Monday, August 04, 2008

முடிவுரை

இதுவரை மக்களிடத்தில் பரவலாகக் காணப்படுகின்ற விலக்கப்பட்ட காரியங்களை முடிந்தவரை இங்கு கூறியுள்ளோம். எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் அவனுடைய திருப்பெயர்களின் மூலம் இறைஞ்சுவோமாக! அவன் நமக்கும் அவனுக்கும் நாம் மாறு செய்வதற்கும் இடையில் அரணாக இருக்கக்கூடிய இறையச்சத்தையும், அவனுடைய சுவனத்தின் பால் சேர்த்து வைக்கக்கூடிய வழிபாட்டையும் தருவானாக!

நம்முடைய பாவங்களையும், நம்முடைய காரியங்களில் நாம் வரம்பு மீறுவதையும் அவன் மன்னித்தருள்வானாக! அவன் விலக்கிய விலக்கல்களை விடுத்து அவன் ஹலாலாக்கியவற்றை மட்டும், அவன் அல்லாதவர்களை விடுத்து அவனுடைய அருளை மட்டும் நமக்குப் போதுமாக்கித் தருவானாக! நம்முடைய பாவங்களைக் கழுவி, நம்முடைய தவ்பாவை ஏற்றுக் கொள்வானாக! திண்ணமாக அவன் யாவற்றையும் செவியேற்பவனும் (அழைப்பவரின் அழைப்புக்கு) பதில் தருபவனும் ஆவான். மேலும் நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும் அவர்களுடைய குடும்பத்தினர் மற்றும் தோழர்கள் அனைவர் மீதும் அவனுடைய கருணையும் சாந்தியும் உண்டாவதாக! எல்லாப் புகழும் அகில உலகத்தின் அதிபதியாகிய அல்லாஹ்வுக்கே!

மீண்டும் ஒரு நல்லொழுக்கம் போதிக்கும் நூலுடன் சந்திக்கும் வரை.
உங்கள் அன்புள்ள jafarsafamarva

இந்த நூலை மென்னூலாக இறக்கம் செய்து கொள்ள இங்கே சுட்டவும்: http://islamkural.com/home/?page_id=1954

முஸ்லிமை வெறுத்தல்

முஸ்லிம்களுக்கு மத்தியில் உறவு முறிவை உருவாக்குவது ஷைத்தானின் சூழ்ச்சிகளில் ஒன்று. ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுகின்ற பெரும்பாலோர் மார்க்கம் அனுமதிக்காத காரணங்களுக்காகவெல்லாம் தம் சகோதர முஸ்லிமை வெறுக்கின்றனர். தங்களிடையே உள்ள உறவை முறித்துக் கொள்கின்றனர். ஒன்று கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட ஏதாவது கருத்து வேறுபாடு காரணமாக இருக்கலாம். அல்லது வேறு ஏதாவது அற்பமான காரணமாக இருக்கலாம்.

இந்த உறவு முறிவு நீண்ட காலத்திற்கு நீடிக்கும். சில சமயம், நான் உன்னிடம் பேசவே மாட்டேன் என சத்தியம் செய்து விடுகின்றனர். அவன் வீட்டு வாசல்படியில் கூட மிதிக்கக் கூடாதென சத்தியம் செய்கின்றனர். வழியில் அவனைக் கண்டால் புறக்கணித்து விடுகின்றனர். ஏதேனும் ஒரு சபையில் அவனை சந்தித்தால் அவனுக்கு முன்னால் பின்னால் இருப்பவரிடம் மட்டும் முஸாஃபஹா செய்து விட்டு அவனைத் தாண்டிச் சென்று விடுகின்றனர். முஸ்லிம் சமுதாயம் பலவீனமடைவதற்கு இதுவும் ஒரு காரணமாகும். இதனால் தான் இது விஷயத்தில் இஸ்லாமியச் சட்டமும், எச்சரிக்கையும் மிகக் கடுமையானதாக இருக்கின்றது.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது: 'தன் சகோதரனை மூன்று நாட்களுக்கு மேல் வெறுப்பது எந்த முஸ்லிமுக்கும் ஆகுமானதல்ல. அவ்வாறு மூன்று நாட்களுக்கு மேல் யாரேனும் வெறுத்து அந்த நிலையில் அவர் மரணமடைந்தால் நரகம் செல்வார்' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூதாவூத்)

அபூகராஷ் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது: 'ஒருவன் தன் சகோதரனை ஒரு வருடம் வெறுத்தால் அவன் அவனைக் கொலை செய்தவன் போலாவான்' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்: அதபுல் முஃப்ரத்.

முஸ்லிம்களுக்கு மத்தியில் உள்ள உறவைத் துண்டிப்பதினால் விளையும் தீங்குகளில் இறைவனுடைய மன்னிப்புக் கிடைக்காமல் போவது ஒன்றே போதும்.

'ஒவ்வொரு வாரமும் இருமுறை - திங்கள், வியாழன் ஆகிய இருநாட்களில் மனிதர்களின் செயல்கள் (இறைவனிடம்) எடுத்துக் காட்டப்படுகின்றன. அப்போது மூமினான ஒவ்வொரு அடியாருக்கும் மன்னிப்பு வழங்கப்படும். பகைத்துக் கொண்ட இருவரைத் தவிர. அவ்விருவரையும் விட்டு விடுங்கள் அல்லது அவ்விருவரின் விவகாரத்தை ஒத்திப் போடுங்கள் - அவ்விருவரும் சமாதானம் ஆகும் வரை!' என வானவர்களிடம் கூறப்படும். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி). நூல்: முஸ்லிம்

சண்டைப் போட்டுக் கொண்ட இருவரில் யார் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கொரி திருந்துகிறாரோ அவர் தன் நண்பரிடம் சென்று ஸலாம் சொல்ல வேண்டும். இப்படி அவர் நடந்து கொள்ளும் பட்சத்தில் அவருடைய நண்பர் அவரை (ஏற்க) மறுத்து விட்டால் - அவருடைய பொறுப்பு நீங்கி விடும். (அவர் மீது எந்தக் குற்றமும் இல்லை) மறுத்தவர் மீதே குற்றம் எஞ்சியிருக்கும்.

அபூஅய்யூப் அல் - அன்ஸாரி (ரலி) அறிவிக்கிறார்கள்: 'ஒருவர் தன் சகோதரனை மூன்று நாட்களுக்கு மேல் பகைத்துக் கொள்ளக் கூடாது. இருவரும் சந்திக்கும் போது ஒருவரை ஒருவர் புறக்கணித்துச் செல்லக் கூடாது. அவ்விருவரில் யார் முதலில் ஸலாம் சொல்கிறாரோ அவரே சிறந்தவர்' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

ஆனால் இவ்வாறு பகைத்துக் கொள்வதற்கு தொழுகையை விடுதல், மானக்கேடான காரியங்களில் பிடிவாதமாக இருத்தல் போன்ற மார்க்க ரீதியான காரணம் இருந்தால், அதே நேரத்தில் பகைத்துக் கொள்வது தவறிழைப்பவனுக்கு பலனளிக்கும் என்றிருந்தால் - அதாவது அவன் தன் தவறை உணர்ந்து சரியான நிலைக்குத் திரும்புவான் என்றிருந்தால் பகைத்துக் கொள்வது கடமையாகின்றது. ஆனால் பகைத்துக் கொள்வதால் தவறிழைத்தவன் மேலும் வரம்பு மீறிய போக்கையே மேற்கொள்கிறான், பாவம் செய்வதிலேயே பிடிவாதமாக இருக்கிறான் எனில் இந்த நேரத்தில் பகைத்துக் கொள்வது பொருத்தமாக இருக்காது. ஏனெனில் அதனால் மார்க்கம் விரும்புகின்ற நன்மை ஏற்படாது. மாறாக தீமையே அதிகரிக்கும். எனவே இதுபோன்ற சமயத்தில் அவனுக்குத் தொடர்ந்து அறிவுரை வழங்குவதும் நல்லுபதேசமும், நல்லுபகாரமும் செய்வதுமே ஏற்றமானதாகும்.

இன்ஷா அல்லாஹ் அடுத்த பதிப்பில் முடிவுரை.

முகத்தில் அடிப்பதும் சூடு போடுவதும்

'முகத்தில் அடிப்பதையும் முகத்தில் சூடு போடுவதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள்' என ஜாபிர் (ரலி) அறிவிக்கிறார்கள். (முஸ்லிம்)

முகத்தில் அடித்தல்: சில தந்தையர்களும், ஆசிரியர்களும் குழந்தைகளைத் தண்டிக்கும் போது கையால் அல்லது வேறு பொருளால் அவர்களின் முகத்தில் அறைந்து விடுகின்றனர். அதுபோலவே சிலர் தமது வேலைக்காரர்களை அடித்து விடுகின்றனர். இது ஹராமாகும். மேலும் எந்த முகத்தின் மூலம் அல்லாஹ் மனிதனைக் கண்ணியப்படுத்தி இருக்கின்றானோ அந்த முகத்தை இழிவுபடுத்துவதுமாகும். முகத்தில் அடிப்பது சிலவேளை முகத்திலுள்ள சில முக்கியப் புலன்களை இழக்கச் செய்துவிடும். அதனால் வருந்த வேண்டிய நிலை ஏற்படும். சிலபோது பழிக்குப் பழிவாங்க வேண்டிய நிலையும் உருவாகலாம்.

கால்நடைகளுக்கு முகத்தில் சூடு போடுதல்: பிராணியின் சொந்தக்காரன் தனது பிராணியை இனம் கண்டு கொள்வதற்காகவும் அல்லது அது காணாமல் போய்விட்டால் அவனிடம் திருப்பி ஒப்படைப்பதற்காகவும் அடையாளத்திற்காக கால்நடைகளின் முகத்தில் சூடு போடுகின்றனர். இது ஹராமாகும். மேலும் இது பிராணியின் முகத்தை அலங்கோலப்படுத்துவதும் பிராணியை வதைப்பதுமாகும். இவ்வாறு செய்வது எங்கள் குலத்தின் வழக்கமும், எங்கள் குலத்தின் விஷேச அம்சமுமாகும் என சிலர் வாதிட்டாலும் சரியே! ஆயினும் முகமல்லாத இடங்களில் அடையாளத்திற்காக சூடு போடுவது கூடும்.

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.