிய நிலை ஏற்படும். சிலபோது பழிக்குப் பழிவாங்க வேண்டிய நிலையும் உருவாகலாம்.

கால்நடைகளுக்கு முகத்தில் சூடு போடுதல்: பிராணியின் சொந்தக்காரன் தனது பிராணியை இனம் கண்டு கொள்வதற்காகவும் அல்லது அது காணாமல் போய்விட்டால் அவனிடம் திருப்பி ஒப்படைப்பதற்காகவும் அடையாளத்திற்காக கால்நடைகளின் முகத்தில் சூடு போடுகின்றனர். இது ஹராமாகும். மேலும் இது பிராணியின் முகத்தை அலங்கோலப்படுத்துவதும் பிராணியை வதைப்பதுமாகும். இவ்வாறு செய்வது எங்கள் குலத்தின் வழக்கமும், எங்கள் குலத்தின் விஷேச அம்சமுமாகும் என சிலர் வாதிட்டாலும் சரியே! ஆயினும் முகமல்லாத இடங்களில் அடையாளத்திற்காக சூடு போடுவது கூடும்.

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.

சபித்தல்

பெரும்பாலோர் கோபப்படும் பொழுது தமது நாவுகளைக் கட்டுப்படுத்த முடியாமல் உடனே சாபமிட்டு விடுகின்றனர். அந்த நேரத்தில் மனிதர்கள், உயிரினங்கள், திடப்பொருட்கள், காலங்கள், நாட்கள், நேரங்கள் யாவற்றையும் சபித்து விடுகின்றனர். இன்னும் சொல்வதானால் சிலவேளை தங்களையும் தங்கள் குழந்தைகளையும் கூட சபித்து விடுகின்றனர். மட்டுமல்ல கணவன் மனைவியையும் மனைவி கணவனையும் சபிக்கின்றனர். இது தீய ஆபத்தான செயலாகும்.

'....ஒரு மூமினை சபித்தவன் அவனை கொலை செய்தவன் போலாவான்' என்பது நபிமொழி. ஸாபித் பின் ழஹ்ஹாக் (ரலி) அவர்கள் அறிவிக்கும் இந்த ஹதீஸ் புகாரியில் உள்ளது.

பெண்கள் அதிகம் சபிக்கின்றார்கள். அதுவே அவர்கள் நரகில் நுழைவதற்குக் காரணமாக அமைகின்றது என்பதை நபி (ஸல்) அவர்களும் தெளிவுபடுத்தி உள்ளார்கள். அதுபோல சபிக்கின்றவர்கள் மறுமையில் பரிந்துரை செய்பவர்களாக இருக்க மாட்டார்கள். இதில் ஆபத்தானது என்னவெனில் அநியாயமாக ஒருவன் ஒருவனை சபித்தால் அவனது சாபம் அவன் மீதே திரும்பி விடுகின்றது. அந்த நேரத்தில் அவன் தனக்கெதிராக தானே இறையருளை விட்டும் தூரமாவதற்குப் பிரார்த்தித்தவனாகின்றான்.

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.

Backgam Mon எனும் ஒருவகை சூதாட்டம்

மக்களிடையே பரவலாக வழக்கத்திலுள்ள பெரும்பாலான விளையாட்டுகள் ஹராமான காரியங்களை உள்ளடக்கியுள்ளன. அதில் ஒன்று Backgam Mon எனும் ஒருவகை விளையாட்டாகும். இதை விளையாட ஆரம்பித்தால் இது போன்ற பல விளையாட்டுகளுக்கு இது இட்டுச் செல்லும். பல சூதாட்டங்களுக்கு வழி திறந்து விடுகின்ற Backgam Mon எனும் இந்த விளையாட்டு குறித்து நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு எச்சரித்துள்ளார்கள்: 'யார் Backgam Mon எனும் விளையாட்டை விளையாடுகின்றாரோ அவர் பன்றியின் இறைச்சியிலும் இரத்தத்திலும் கையை நுழைத்தவராவார். அறிவிப்பவர்: புரைதா (ரலி), நூல்: முஸ்லிம்.

'Backgam Mon விளையாட்டை விளையாடியவர் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மாறு செய்து விட்டார்' என்பதும் நபிமொழி. அறிவிப்பவர்: அபூமூஸா (ரலி), நூல்: அஹ்மத்

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.

மரணசாசனத்தின் மூலம் தீங்கிழைத்தல்

பிறருக்குத் தீங்கிழைத்தல் என்பதும் இல்லை, பிறரால் தீங்கிற்கு உள்ளாவதென்பதும் இல்லை என்பது இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படை அம்சமாகும். அந்த அடிப்படையில் ஒருவன் தனது வாரிசுகளுக்கு (மரணசாசனத்தின் மூலம்) தீங்கிழைப்பது தடை செய்யப்பட்டதாகும். இவ்வாறு செய்கின்றவனுக்கு நபிமொழியில் எச்சரிக்கை வந்துள்ளது.

'யாரேனும் (பிறருக்கு) தீங்கிழைத்தால் அல்லாஹ் அவனுக்குத் தீங்கிழைப்பான். யாரேனும் (பிறருக்கு) சிரமம் கொடுத்தால் அல்லாஹ் அவருக்கு சிரமம் கொடுப்பான்' என்பது நபிமொழி. (அஹ்மத்)

மரணசாசனத்தின் மூலம் தீங்கிழைத்தல் என்பதற்கு பல முறைகள் உள்ளன. தனது வாரிசுகளில் ஒருவருக்கு அவருடைய (சொத்து) உரிமையைத் தடுத்தல், அல்லது ஒரு வாரிசுக்கு ஷரீஅத் எவ்வளவு நிர்ணயம் செய்திருக்கின்றதோ அதற்கு மாற்றமாக அவருக்கு மரணசாசனம் செய்தல், அல்லது தனது சொத்தில் மூன்றில் ஒரு பகுதிக்கு மேல் மரணசாசனம் செய்தல்.

எந்த நாடுகளில் மக்கள் இஸ்லாமிய ஷரீஅத் அடிப்படையில் இயங்கக்கூடிய நீதிமன்றங்களுக்குக் கட்டுப்படுதல் என்பது இல்லையோ அந்த நாடுகளில் (இந்தியாவைத் தவிர) ஒரு வாரிசுதாரர் அல்லாஹ் அவருக்கு அளித்த (சொத்து) உரிமையை நீதிமன்றங்களின் மூலமாக பெறுவது சிரமமான காரியமாகும். காரணம் அந்நீதி மன்றங்களில் ஷரீஅத் சட்டத்திற்கு மாற்றமாக மனிதர்களால் உருவாக்கப்பட்ட சட்டங்களின் அடிப்படையிலேயே தீர்ப்புகள் வழங்குகின்றன. மேலும் ஷரீஅத்திற்கு மாற்றமாக வழக்கறிஞரால் பதிவு செய்யப்பட்ட அநீதியான மரணசாசனத்தையே செல்லுபடியாக்கும்படி அந்த நீதிமன்றங்கள் உத்தரவிடுகின்றன. அவர்கள் கரங்கள் எழுதியதும் அவர்களுக்குக் கேடுதான். அவர்கள் சம்பாதித்ததும் அவர்களுக்குக் கேடுதான்.

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.

அண்டை வீட்டாருக்குத் தீங்கிழைத்தல்

திருக்குர்ஆனில் அல்லாஹ் அண்டை வீட்டார் குறித்து நமக்கு அறிவுரை கூறியுள்ளான்: "மேலும் நீங்கள் அல்லாஹ்வை வணங்குங்கள். அவனுக்கு எதையும் இணையாக்காதீர்கள். தாய், தந்தையரிடம் நல்ல முறையில் நடந்துக் கொள்ளுங்கள். மேலும் உறவினர்கள், அநாதைகள், வறியவர்கள், உறவினரான அண்டை வீட்டார், அந்நியரான அண்டை வீட்டார், பக்கத்திலிருக்கும் நண்பர், வழிப்போக்கர், மற்றும் உங்கள் கைவசத்திலுள்ள அடிமைகள் ஆகியோருடன் நல்லவிதமாக நடந்து கொள்ளுங்கள். திண்ணமாக அல்லாஹ் வீண் பெருமையும் கர்வமும் கொண்டவர்களை நேசிப்பது இல்லை" (4:36).

அண்டை வீட்டாருக்குத் தொல்லைத் தருவது விலக்கப்பட்ட காரியமாகும். காரணம் அண்டை வீட்டாருக்குச் செய்ய வேண்டிய உரிமைகள் கடமைகள் மகத்தானவை. அபூஷுரைஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'அவன் முஃமினாக மாட்டான், அவன் முஃமினாக மாட்டான், அவன் முஃமினாக மாட்டான் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதும், அல்லாஹ்வின் தூதரே! யார் அவன்? என்று கேட்கப்பட்டது. அதற்கு, எவனுடைய தொல்லைகளை விட்டும் அவனுடைய அண்டை வீட்டார் நிம்மதியாக இல்லையோ அவனே!' என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். (புகாரி)

ஒருவர் நல்ல முறையிலோ அல்லது தீய முறையிலோ நடந்து கொள்கிறார் என்பதற்கு, அவரைப் பற்றி அண்டை வீட்டார் புகழ்ந்துரைப்பதை அல்லது இகழ்ந்துரைப்பதை அளவுகோலாக நபி (ஸல்) அவர்கள் ஆக்கியுள்ளார்கள்.

இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது: 'ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே! நான் நல்ல முறையிலோ அல்லது தீய முறையிலோ நடந்து கொண்டேன் என்பதை எப்படி அறிந்து கொள்வது? எனக் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், நீ நல்ல முறையில் நடந்து கொண்டாய் என உன்னுடைய அண்டை வீட்டார் கூறுவதை நீ செவியேற்றால் நீ நல்ல முறையில் நடந்து கொண்டவனாவாய். நீ தீய முறையி நடந்து கொண்டாய் என உனது அண்டை வீட்டார் சொல்வதை நீ கேள்விப்பட்டால் நீ தீய முறையில் நடந்து கொண்டவனாவாய்' என்று கூறினார்கள். (அஹ்மத்)

அண்டை வீட்டாருக்கு தொல்லை தருதல் என்பதற்கு பல முறைகள் உள்ளன. அவற்றுள் சில: அண்டை வீட்டாருடன் இணைந்த பொதுச் சுவரில் ஒரு கட்டையை நடுவதைத் தடுத்தல், சூரிய வெளிச்சத்தையும், காற்றையும் அவருக்குத் தடுக்கும் வண்ணம் அவரின் அனுமதியின்றி கட்டிடத்தை உயர்த்திக் கட்டுதல், அவர் வீட்டுக்கு நேராக ஜன்னலைத் திறந்து வைத்து அதன் வழியாக அவருடைய வீட்டின் தனிப்பட்ட விஷயங்களை - நிகழ்ச்சிகளை எட்டிப் பார்த்தல், தட்டுதல், கத்துதல் போன்ற இடையூறு தரும் சப்தங்களால் அவருக்குத் தொல்லை தருதல் - குறிப்பாக தூங்கக்கூடிய மற்றும் ஓய்வெடுக்கக்கூடிய நேரங்களில், அல்லது அவருடைய குழந்தையை அடித்தல், அவருடைய வாசலில் குப்பையை வீசுதல் போன்றவற்றால் அவருக்குத் தொல்லைகள் தருதல்.

அண்டை வீட்டார் விஷயத்தில் செய்யும் பாவம் மிகப் பெரிய பாவமாகும். அவ்வாறு செய்பவனுக்கு அதன் பாவம் பன்மடங்காகின்றது. ஒருவன் பத்து பெண்களுடன் விபச்சாரம் செய்வது தனது அண்டை வீட்டாரின் மனைவியிடம் விபச்சாரம் செய்வதை விட குறைந்த குற்றமாகும்.... அது போல ஒருவன் பத்து வீடுகளில் திருடுவது அவனுடைய அண்டை வீட்டில் திருடுவதை விட குறைந்த குற்றமாகும் என்பது நபிமொழி. (அதபுல் முஃப்ராத்).

ஒரு சில துரோகிகள் இரவில் தமது அண்டை வீட்டார் இல்லாத சமயத்தை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு அவருடைய வீட்டில் நுழைந்து மோசம் பண்ணி விடுகின்றனர். துன்பம் மிகுந்த வேதனையுடைய நாளில் இத்தகையோருக்கு அழிவு இருக்கிறது.

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.

ஒட்டுக் கேட்டல்

அல்லாஹ் கூறுகிறான்: "துருவித் துருவி ஆராயாதீர்கள்" (49:12). இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'யாரேனும் மக்களின் செய்தியை அவர்கள் விரும்பாத நிலையில் ஒட்டுக் கேட்டால் மறுமையில் அவனுடைய காதுகளில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றப்படும்' நபிமொழி (தப்ரானி)

அவர்களுக்கு தெரியாமல் அவர்களுடைய செய்தியை ஒட்டுக் கேட்டு அவர்களுக்கு இடைஞ்சலை ஏற்படுத்துவதற்காக பிறரிடம் எடுத்துச் சொன்னால் அவன் துருவித் துருவி ஆராய்தல் (அல்லது ஒட்டுக் கேட்டல்) எனும் பாவத்துடன் (கோள் சொல்லுதல் எனும்) இன்னொரு பாவத்தையும் செய்தவனாவான். 'கோள் சொல்பவன் சுவர்க்கம் செல்ல மாட்டான்' என்பது நபிமொழி. (புகாரி)

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.

சிறுநீரிலிருந்து தற்காத்துக் கொள்ளாதிருத்தல்

இறைமார்க்கத்தின் சிறப்பம்சம் என்னவெனில் மனிதனுடைய விவகாரங்களைச் சீர் செய்யக்கூடிய அனைத்தையும் அது கூறியுள்ளது. அவற்றில் ஒன்று அசுத்தத்தை நீக்குவது. அதனால் தான் தண்ணீரைக் கொண்டு சுத்தம் செய்வதும், கற்களைக் கொண்டு சுத்தம் செய்வதும் சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமா? தூய்மையும் சுத்தமும் எப்படி ஏற்படுமென்ற விபரத்தையும் இம்மார்க்கம் விவரித்துள்ளது. மக்களில் சிலர், அசுத்தத்தை நீக்குவதில் கவனக் குறைவாக இருக்கின்றனர். அதுதான் ஆடையிலோ, உடம்பிலோ பட்டுவிடுவதற்குக் காரணமாக இருக்கின்றது. மட்டுமல்ல தொழுகை கூடாமல் போவதற்குக் காரணமும் அதுதான். மேலும் கப்ரு வேதனைக்கான காரணங்களில் அதுவும் ஒன்றாகும் என்று நபி (ஸல்) அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது: 'நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் ஒரு தோட்டத்தின் பக்கமாகச் சென்று கொண்டிருந்த போது கப்றில் வேதனை செய்யப்படும் இரண்டு மனிதர்களின் சப்தத்தைச் செவியுற்றார்கள். அப்போது இவ்விருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள். (ஆனால்) ஒரு பெரிய விஷயத்திற்காக இவ்விருவரும் வேதனை செய்யப்படவில்லை என்று கூறிவிட்டு, ஆம்! (இதைத் தொடர்ந்து வேறொரு அறிவிப்பில் 'அது பெரிய விஷயம் தான்' என்று வந்துள்ளது) அவ்விருவரில் ஒருவர் சிறுநீர் கழிக்கும் போது (சிறுநீர் துளி தன்னில் படாமல்) பேணுதலாக இருக்கவில்லை. மற்றொருவர் கோள் சொல்லித் திரிபவராக இருந்தார் என்று கூறினார்கள். (புகாரி) இன்னும் சொல்வதானால், 'பெரும்பாலும் கப்ரு வேதனை சிறுநீர் விஷயத்தில் பேணுதல் இல்லாதனாலேயே ஏற்படுகிறது' எனவும் நபி (ஸல்) அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

சிறுநீரிலிருந்து தற்காத்துக் கொள்ளாதிருத்தல் என்பது பின்வரும் அனைத்து நிலைகளையும் உள்ளடக்கும். ஒருவன் சிறுநீர் கழிக்கும் போது அது முழுமையாக வெளியேறி விடுவதற்கு முன்பே அவசர அவசரமாக எழுந்து விடுதல். அல்லது சிறுநீர் கழிக்கும் போது அது தன் மீது தெறிக்கும் விதத்தில் அல்லது தன் பக்கம் அது திரும்பி வரும் இடத்தில் அமர்ந்து சிறுநீர் கழித்தல், அல்லது சிறுநீர் கழித்து விட்டு தண்ணீரால் அல்லது கல், காகிதம் போன்றவற்றால் சுத்தம் செய்யாமல் எழுந்து விடுதல், அல்லது அரைகுறையாக சுத்தம் செய்தல்.

இன்று நமது காலத்தில் காஃபிர்கள் செய்வது போன்று செய்யும் நிலை ஏற்பட்டிருக்கிறது. எவ்வாறெனில் சில கழிப்பிடங்களில் சிறுநீர் கழிப்பதற்கென சுவரை ஒட்டி சில இடங்கள் இருக்கும். கதவுகள் இல்லாமல் அவை திறந்து காணப்படும். அங்கு நம்மவர்கள் வருவோர் போவோர் முன்னிலையில் கொஞ்சமும் வெட்கமின்றி சிறுநீர் கழிக்கின்றனர். பிறகு சுத்தம் செய்யாமலேயே ஆடையணிந்து கொண்டு சென்று விடுகின்றனர். இவர்கள் ஒரே நேரத்தில் மோசமான விலக்கப்பட்ட இரு காரியங்களை செய்கின்றனர். ஒன்று: மக்களின் பார்வையை விட்டும் தம் மானத்தை மறைப்பதில்லை. இரண்டு: தம்மீது சிறுநீர் படுவதிலிருந்து காத்துக் கொள்வதில்லை, சுத்தம் செய்வதில்லை.

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.

கப்ரின் மீது அமர்தல், மிதித்தல், அடக்கஸ்தலங்களில் மல ஜலம் கழித்தல்.

'உங்களில் ஒருவர் நெருப்பின் மீது அமர்ந்து அது அவருடைய ஆடையை எரித்து தோலையும் பதம் பார்ப்பது கப்ரின் மீது அமர்வதை விட சிறந்தது' என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்.

கப்ருகளை மிதித்தல்: சிலர் இவ்வாறு செய்கின்றனர். இறந்தவர்களை அடக்கம் செய்யும் போது நீங்கள் அவர்களைக் காணலாம். அருகிலுள்ள கப்ருகளை மிதிப்பதை சற்றும் பொருட்படுத்த மாட்டார்கள். சிலபோது செருப்புக் கால்களுடன் மிதிப்பார்கள் - அங்கு அடக்கம் செய்யப்பட்டோருக்கு எந்த மரியாதையையும் கொடுக்காமல் இவ்வாறு செல்வார்கள். இது எவ்வளவு பெரிய பாவம் என்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியுள்ளார்கள்: 'நெருப்பின் மீதோ அல்லது (கூரிய) வாளின் மீதோ நான் நடப்பது அல்லது எனது செருப்பை எனது காலுடன் சேர்த்து நான் தைத்து விடுவது ஒரு முஸ்லிமின் கப்ரின் மீது நான் நடப்பதை விடவும் எனக்கு விருப்பமானதாகும்' அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி), நூல்: முஸ்லிம்.

அப்படியானால் அடக்கச்தலத்தைக் கைப்பற்றி அதில் வியாபார நோக்குடன் கடைகளை அல்லது வீடுகளைக் கட்டுபவரின் நிலை என்ன? சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

கப்ருகளில் மல ஜலம் கழிப்பது: சில துர்ப்பாக்கியசாலிகள் இதைச் செய்கின்றனர். அவர்களுக்கு மல ஜலத்தினுடைய தேவை ஏற்பட்டால் சுவர் ஏறிக் குதித்து அல்லது வேறு வழியாக அடக்கஸ்தலத்திற்குள் நுழைந்து தனது அசுத்தம் மற்றும் துர்நாற்றத்தின் மூலம் அங்கு அடக்கப்பட்டிருப்பவர்களுக்கு துன்பம் தருகின்றனர்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'அடக்கஸ்தலங்களில் மல ஜலம் கழிப்பதும், கடைவீதிக்கு மத்தியில் (வெட்கமின்றி) மல ஜலம் கழிப்பதும் என்னைப் பொருத்த வரையில் ஒரு பொருட்டே அல்ல (இரண்டும் சமம் தான்.) (இப்னு மாஜா) அதாவது கடைவீதியில் மக்களின் முன்னிலையில் மானம் திறந்த நிலையில் மல ஜலம் கழிப்பது எந்த அளவு மோசமானதோ, அதுபோல அடக்கஸ்தலத்தில் மல ஜலம் கழிப்பதும் மோசமான செயலாகும். இன்னும் சிலர் அடக்கஸ்தலங்களில் குறிப்பாக பாழடைந்த மற்றும் சுற்றுப்புறச் சுவர்கள் இடிந்து விட்ட அடக்கஸ்தலங்களில் அசுத்தங்களையும், குப்பைக் கூழங்களையும் வீசுகின்றனர். நபிமொழியில் வந்திருக்கின்ற எச்சரிக்கையில் இவர்களுக்கும் பங்குண்டு. அடக்கஸ்தலங்களைத் தரிசிக்கச் செல்லும் போது கவனிக்க வேண்டிய ஒழுக்கங்களில் இதுவும் ஒன்றாகும். அதாவது கப்ருகளுக்கு மத்தியில் செல்ல நாடும் போது பாதணிகளைக் கழற்றி விட வேண்டும்.

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.

கனவில் பொய்யுரைத்தல்

சிலர் காணாதக் கனவுகளைக் கண்டதாக இட்டுக்கட்டிக் கூறுகின்றனர். மக்களுக்கு மத்தியில் நற்பெயரையோ, சிறப்பையோ பெறுவதற்காக, அல்லது பொருளாதார இலாபம் பெறுவதற்காக அல்லது தம் எதிரிகளை அச்சுறுத்துவதற்காக இன்னும் இதுபோன்ற நோக்கங்களுக்காக இவ்வாறு செய்கின்றனர். பெரும்பாலான பாமரர்களுக்கு கனவுகளில் அதிக நம்பிக்கையும் ஈடுபாடும் உள்ளது. அதனால் இப்பொய்க் கனவுகள் மூலம் அவர்கள் ஏமாற்றப்படுகிறார்கள். காணாத கனவுகளைக் கண்டதாகக் கூறுகின்றவர்களுக்கு ஹதீஸ்களில் கடுமையான எச்சரிக்கை வந்துள்ளது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'ஒருவன் தன்னுடைய தந்தையை விடுத்து வேறொருவருடன் தன்னை இணைத்துச் சொல்வதும், தான் காணாதக் கனவைக் கண்டதாகச் சொலவதும், அல்லாஹ்வின் தூதர் கூறாததைக் கூறியதாகச் சொல்வதும் மிகப்பெரும் அவதூறாகும்' அறிவிப்பவர்: வாஸிலா பின் அஸ்கஃ (ரலி), நூல்: புகாரி.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது: 'தாம் காணாத கனவைக் கண்டதாக கூறுபவர் (மறுமையில்) இரண்டு கோதுமை மணிகளைச் சேர்த்துக் கட்டுமாறு வற்புறுத்தப்படுவார். அவரால் அதைக் கட்ட முடியாது என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்' (புகாரி). இரண்டு கோதுமை மணிகளைச் சேர்த்துக் கட்டுவதென்பது அசாத்தியமான காரியமாகும். செய்த (பாவத்)தைப் போலவே தண்டனையும் இருக்கும்.

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.

உயிருள்ளவற்றின் உருவங்களை வரைதல்

ஆடைகள், சுவர்கள், காகிதங்கள் போன்றவற்றில் உயிருள்ளவற்றின் உருவங்களைத் தீட்டுவது ஹராமாகும். 'மறுமையில் அல்லாஹ்விடத்தில் கடுமையான வேதனைக்குரியவர்கள் உருவங்களைத் தீட்டுபவர்களே' என்பது நபிமொழி. அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி), நூல்: புகாரி.

'நான் படைப்பதைப் போன்று படைக்க முற்படுபவனை விட அநியாயக்காரன் யார் இருக்க முடியும்? ஒரு வித்தையேனும் அல்லது ஒரு சிறு எறும்பையேனும் அவர்கள் படைக்கட்டுமே! (முடியுமா?)' என அல்லாஹ் கூறுவதாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி, முஸ்லிம்.

'உருவங்கள் வரையக் கூடியவர்கள் அனைவரும் நரகம் செல்வர். அல்லாஹ் அவன் வரைந்த ஒவ்வொரு உருவத்துக்கும் உயிரைக் கொடுப்பான். பிறகு அது அவனை நரகில் வேதனை செய்யும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். எனவே நீ வரைந்து தான் ஆக வேண்டுமென்றால் மரங்களையும், உயிரற்றவைகளையும் வரைவீராக!' என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம்).

இந்த நபிமொழிகள் யாவும் உயிருள்ள மனிதர்கள் மற்றும் ஏனைய உயிரினங்களின் - அவற்றுக்கு நிழல் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி - உருவங்களை வரைவது ஹராம் என அறிவிக்கின்றன. அவ்வுருவங்கள் அச்சிடப்பட்டாலும் சரி, வரையப்பட்டாலும் சரி, குடைந்தெடுக்கப்பட்டாலும் சரி, பொறிக்கப்பட்டாலும் சரி, செதுக்கப்பட்டாலும் சரி, அல்லது அச்சில் வார்த்தெடுக்கப்பட்டாலும் சரி ஹராம் தான். இவ்வனைத்தையும் உள்ளடக்கும் வகையில் ஹதீஸ்கள் பொதுவாக வந்துள்ளன.

முஸ்லிமைப் பொறுத்தவரையில் மார்க்க ஆதாரத்துக்கு அவன் கீழ்ப்படிய வேண்டும். உருவங்கள் வரைவதிலிருந்து தவிர்ந்து கொள்ள வேண்டும். அதை நான் வணங்கவா போகிறேன்? அதற்கு நான் சிரம் பணியவா போகிறேன்? என்று குதர்க்கம் பேசக் கூடாது. நம்முடைய இந்தக் காலத்தில் உருவப்படங்கள் பல்கிப் பெருகியிருப்பதன் விளைவால் ஏற்பட்ட ஒரே ஒரு தீமையை மட்டும் ஒரு புத்திசாலி தெளிந்த நோக்குடன் சிந்தித்துப் பார்த்தால் இதை ஏன் ஷரீஅத் தடை செய்திருக்கின்றது என்பதன் தத்துவம் தெரியவரும். அது இதுதான், அதனால் பெரும் தீமைகள் விளைகின்றன. உணர்ச்சிகள் தூண்டப்படுகின்றன, இச்சைகள் கிளரப்படுகின்றன. உண்மையைச் சொல்வதானால் சில உருவப்படங்களின் காரணமாக மானக்கேடான காரியங்களில் வீழ்ந்திட நேரிடுகின்றது. (ஏன் ஏக இறைவனை விடுத்து உருவங்களை வழிபடுவதன் பால் இந்த உருவ(பட)ங்களே இழுத்துச் செல்கின்றன என்றால் அது மிகையாகாது.)

எனவே ஒரு முஸ்லிம் உயிருள்ளவற்றின் உருவப்படங்களை தன் வீட்டில் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ள கூடாது. அவற்றை அகற்றி விடுவது அவசியமாகும். காரணம் அவனுடைய வீட்டில் மலக்குகள் நுழைவதற்கு அது தடையாக ஆகிவிடக் கூடாது என்பதற்காக. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'நாய் மற்றும் உருவப்படங்கள் உள்ள வீட்டில் வானவர்கள் நுழையமாட்டார்கள்' அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி.

சில வீடுகளில் உருவச் சிலைகளைக் காணலாம். அவற்றுள் சில, காஃபிர்கள் வணங்கக் கூடிய தெய்வங்களாக உள்ளன. இவை அன்பளிப்பாகக் கடைத்துள்ளன, அலங்காரத்திற்காக வைத்துள்ளோம் என்று கூறுகின்றனர். மற்றவைகளை விட இவை கடுமையான ஹராமாகும். அதுபோல சுவரில் மாட்டப்படாத உருவப்படங்களை விட சுவரில் மாட்டப்பட்ட உருவப்படங்கள் கடுமையான ஹராமாகும். ஏனெனில் எத்தனையோ உருவப்படங்கள் மதிப்பு, மரியாதைக்கு இட்டுச் செல்வதைப் பார்க்கிறோம். எத்தனையோ உருவப்படங்கள் மறந்து போன துக்கத்தையும், துயரத்தையும் மீண்டும் ஞாபகப்படுத்துகின்றன. எத்தனையோ உருவப்படங்கள் முன்னோர்கள் குறித்து பெருமையடிப்பதன் பால் இட்டுச் செல்கின்றன. மேலும் உருவப்படங்களை ஞாபகார்த்தமாக வைத்திருக்கிறோம் என்றும் கூற முடியாது. ஏனெனில் உண்மையில் முஸ்லிமான நண்பர், உறவினர் தொடர்பான உள்ளத்தின் உண்மையான நினைவு கூறல் என்பது அவருக்காக மன்னிப்பையும் அருளையும் வேண்டிப் பிரார்த்திப்பதாகும்.

ஆகவே ஒரு முஸ்லிம் இத்தகைய உருவங்களை அகற்றுவதோ அல்லது அழிப்பதோ அவசியமாகும். ஆனால் அப்படி அகற்றுவது முடியாத காரியமாக இருந்தாலேத் தவிர! அதில் அளவு கடந்த சிரமம் இருந்தாலே தவிர! உதாரணமாக சரக்குகள் உள்ள பாக்கெட்டுகள், கேன்கள், டின்கள், பயனுள்ள புத்தகங்கள், அகராதிகள் போன்ற பல்வேறு பொருட்களில் உருவங்களைப் போடுவது இன்று உலகெங்கும் பரவியுள்ள தீமையாகி விட்டது! என்றாலும் அவற்றை நீக்குவதற்கு முடிந்த அளவு முயற்சிக்க வேண்டும். சில பொருட்களிலுள்ள தவறான படங்களையும் தவிர்க்க வேண்டும். அல்லது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

சில அவசியத் தேவைகளுக்காக உருவப்படங்களைப் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்வதில் தவறில்லை. உதாரணமாக பாஸ்போர்ட், அடையாள அட்டை போன்ற அரசு ஆவணங்களில் உள்ள உருவங்களைப் போல. சில அறிஞர்கள், மதிப்பளிக்கப்படாமல் கால்களால் மிதிபடக்கூடிய உருவங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளனர். அல்லாஹ் கூறுகிறான்: "உங்களால் முடிந்த வரை அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்" (64:16).

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.

சிகைக்கு கருப்பு சாயம் பூசுதல்

சரியாகச் சொல்வதென்றால் இது ஹராமாகும். ஏனெனில் இது குறித்து நபிமொழியில் எச்சரிக்கை வந்துள்ளது. 'புறாக்களின் (கருத்த) மார்புப் பகுதியைப் போல் சிகைக்கு கருப்பு சாயம் பூசுகின்ற ஒரு கூட்டம் இறுதிக் காலத்தில் தோன்றுவர். அவர்கள் சுவர்க்கத்தின் வாடையை நுகர மாட்டார்கள்' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: அபூதாவூத், நஸயீ.

முடி நரைத்தோர்களில் பெரும்பாலோரிடம் இச்செயல் பரவலாகக் காணப்படுகின்றது. தங்கள் நரையை கருப்புச்சாயம் பூசி அவர்கள் மாற்றி விடுகின்றனர். இவர்களது இச்செயல் பல தீமைகளின் பால் இட்டுச் செல்கின்றது. ஏமாற்றுதல், அல்லாஹ் படைத்த அமைப்பை மாற்றுதல், தன்னுடைய எதார்த்த நிலையை மறைத்து பொய்யான தோற்றத்தைக் காட்டுதல் ஆகியவை அத்தீமைகளில் சில. மனிதனுடைய பண்பாட்டின் மீது ஒரு தீய தாக்கத்தை இது ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. சிலபோது இதனால் ஒரு வகையான ஏமாற்றத்திற்குக் கூட அவன் ஆளாகலாம்.

நபி (ஸல்) அவர்கள் தமது நரையை மருதாணி போன்றவற்றால் - அதாவது மஞ்சள் அல்லது சிகப்பு அல்லது பழுப்பு நிறத்தால் - மாற்றியிருக்கிறார்கள் என்பதற்கு ஆதாரப்பூர்வமான ஹதீஸ் உள்ளது.

'மக்கா வெற்றி கொள்ளப்பட்ட தினத்தில் நபி (ஸல்) அவர்களிடம் அபூகுஹாஃபா (அபூபக்கர் (ரலி)யின் தந்தை) கொண்டு வரப்பட்டார்கள். அவருடைய தலையும், தாடியும் அதிக வெளுப்பின் காரணத்தால் வெண்ணிறப் பூக்கள், காய்கள் கொண்ட செடியைப் போன்று வெளுத்து போய் இருந்தது. (இதைக் கண்ட) நபி (ஸல்) அவர்கள், இந்த நரையை எதாவது வண்ணம் கொண்டு மாற்றுங்கள். கருப்பைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்' எனக் கூறினார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்.

இவ்விஷயத்தில் பெண்ணும் ஆணைப் போன்றுதான். அவளும் தனது முடிக்கு கருப்புச்சாயம் பூசக்கூடாது என்பதே சரியான முடிவாகும்.

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.

நடை, உடை, பாவனையில் ஆண், பெண்ணுக்கும் பெண், ஆணுக்கும் ஒப்பாகுதல்.

அல்லாஹ் மனிதர்களுக்கு ஏற்படுத்தியிருக்கின்ற இயற்கை சுபாவம் என்னவெனில் ஒரு ஆண், எந்த ஆண்மையின் மீது அல்லாஹ் அவனைப் படைத்தானோ அந்த ஆண்மையையும் ஒரு பெண், எந்தப் பெண்மையின் மீது அல்லாஹ் அவளைப் படைத்தானோ அந்தப் பெண்மையையும் பேணி பாதுகாப்பதாகும். இது, மனிதர்களின் வாழ்க்கை எந்தக் காரண காரியங்களைக் கொண்டல்லாமல் சீர் பெற முடியாதோ அந்தக் காரணக் காரியங்களில் ஒன்றாகும்.

எனவே ஆண்கள் பெண்களுக்கும் பெண்கள் ஆண்களுக்கும் ஒப்பாக பாவித்து நடப்பது இயற்கைக்கு முரணானதாகும். மேலும் இது குழப்பத்தின் வாயில்களைத் திறந்து விடுவதாகவும், சமுதாயத்தில் பிளவு ஏற்படுவதற்குக் காரணமாகவும் அமையும். இச்செயல் மார்க்கத்திலும் விலக்கப்பட்டதாகும். ஏனெனில் ஒரு செயலைச் செய்வது சாபத்திற்குரியது என மார்க்க ஆதாரம் கூறினால் அது ஹராம் என்பதையே குறிக்கும். மட்டுமல்ல அது பெரும் பாவமுமாகும். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கக்கூடிய ஒரு நபிமொழியில் இவ்வாறு வந்துள்ளது: 'ஆண்களில் பெண்களைப் போல் ஒப்பனை செய்து கொள்பவர்களையும் பெண்களில் ஆண்களைப் போல் ஒப்பனை செய்து கொள்பவர்களையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சபித்துள்ளார்கள்' (புகாரி)

'பெண்களைப் போலவே நடக்கும் ஆண்களையும் ஆண்கள் போல நடக்கும் பெண்களையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சபித்துள்ளார்கள்' எனவும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி, திர்மிதி)

ஒப்புமை என்பது அங்க அசைவுகளிலும் இருக்கலாம். நடையிலும் இருக்கலாம். உதாரணமாக உடலில், நடையில், பேச்சில் பெண்களைப் போல் நடந்து கொள்ளுதல். மேலும் ஒப்புமை உடையிலும் இருக்கலாம். அதுபோல பெண்கள் அணியக்கூடிய நகைகள், வளையல்கள், காதணிகள், காலணிகள் போன்றவற்றை ஆண் அணிவதும் கூடாது - ஹிப்பி வகையறாக்களிடம் இந்நிலை பரவி உள்ளதைப் போல. அதுபோன்றே ஆண்களுக்குரிய ஆடையை பெண்கள் அணிவதும் ஆகுமானதன்று. மாறாக பெண்கள் உடை, நடை, பாவனைகளில் ஆண்களுக்கு மாறாக நடந்து கொள்வது கடமையாகும். இதர்கு பின்வரும் நபிமொழி சான்றாகும்.

பெண்ணுடைய ஆடையைஅணிகின்ற ஆணையும் ஆணுடைய ஆடையை அணிகின்ற பெண்ணையும் அல்லாஹ் சபிப்பானாக! (நபிமொழி) அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: அபூதாவூத்.

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.

ஒட்டு முடி வைத்தல்

அபூபக்ருடைய மகள் அஸ்மா (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது: 'ஒரு பெண் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! என்னுடைய மகள் புதிதாக மணமுடிக்கப் பட்டிருக்கிறாள். அவளது தலையில் புண் ஏற்பட்டு முடி கொட்டுகிறது. நான் அவளுக்கு ஒட்டு முடி வைக்கலாமா? எனக் கேட்டாள். அதற்கவர்கள், ஒட்டு முடி வைப்பவளையும், வைத்து விடுபவளையும் அல்லாஹ் சபிப்பானாக! எனக் கூறினார்கள்' (முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் ஒரு பெண் தனது தலை முடியுடன் வேறு முடியை வைத்துக் கொள்வதைக் கண்டித்துள்ளார்கள் என ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம்)

இன்று நம்முடைய காலத்தில் விக் (Wig) என்று சொல்லப்படக்கூடிய 'டோபா' வையும் ஒட்டு முடிக்கு உதாரணமாகச் சொல்லலாம். மேலும் இக்காலத்தில் ஒட்டு முடி (சவுரி) வைத்து விடும் பெண்களுக்கு முடி ஒப்பனைக்காரிகள் என்று கூறப்படுகிறது. மேலும் அழகு நிலையங்களில் (Beauty Parlour) பெண்கள் அலங்கரித்துக் கொள்ளக்கூடிய அனைத்தும் விலக்கப்பட்டவைகளைச் சேர்ந்ததாகும். மட்டுமல்ல துர்பாக்கியசாலிகளான நடிகர், நடிகைகள் சினிமாக்களிலும், நாடகங்களிலும் பயன்படுத்தக்கூடிய டோபாக்களும் இதில் அடங்கும்.

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.

பெண்கள் சிறிய, மெல்லிய இறுக்கமான ஆடை அணிதல்

இன்றைய காலத்தில் நம்முடைய எதிரிகள் நவீன, நவநாகரீக உடைகளை பல்வேறு மாடல்களிலும், டிசைன்களிலும் தயாரித்து முஸ்லிம்களுக்கு மத்தியில் பரவவிட்டுள்ளதன் மூலம் நமக்கெதிராகப் போர் பிரகடனம் செய்துள்ளனர். இவ்வுடைகள் சிறிய அளவிலோ, மெல்லியதாகவோ அல்லது இறுக்கமானதாகவோ இருப்பதால் மறைக்கப்பட வேண்டிய அங்கங்களை மறைப்பதில்லை. இவற்றில் பெரும்பாலான உடைகளை பெண்கள் தம் சக பெண்களுக்கு மத்தியிலும் நெருங்கிய உறவினர்களுக்கு மத்தியிலும் கூட அணிவது கூடாது. இத்தகைய உடைகள் பெண்களிடம் இறுதிக்காலத்தில் தோன்றுமென்பதை நபி (ஸல்) அவர்கள் நமக்கு அறிவித்துள்ளனர். அந்த நபிமொழி வருமாறு:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'நரகவாசிகளில் இரு பிரிவினர் உள்ளனர். அவர்களை நான் பார்த்ததில்லை. ஒரு பிரிவினர்: அவர்களிடம் பசுமாட்டின் வால்களைப் போன்ற சாட்டைகள் இருக்கும். அவற்றைக் கொண்டு மக்களை அடிப்பார்கள். மற்றொரு பிரிவினர் பெண்களாவர். அவர்கள் ஆடை அணிந்தும் நிர்வாணமாக இருப்பர். தாமும் மையல் கொண்டு பிறரையும் மையல் கொள்ளச் செய்யக்கூடிய அவர்களின் கொண்டை ஒட்டகத்தின் திமில்போல ஒய்யாரமாக இருக்கும். அப்பெண்கள் சுவனம் செல்ல மாட்டார்கள். அதன் வாடையைக் கூட நுகர மாட்டார்கள். உண்மையில் அதன் வாடை இவ்வளவு இவ்வளவு தூரத்திலிருந்து வருகின்றது' (முஸ்லிம்)

இத்தகைய ஆடைகளில் இன்று சில பெண்கள் அணியக்கூடிய ஆடைகளும் அடங்கும். அந்த ஆடைகள் கீழிருந்து மேல் வரை திறந்திருக்கும். அல்லது பல இடங்களில் ஜன்னல்கள் (ஓட்டைகள்) விடப்பட்டிருக்கும். அவள் அமரும்போது மறைக்கப்பட வேண்டிய உறுப்புகள் வெளியே தெரியும். மட்டுமல்ல இத்தகைய ஆடைகளை அணிவது காஃபிர்களுக்கு ஒப்பானதாகவும் அவர்களின் கலாச்சாரத்திலும் அவர்கள் உருவாக்கிய அநாகரீகத்திலும் அவர்களை பின்பற்றுவதாக அமையும். அல்லாஹ் பாதுகாப்பானாக!

அதுபோல ஆபத்தான விஷயம் என்னவெனில் சில ஆடைகளில் பாடகர்கள், இசைக்கருவிகள், மதுப்புட்டிகள், மதுக்கிண்ணங்கள், உயிர் பிராணிகளின் உருவங்கள், சிலுவைகள், தீய கிளப்கள் மற்றும் அமைப்புகளின் அடையாளச் சின்னங்கள், அல்லது கண்ணியத்தையும், நன்னடத்தையையும் கெடுக்கும் விதமான வாசகங்கள் இருப்பதாகும். அவ்வாசகங்கள் பெரும்பாலும் அந்நிய மொழிகளில் எழுதப்பட்டிருக்கும்.

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.

ஆண்கள் தங்கம் அணிதல்

'பட்டும் தங்கமும் என் சமுதாயத்தில் பெண்களுக்கு ஆகுமாக்கப்பட்டுள்ளன. ஆண்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளன' நபிமொழி. அறிவிப்பவர்: அபூமூஸா (ரலி), நூல்: அஹ்மத்.

இன்று கடைவீதிகளில் ஆண்களுக்கென்று தங்கத்தால் - பல்வேறு காரட்களில் - தயாரிக்கப்பட்ட அல்லது முழுமையாக தங்க முலாம் பூசப்பட்ட கைக்கடிகாரங்கள், முக்குக் கண்ணாடிகள், பட்டன்கள், பேனாக்கள், செயின்கள், சாவிக்கொத்துகள் இன்னும் பல உள்ளன. சில போட்டிகளில் ஆண்கள் அணியும் தங்கக் கைக்கடிகாரம் பரிசாக அறிவிக்கப்படுகின்றன. இதுவும் தடை செய்யப்பட்டதாகும்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'ஒரு மனிதரின் கையில் தங்க மோதிரத்தைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் அதைக் கழற்றி எறிந்து விட்டு, உங்களில் யாரேனும் தீக்கங்கை எடுத்து அதைத் தனது கையில் வளையமாக அணிவதை விரும்புவாரா? என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் சென்ற பிறகு, 'அந்த மோதிரத்தை எடுத்து வேறு வழியில் பயன்படுத்திக் கொள்' என்று அந்த மனிதரிடம் சொல்லப்பட்டது. அதற்கவர், அல்லாஹ்வின் தூதர் அவர்கள் அதைத் தூர எறிந்திருக்க அல்லாஹ்வின் மீது ஆணையாக ஒருபோதும் அதை நான் எடுக்க மாட்டேன் எனக் கூறினார்' (முஸ்லிம்)

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.

கணுக்காலுக்குக் கீழ் ஆடை அணிதல்

மக்கள் சாதாரணமாகக் கருதக்கூடிய விஷயங்களில் இதுவும் ஒன்றாகும்.ஆனால் அது அல்லாஹ்விடம் மிகப் பெரிய விஷயமாகும். சிலர் தரையைத் தொடுமளவுக்கு ஆடை அணிகின்றனர். இன்னும் சிலர் தமது ஆடையைத் தரையோடும் இழுத்துச் செல்கின்றனர்.

அபூதர் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது: 'மறுமையில் அல்லாஹ் மூவரிடத்தில் பேசவும் மாட்டான், அவர்களைப் பார்க்கவும் மாட்டான், அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான், அவர்களுக்கு நோவினை மிக்க வேதனை உண்டு. (அவர்கள் யாரெனில்) கணுக்காலுக்குக் கீழ் ஆடை அணிபவன், செய்த தர்மத்தைச் சொல்லிக் காட்டுபவன், பொய் சத்தியம் மூலம் பொருளை விற்பவன் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்' (புகாரி)

நான் கணுக்காலுக்குக் கீழ் ஆடை அணிந்திருப்பது பெருமைக்காக அல்ல என்று கூறுபவர் தம்மைத் தாமே பரிசுத்தப்படுத்திக் கொள்கின்றார். இது ஏற்கத்தக்கதல்ல. ஏனெனில் கணுக்காலுக்குக் கீழ் ஆடை அணிபவர் விஷயத்தில் வந்திருக்கின்ற எச்சரிக்கை பொதுவானது தான். அவர் பெருமைக்காக அணிந்தாலும் சரி அல்லது வேறு நோக்கத்திற்காக அணிந்தாலும் சரி. பின்வரும் நபிமொழி இதைத்தான் அறிவிக்கிறது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'கணுக்காலுக்குக் கீழ் ஆடை அணிவது நரகத்திற்குக் கொண்டு போகும்' அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி.

ஆனால் அவர் பெருமைக்காக அணிந்தால் அவருடைய தண்டனை மிகக் கடுமையாக இருக்கும். அது குறித்து பின்வரும் நபிமொழியில் வந்துள்ளதாவது: 'பெருமைக்காக யார் தன்னுடைய ஆடையை தரையோடு இழுத்துச் செல்கின்றாரோ மறுமையில் அல்லாஹ் அவரைப் பார்க்க மாட்டான்' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல் புகாரி).

இது ஏனெனில் இதில் (கணுக்காலுக்குக் கீழ் ஆடை அணிதல், பெருமை என) விலக்கப்பட்ட இரு விஷயங்கள் ஒரு சேர அமைந்துள்ளன.

கணுக்காலுக்குக் கீழ் ஆடை அணிவது ஹராமென்பது எல்லா வகையான ஆடைகளுக்கும் பொருந்தும். இப்னு உமர் (ரலி) அறிவிக்கும் பின்வரும் நபிமொழி இதற்குச் சான்றாகும்.

'கணுக்காலுக்குக் கீழ் ஆடை அணிவதென்பது வேட்டி, சட்டை, தலைப்பாகை ஆகிய மூன்றிலும் அடங்கும். இவற்றில் ஒன்றை யாரேனும் பெருமைக்காக தரையோடு இழுத்திச் செல்கின்றாரோ அவரை மறுமையில் அல்லாஹ் பார்க்க மாட்டான்' (நபிமொழி) நூல்: அபூதாவூத்.

ஆனால் ஒரு பெண் தனது பாதத்தை மறைப்பதற்காக தம் ஆடையை கணுக்காலுக்குக் கீழ் ஒரு ஜாண் அல்லது ஒரு முழம் தொங்க விட்டுக் கொள்வது அனுமதிக்கப்பட்டுள்ளது. இது, காற்று போன்ற காரணத்தால் பாதம் வெளிப்பட்டு விடாமல் பேணிக்கையாக இருப்பதற்காகவாகும். ஆயினும் அளவு கடந்து விடக் கூடாது. உதாரணமாக திருமணத்தின் போது சில மணப்பெண்களின் ஆடைகள் பல ஜாண்கள், பல மீட்டர்கள் நீளமாக இருக்கின்றன. எந்த அளவுக்கெனில் சிலபோது மணப்பெண்ணுக்குப் பின்னால் ஒருவர் அந்த ஆடையை சுமந்து வர வேண்டியதிருக்கிறது.

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.

இரண்டு பேர் இரகசியம் பேசுதல்

அதாவது மூவரில் ஒருவரைப் புறக்கணித்து விட்டு இருவர் மட்டும் இரகசியம் பேசுதல். இது சபைக்குக் கேடு விளைவிப்பவைகளில் ஒன்றாகும். மேலும் முஸ்லிம்களுக்கு மத்தியில் பிரிவினையையும், விரோதத்தையும், குரோதத்தையும் தோற்றுவிப்பதற்காக ஷைத்தான் செய்யும் ஒரு சூழ்ச்சி ஆகும்.

இதன் சட்ட நிலையையும் காரணத்தையும் தெளிவுபடுத்தியவாறு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'நீங்கள் மூன்று பேர் இருந்தால் ஒருவரைப் புறக்கணித்து விட்டு இருவர் மட்டும் இரகசியம் பேசாதீர்கள் - மற்றவர்களும் வந்து நீங்கள் எல்லோரும் கலந்திருந்திடும் வரையில்! ஏனெனில் அது அவருக்கு மனம் வருந்தச் செய்யும்' அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி), நூல்: புகாரி.

நால்வர் இருக்கும் போது மூவர் மட்டும் இரகசியம் பேசுவதையும், ஐவர் இருக்கும் போது நால்வர் மட்டும் இரகசியம் பேசுவதையும், இப்படியாக ஒருவரை விட்டு விட்டு மற்றவர்கள் சேர்ந்து இரகசியம் பேசுவதையும் இது உள்ளடக்கும். இதுபோல மூன்றாமவருக்குத் தெரியாத மொழியில் இருவர் இரகசியம் பேசுவதையும் இது உள்ளடக்கும். இப்படியாக ஒருவரை விட்டு விட்டு மற்றவர்கள் இரகசியம் பேசுவது ஒரு வகையில் அவரை அற்பமாகக் கருதுவதாக அமையும். அல்லது தன்னைப் பற்றி அவர்கள் தவறாகப் பேசுகிறார்களோ என்பது போன்று அவர் எண்ணத் தோன்றும் என்பதில் ஐயமில்லை.

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.

அனுமதியின்றி வீட்டுக்குள் எட்டிப் பார்த்தல்

"இறை நம்பிக்கை கொண்டவர்களே! உங்களுடைய வீடுகளைத் தவிர மற்றவர்களின் வீடுகளில் அந்த வீட்டாரின் இசைவைப் பெறாமலும் அவர்களுக்கு ஸலாம் கூறாதவரையும் நுழையாதீர்கள்" (24:27)

அனுமதி கோருவதற்குக் காரணம் அந்த வீட்டிலுள்ளவர்களின் தனிப்பட்ட செயல்களை காரியங்களை பார்த்து விடக் கூடாது என்பதற்காகத்தான் என்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தெளிவு படுத்தியுள்ளார்கள். 'அனுமதி கோருதல் ஏற்படுத்தப்பட்டது பார்வையின் காரணமாகத்தான்' என்பது நபிமொழி. (புகாரி)

இன்று வீடுகள் கட்டிடங்கள் நெருக்கமாகவும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தும் இருக்கின்றன. ஜன்னல்களும் வாசல்களும் நேருக்கு நேர் உள்ளன. இதனால் அக்கம் அக்கத்தில் வசிப்போரின் தனிப்பட்ட நடவடிக்கைகள் பரஸ்பரம் பார்வையில் படும் சாத்தியக்கூறு அதிகம் உள்ளன. பெரும்பாலோர் தங்கள் பார்வையைத் தாழ்த்திக் கொள்வதில்லை. சில பொழுது உயரமான கட்டிடத்தில் குடியிருப்பவர்கள் சிலர் தம் ஜன்னல் வழியாகவும் மாடி வழியாகவும் தமக்குக் கீழே இருக்கின்ற அண்டை வீடுகளை எட்டிப் பார்க்கின்றனர். இது நம்பிக்கைத் துரோகமாகும். மட்டுமல்ல இது அண்டை வீட்டாரின் கண்ணியத்தைக் குலைக்கக் கூடியதாகவும் தகாத காரியத்தின் பால் இட்டுச் செல்லக் கூடியதாகவும் இருக்கின்றது. இதனால் எத்தனையோ துன்பங்களும் குழப்பங்களுமே ஏற்பட்டுள்ளன. இச்செயல் எந்த அளவுக்கு ஆபத்தானது என்பதற்குச் சான்றாக பிறருடைய வீட்டில் எட்டிப் பார்ப்பவருடைய கண்ணுக்கான நஷ்டயீட்டை ஷரீஅத் தளர்த்தியிருப்பதே போதுமானதாகும்.

இதோ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்: 'ஒருவர் பிறருடைய வீட்டில் அனுமதியின்றி எட்டிப் பார்த்தால் அவருடைய கண்ணைப் பறிப்பது அவ்வீட்டாருக்கு ஆகுமானதாகும்' அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்.

அஹ்மதுடைய ஒரு அறிவிப்பில் 'அவருடைய கண்ணைப் பறித்து விடுங்கள். அதற்கு நஷ்டயீடோ, பழிக்குப் பழியோ கிடையாது' என்றும் உள்ளது.

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.

கோள் சொல்லுதல்

மக்களிடையே குழப்பம் விளைவிப்பதற்காக ஒருவர் கூறியதை இன்னொருவரிடம் சொல்வதே கோள் ஆகும். கோள் சொல்லித் திரிவதை சிலர் தொழிலாகக் கொண்டுள்ளனர். இது மக்களிடையே விரோதத்தையும் குரோதத்தையும் மூட்டி விடுவதற்கும் அவர்களுக்கிடையே உள்ள நல்லுறவைத் துண்டிப்பதற்கும் மிகப் பெரிய காரணமாகும். இவ்வாறு செய்பவனை அல்லாஹ் இழித்துரைத்துள்ளான்:

"அதிகமாக சத்தியம் செய்கின்ற அற்பமான எந்த மனிதனுக்கும் நீர் அடங்கி விடாதீர். அவன் குறைகூறி திரிபவனாகவும் கோள் சொல்லித் திரிபவனாகவும் இருக்கின்றான்" (68:10,11) 'கோள்ச் சொல்லித் திரிபவன் சொர்க்கம் செல்ல மாட்டான்' என்பது நபிமொழி. அறிவிப்பவர்: ஹுதைஃபா (ரலி), நூல்: புகாரி.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது: 'நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் ஒரு தோட்டத்தின் பக்கமாகச் சென்று கொண்டிருந்த போது கப்றில் வேதனை செய்யப்படும் இரண்டு மனிதர்களின் சப்தத்தைச் செவியுற்றார்கள். அப்போது இவ்விருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள். (ஆனால்) ஒரு பெரிய விஷயத்திற்காக இவ்விருவரும் வேதனை செய்யப்படவில்லை என்று கூறிவிட்டு, ஆம்! (இதைத் தொடர்ந்து வேறொரு அறிவிப்பில் 'அது பெரிய விஷயம் தான்' என்று வந்துள்ளது) அவ்விருவரில் ஒருவர் சிறுநீர் கழிக்கும் போது (சிறுநீர் துளி தன்னில் படாமல்) பேணுதலாக இருக்கவில்லை. மற்றொருவர் கோள் சொல்லித் திரிபவராக இருந்தார் என்று கூறினார்கள். (புகாரி)

கோள் சொல்வதில் மிக மோசமானது கணவனைப் பற்றி மனைவியிடத்திலும், மனைவியைப் பற்றி கணவனிடத்திலும் குறை கூறித் திரிவதாகும். அவ்விருவருக்கிடையே உள்ள நல்லுறவைக் கெடுப்பதற்கான முயற்சியாகும் இது. அதுபோல பணியாளர்கள் தம் சக பணியாளர்களைப் பற்றி - அவர்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்துவதற்காக - மேனேஜரிடம் அல்லது ஏனைய பொறுப்பாளர்களிடம் கோள் சொல்கின்றனர். இதுவும் மோசமானதாகும். இவையனைத்துமே விலக்கப்பட்டவையாகும்.

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.

புறம் பேசுதல்

முஸ்லிம்களைப் புறம் பேசுவதும் அவர்களின் கண்ணியத்திற்கும் மான மரியாதைக்கும் இழுக்காகப் பேசுவதும் பெரும்பாலான சபைகளுக்கு சர்க்கரைப் பொங்கலாக ஆகிவிட்டது. புறம் பேசுவதை அல்லாஹ் தடை செய்துள்ளான். அதை விட்டும் தன் அடியார்களை விலகியிருக்கச் செய்திருக்கிறான். மனித உள்ளங்கள் அருவருப்பாகக் கருதுகின்ற விதத்தில் அதற்கு ஓர் உவமானம் கூறியுள்ளான்: "உங்களில் ஒருவர் மற்றவரைப் பற்றி புறம் பேச வேண்டாம். உங்களில் எவரேனும் இறந்து விட்ட தன் சகோதரரின் இறைச்சியை உண்ண விரும்புவாரா? அதை நீங்கள் வெறுகின்றீர்கள்" (49:12)

புறம் என்பதின் அர்த்தத்தை நபி (ஸல்) அவர்கள் நபிமொழியில் தெளிவு படுத்தியுள்ளார்கள்: 'புறம் பேசுதல் என்றால் என்ன? என்று நீங்கள் அறிவீர்களா? என நபி (ஸல்) அவர்கள் (தம் தோழர்களிடம்) கேட்டார்கள். அதற்கு அவர்கள் அல்லாஹ்வும் அவன் தூதருமே நன்கறிந்தவர்கள் எனக் கூறினார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் (புறம் பேசுதல் என்பது) நீ உம் சகோதரனைப் பற்றி அவன் விரும்பாததைக் கூறுவதாகும் என்று கூறினார்கள். நான் கூறுவது என் சகோதரனிடம் இருந்தாலுமா? எனக் கேட்கப்பட்டது. அதற்கவர்கள், நீ கூறுவது அவனிடம் இருந்தால் நீ அவனைப் பற்றி புறம் பேசி விட்டாய். நீ கூறுவது அவனிடம் இல்லையெனில் நீ அவனைப் பற்றி அவதூறு கூறி விட்டாய்' எனக் கூறினார்கள். அறிவிப்பவர்:அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்.

எனவே புறமென்பது ஒரு முஸ்லிமைப் பற்றி அவனிடம் உள்ள- அவன் விரும்பாத தன்மைகளில் ஒன்றைக் கூறுவதாகும். அவனுடைய உடல், மார்க்கம், உலக விவகாரம், குணநலன்கள், உடலமைப்பு என எது தொடர்பானதாக இருந்தாலும் சரியே! இப்படிப் புறம் பேசுவதற்குப் பல முறைகள் உள்ளன. அவனுடைய குறைகளை அல்லது அவனுடைய நடவடிக்கைகள் பழக்க வழக்கங்களைக் கேலியாக எடுத்துச் சொல்வதும் அவற்றுள் ஒன்றாகும்.

புறம் பேசுதல் என்பது அல்லாஹ்விடத்தில் மிக மோசமான விஷயமாக இருந்தும் மக்கள் இது விஷயத்தில் அலட்சியமாகவே நடந்து கொள்கிறார்கள். பின்வரும் நபிமொழி இதை உணர்த்துகிறது. 'வட்டியில் எழுபத்திரண்டு வகைகள் உள்ளன. அவற்றில் மிகக் குறைந்தது ஒருவன் தன் தாயிடம் உடலுறவு கொள்வதற்குச் சமமானதாகும். வட்டியிலேயே மிகக் கொடுமையானது தன் சகோதரனுடைய மானம் மரியாதைக்குப் பங்கம் ஏற்படுத்துவதாகும்' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்: (ஸில்ஸிலத்துல் ஸஹீஹா 1871)

ஆகவே சபையிலிருப்பவர் அங்கு நடக்கின்ற தீமையையும் தன் சகோதரனைப் பற்றி புறம் பேசப்படுவதையும் தடுப்பது கடமையாகும். இது பற்றி நபி (ஸல்) அவர்கள் பின்வரும் நபிமொழியில் ஆர்வமூட்டியுள்ளார்கள்: 'யார் தன்னுடைய சகோதரனின் கண்ணியம் மற்றும் மான மரியாதைக்கு களங்கம் ஏற்படுவதை விட்டும் தடுக்கின்றாரோ அவருடைய முகத்தை அல்லாஹ் மறுமையில் நரகத்தை விட்டும் தடுப்பான்' (நபிமொழி) அறிவிப்பவர்: அபுத்தர்தா (ரலி), நூல்: திர்மிதி.

இன்ஷா அல்லாஹ் எச்சரிக்கை தொடரும்.

இசையும் இசைக் கருவிகளும்

"மனிதர்களில் சிலர் இப்படியும் இருக்கின்றார்கள். மன மயக்கத்தை ஏற்படுத்தும் விஷயங்களை அவர்கள் விலைக்கு வாங்குகிறார்கள். எதற்காகவெனில் அவர்கள் எவ்வித அறிவுமின்றி (மக்களை) அல்லாஹ்வின் பாதையை விட்டு பிறழச் செய்வதற்காகவும் அதை ஏளனம் செய்வதற்காகவும் தான்" (31:6). இவ்வசனத்திலுள்ள மன மயக்கத்தை ஏற்படுத்தும் விஷயங்கள் என்பதன் கருத்து பாடல்களே என இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.

'விபச்சாரம், பட்டு, மது, இசைக் கருவிகள் ஆகியவற்றை ஹலாலாக்கிக் கொள்ளக்கூடிய ஒரு கூட்டம் என்னுடைய சமுதாயத்தில் நிச்சயம் தோன்றும்' என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஆமிர் (ரலி), மற்றும் அபூமாலிக் அல்அஸ்அரி (ரலி) அறிவிக்கிறார்கள். நூல்: புகாரி.

மேலும் அனஸ் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது: 'திண்ணமாக இந்த சமுதாயத்தில் பூகம்பம், உருமாற்றம் செய்யப்படுதல், அவதூறு கூறல் ஆகியவை உண்டாகும். எப்போதெனில் அவர்கள் மது பானங்களை அருந்தும்போது, (நடனமாடி) பாட்டுப் படிக்கும் பெண்களை ஏற்படுத்தும் போது, இசைக்கருவிகளைப் பயன்படுத்தும் போது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்' (இப்னு அபித்துன்யா) இதே கருத்து திர்மிதியிலும் உள்ளது.

நபி (ஸல்) அவர்கள் முரசு அடிப்பதைத் தடுத்துள்ளார்கள். நாதசுரம் (Pipe) பற்றிக் குறிப்பிடும் பொழுது அது தீய மோசமான சப்தம் எனக் கூறியுள்ளார்கள். இமாம் அஹ்மத் (ரஹ்) அவர்கள் முன் சென்ற மார்க்க அறிஞர்களும் யாழ் (வீணை), மேன்டலின், ரீபெக், (Mandolin, Rebec-இவை யாவும் வீணையில் ஒவ்வொரு வகை), புல்லாங்குழல், சிங்கி (Cymbal) போன்ற இசைக் கருவிகள் ஹராம் எனக் கூறியுள்ளனர்.

மேலும் நபி (ஸல்) அவர்கள் இசைக் கருவிகளைத் தடுத்துள்ள ஹதீஸில் வயலின், சிதர் (Zither-இது ஒரு வகை நரம்பு இசைக்கருவி), பியானோ, கிதார் போன்ற நவீன இசைக் கருவிகளும் அடங்கும் என்பதில் ஐயமில்லை. இன்னும் சொல்லவதானால் இந்த நவீன இசைக் கருவிகள் ஹதீஸ்களில் தடை வந்துள்ள பழங்கால இசைக் கருவிகளை விட பெருமளவு பரவசம், போதை, மற்றும் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியவையாகும். இப்னுல் கய்யூம் போன்ற அறிஞர்கள் கூறியதுபோல இசையின் போதை மதுவின் போதையை விடக் கடுமையானது. இசையுடன் பாடலும், மனமகிழ்ச்சியூட்டி பரவசப்படுத்தும் பெண்களின் குரலும் இணைந்து விட்டால் அது அதைவிடக் கூடுதல் ஹராமாகும், கூடுதல் பாவமாகும் என்பதில் சந்தேகமில்லை.

பாடலின் வரிகள் அன்பையும் காதலையும் வெளிப்படுத்தக் கூடியதாகவும் காதலியின் அழகை வர்ணிப்பதாகவும் இருந்தால் விபரீதம் மேலும் அதிகமாகிவிடும். இதனால் தான் பாடல்கள் விபச்சாரத்திற்குத் தூது விடுகின்றது, உள்ளத்தில் நயவஞ்சகத்தை வளர்க்கின்றது என அறிஞர்கள் கூறுகின்றனர். மொத்தத்தில் பாடல்கள் மற்றும் இசையின் பிரச்சனை இக்காலத்தில் மிகப் பெரும் குழப்பமாகவும் சோதனையாகவும் ஆகிவிட்டது.

மேலும் நம்முடைய இக்காலத்தில் பல்வேறு பொருட்களில் இசை நுழைந்து விட்டிருப்பது மிகப் பெரும் தொல்லையாகும். உதாரணத்திற்கு கைக்காடிகாரங்கள், அலாரங்கள், குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்கள், கம்யூட்டர்கள், சில தொலைப்பேசி சாதனங்கள் ஆகியவற்றை சொல்லலாம். இவற்றைத் தவிர்ப்பதற்கு பெரும் மன உறுதி வேண்டும் என்றாகி விட்டது. அல்லாஹ்தான் உதவி செய்ய வேண்டும்.

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.