முஸ்லிம் சமுதாயத்தில் காணப்படும் பல்வேறு அநியாயங்களில் தொழிலாளர்கள், பணியாளர்கள், வேலைக்காரர்கள் ஆகியோருக்கு அவர்களின் உரிமைகளை வழங்காதிருப்பது ஒன்றாகும். இதற்குப் பல்வேறு வடிவங்கள் உள்ளன. அவற்றுள் சில வருமாறு:
வேலைக்காரனுடைய உரிமையை முழுவதும் கொடுக்க மறுப்பது, அவனிடம் அதற்கான ஆதாரம் இல்லாமல் செய்து விடுவது, இத்தகையவனுடைய உரிமை இவ்வுலகில் பறிபோனாலும் மறுமையில் அல்லாஹ்விடத்தில் வீணாகிவிடாது. அப்போது அநீதியிழைத்தவன் அநீதி இழைக்கப்பட்டவனுடைய பொருளை உண்ட நிலையில் வருவான். அவனுடைய நன்மைகளை எடுத்து அவனால் பாதிக்கப்பட்டவனுக்குக் கொடுக்கப்படும். அவனுடைய நன்மைகள் தீர்ந்து விட்டால் பாதிக்கப்பட்டவனுடைய தீமைகளை எடுத்து அவன் தலையில் போட்டு அவனை நரகில் தள்ளப்படும்.
கூலியை குறைத்துக் கொடுப்பது: அதாவது வேலைக்காரனுக்கு அவனுடைய கூலியை முழுமையாக வழங்காமல் அநியாயமாகக் குறைத்து விடுவது.
அல்லாஹ் கூறியுள்ளான்: "அளவில் மோசடி செய்வோருக்குக் கேடுதான்" (83:1). சில முதலாளிகள் செய்வது இதற்கு உதாரணமாகும். அதாவது தொழிலாளர்களை அவர்களுடைய நாடுகளிலிருந்து ஒரு குறிப்பிட்ட சம்பளத்துக்கு ஒப்பந்தம் செய்து அழைத்து வருவது, அவர்கள் வேலையில் சேர்ந்தபின் ஒப்பந்தத்தை மாற்றி கூலியைக் குறைத்துக் கொடுப்பது. அப்போது தொழிலாளர்கள் வேண்டா வெறுப்புடனேயே வேலையில் ஈடுபடுகின்றனர். தங்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளை நிரூபிக்க இயலாதவர்களாக ஆகிவிடுகின்றனர். அதனால் தங்கள் நிலைமையை அல்லாஹ்விடமே முறையிடுகின்றனர்.
அநியாயக்கார அந்த முதலாளி முஸ்லிமாகவும் தொழிலாளி காஃபிராகவும் இருந்தால் முதலாளியின் இச்செயல் அத்தொழிலாளி இஸ்லாத்திற்கு வருவதற்கு தடையாகி விடு(வது மட்டுமல்ல இஸ்லாத்தைப் பற்றித் தவறாக விளங்குவதற்கும் காரணமாகி விடு)கிறது. அதன் பாவமும் அந்த முதலாளிக்கு வந்து விடுகிறது.
நிர்ணயிக்கப்பட்ட வேலைக்கும் கூடுதலான வேலைகளை கொடுத்து, அல்லது வேலை நேரத்தைக் கூட்டி, அடிப்படைக் கூலியை மட்டுமே கொடுப்பது. மேலதிகமான வேலைகளைச் செய்ததற்கான கூலியைக் கொடுக்காமலிருப்பது.
கூலி வழங்குவதில் கால தாமதம் செய்வது: தொழிலாளர்களின் கூலியை, அவர்கள் மிகுந்த சிரமப்பட்டு, திரும்பத் திரும்பக் கேட்டு, பல முறை முறையிட்டு, நீதிமன்றத்தின் கதவைத் தட்டிய பிறகே கொடுப்பது. முதலாளி கூலியைத் தாமதப்படுத்துவதின் நோக்கம் திரும்பத் திரும்பக் கேட்டு, தொழிலாளியை சோர்வடையச் செய்வதற்காகக் கூட இருக்கலாம். பிறகு அவன் தனது உரிமையை - ஊதியம் கேட்பதை விட்டு விடுவான். அல்லது தொழிலாளர்களின் ஊதியங்களை தனது தொழிலில் முடக்கி பலன் பெறுவதற்காகக் கூட இருக்கலாம்.
இன்னும் சில முதலாளிகள் அந்த ஊதியங்களை வட்டிக்கு விடுகின்றனர். ஆனால் இந்த ஏழைத் தொழிலாளியோ தன் அன்றாட உணவுக்குக் கூட காசு இல்லாமல் சிரமப்படுகிறான். மட்டுமல்ல தன் மனைவி, மக்களின் செலவுக்கும் அவனால் பணம் அனுப்ப முடியவில்லை. அவர்களின் தேவையை நிறைவு செய்வதற்காகத்தானே அவன் நாடு துறந்து வந்திருக்கின்றான். இத்தகைய அக்கிரமக்காரர்களுக்குக் கேடுதான்! துன்புறுத்தக்கூடிய ஒரு நாளின் தண்டனையின் வாயிலாக.
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்: 'அல்லாஹ் கூறுகிறான்: மறுமையிம் மூன்று பேர்களுடன் நான் சண்டையிடுவேன். ஒருவன் எனது பெயரால் வாக்குக் கொடுத்து ஏமாற்றியவன், மற்றொருவன் சுதந்திரனை விற்று அதன் கிரயத்தை உண்டவன், மூன்றாமவன் ஒருவரைக் கூலிக்கு அமர்த்தி அவரிடம் முழுமையாக வேலையை வாங்கிக் கொண்டு கூலியைக் கொடுக்காதவன்' (புகாரி)
எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.