Showing posts with label மது. Show all posts
Showing posts with label மது. Show all posts

Monday, August 04, 2008

இசையும் இசைக் கருவிகளும்

"மனிதர்களில் சிலர் இப்படியும் இருக்கின்றார்கள். மன மயக்கத்தை ஏற்படுத்தும் விஷயங்களை அவர்கள் விலைக்கு வாங்குகிறார்கள். எதற்காகவெனில் அவர்கள் எவ்வித அறிவுமின்றி (மக்களை) அல்லாஹ்வின் பாதையை விட்டு பிறழச் செய்வதற்காகவும் அதை ஏளனம் செய்வதற்காகவும் தான்" (31:6). இவ்வசனத்திலுள்ள மன மயக்கத்தை ஏற்படுத்தும் விஷயங்கள் என்பதன் கருத்து பாடல்களே என இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.

'விபச்சாரம், பட்டு, மது, இசைக் கருவிகள் ஆகியவற்றை ஹலாலாக்கிக் கொள்ளக்கூடிய ஒரு கூட்டம் என்னுடைய சமுதாயத்தில் நிச்சயம் தோன்றும்' என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஆமிர் (ரலி), மற்றும் அபூமாலிக் அல்அஸ்அரி (ரலி) அறிவிக்கிறார்கள். நூல்: புகாரி.

மேலும் அனஸ் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது: 'திண்ணமாக இந்த சமுதாயத்தில் பூகம்பம், உருமாற்றம் செய்யப்படுதல், அவதூறு கூறல் ஆகியவை உண்டாகும். எப்போதெனில் அவர்கள் மது பானங்களை அருந்தும்போது, (நடனமாடி) பாட்டுப் படிக்கும் பெண்களை ஏற்படுத்தும் போது, இசைக்கருவிகளைப் பயன்படுத்தும் போது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்' (இப்னு அபித்துன்யா) இதே கருத்து திர்மிதியிலும் உள்ளது.

நபி (ஸல்) அவர்கள் முரசு அடிப்பதைத் தடுத்துள்ளார்கள். நாதசுரம் (Pipe) பற்றிக் குறிப்பிடும் பொழுது அது தீய மோசமான சப்தம் எனக் கூறியுள்ளார்கள். இமாம் அஹ்மத் (ரஹ்) அவர்கள் முன் சென்ற மார்க்க அறிஞர்களும் யாழ் (வீணை), மேன்டலின், ரீபெக், (Mandolin, Rebec-இவை யாவும் வீணையில் ஒவ்வொரு வகை), புல்லாங்குழல், சிங்கி (Cymbal) போன்ற இசைக் கருவிகள் ஹராம் எனக் கூறியுள்ளனர்.

மேலும் நபி (ஸல்) அவர்கள் இசைக் கருவிகளைத் தடுத்துள்ள ஹதீஸில் வயலின், சிதர் (Zither-இது ஒரு வகை நரம்பு இசைக்கருவி), பியானோ, கிதார் போன்ற நவீன இசைக் கருவிகளும் அடங்கும் என்பதில் ஐயமில்லை. இன்னும் சொல்லவதானால் இந்த நவீன இசைக் கருவிகள் ஹதீஸ்களில் தடை வந்துள்ள பழங்கால இசைக் கருவிகளை விட பெருமளவு பரவசம், போதை, மற்றும் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியவையாகும். இப்னுல் கய்யூம் போன்ற அறிஞர்கள் கூறியதுபோல இசையின் போதை மதுவின் போதையை விடக் கடுமையானது. இசையுடன் பாடலும், மனமகிழ்ச்சியூட்டி பரவசப்படுத்தும் பெண்களின் குரலும் இணைந்து விட்டால் அது அதைவிடக் கூடுதல் ஹராமாகும், கூடுதல் பாவமாகும் என்பதில் சந்தேகமில்லை.

பாடலின் வரிகள் அன்பையும் காதலையும் வெளிப்படுத்தக் கூடியதாகவும் காதலியின் அழகை வர்ணிப்பதாகவும் இருந்தால் விபரீதம் மேலும் அதிகமாகிவிடும். இதனால் தான் பாடல்கள் விபச்சாரத்திற்குத் தூது விடுகின்றது, உள்ளத்தில் நயவஞ்சகத்தை வளர்க்கின்றது என அறிஞர்கள் கூறுகின்றனர். மொத்தத்தில் பாடல்கள் மற்றும் இசையின் பிரச்சனை இக்காலத்தில் மிகப் பெரும் குழப்பமாகவும் சோதனையாகவும் ஆகிவிட்டது.

மேலும் நம்முடைய இக்காலத்தில் பல்வேறு பொருட்களில் இசை நுழைந்து விட்டிருப்பது மிகப் பெரும் தொல்லையாகும். உதாரணத்திற்கு கைக்காடிகாரங்கள், அலாரங்கள், குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்கள், கம்யூட்டர்கள், சில தொலைப்பேசி சாதனங்கள் ஆகியவற்றை சொல்லலாம். இவற்றைத் தவிர்ப்பதற்கு பெரும் மன உறுதி வேண்டும் என்றாகி விட்டது. அல்லாஹ்தான் உதவி செய்ய வேண்டும்.

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.

Saturday, February 24, 2007

ஒரு துளியேனும் மது அருந்துதல்

அல்லாஹ் கூறுகிறான்: "இறைநம்பிக்கை கொண்டவர்களே! சூதாட்டம், பலிபீடங்கள், குறிபார்க்கும் அம்புகள் ஆகியவை அருவருக்கத்தக்க ஷைத்தானியச் செயல்களாகும். அவற்றைத் தவிர்ந்து கொள்ளுங்கள். அதன் மூலம் நீங்கள் வெற்றி பெறலாம்" (5:90)

மதுவைத் தவிர்ந்துக் கொள்ளும்படி கட்டளையிட்டிருப்பது அது ஹராம் என்பதற்கு பலமான ஆதாரமாகும். மதுவை அடுத்து அல்லாஹ் பலிபீடங்களை கூறியுள்ளான். அவை காஃபிர்களுடைய கடவுள்களான விக்கிரகங்களாகும். (விக்கிரகங்கள் எந்த அளவுக்கு ஹராமோ அதுபோல மதுவும் ஹராமாகும் என்பதை இது காட்டுகிறது) இனி, அல்லாஹ் அது ஹராம் என்று கூறவில்லையே! அதைத் தவிர்ந்து கொள்ளுங்கள் என்று தானே கூறியுள்ளான் என்று கூறுபவர்களூக்கு எந்த ஆதாரமும் எஞ்சியிருக்கவில்லை.

மது அருந்துபவனுக்கு நபிமொழியிலும் கடுமையான எச்சரிக்கை வந்துள்ளது. 'போதைப் பொருளை அருந்துபவனுக்கு 'தீனதுல் கபால்' எனும் பானத்தைப் புகட்டுவதாக அல்லாஹ்விடம் ஒரு வாக்குறுதி உள்ளது' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது, 'அல்லாஹ்வின் தூதரே! 'தீனதுல் கபால்' என்றால் என்ன?' எனத் தோழர்கள் கேட்டதும் அல்லாஹ்வின் தூதரவர்கள், 'நரகவாசிகளின் வியர்வை அல்லது நரகவாசிகளின் சீழ் என பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்.

'மதுப்பழக்கத்திற்கு அடிமையான நிலையில் ஒருவன் மரணமடைந்து விட்டால் அவன் விக்கிரக ஆராதனை செய்தவன் போலவே அல்லாஹ்வை சந்திப்பான்' என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: தப்ரானி.

நம்முடைய இக்காலத்தில் மதுவும், போதைப் பொருள்களும் பல்வேறு வகைகளில் காணக் கிடைக்கின்றன. அரபியிலும் வேறு மொழிகளிலும் அவற்றுக்குப் பல்வேறு பெயர்கள் உள்ளன. மதுவை-கள் என்றும், சாராயம் என்றும், விஸ்கி, பீர், பிராந்தி, ஒயின், ரம், ஆல்கஹால், வோட்கா (Vodka), அரக் (Arrack), ஷாம்பேன் (Chanpagne) என்றெல்லாம் கூறிக் கொள்கின்றனர்.

'என்னுடைய சமுதாயத்தில் சிலர் நிச்சயம் மது அருந்துவார்கள். ஆனால் அதற்கு வேறு பெயரைக் கூறிக் கொள்வார்கள்' (நபிமொழி. அறிவிப்பவர்: அபூமாலிக் அல்-அஷ்அரி (ரலி), நூல்: இப்னுமாஜா) என்று யாரைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறினார்களோ அத்தகையவர்கள் இச்சமுதாயத்தில் தோன்றி விட்டனர். இவர்கள் மது என்ற பெயரை மூடி மறைத்து விட்டு அதற்குப் பகரமாக 'உற்சாகமூட்டும் பானங்கள்' எனக் கூறி மக்களை ஏமாற்றுகின்றனர். அல்லாஹ் கூறுகிறான்: "அவர்கள் அல்லாஹ்வையும் இறைநம்பிக்கை கொண்டவர்களையும் ஏமாற்றுகின்றனர். ஆனால் (உண்மையில்) அவர்கள் தம்மைத்தாமே ஏமாற்றிக் கொள்கின்றனரேயன்றி வேறில்லை. அவர்கள் அதை உணர்வதில்லை" (2:9).

இவ்விஷயத்துக்கு முடிவு கட்டக்கூடிய, விளையாட்டுத்தனமான இத்தகைய குழப்பத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் அழித்து ஒழிக்கக்கூடிய மாபெரும் சட்டத்தை இஸ்லாம் கொண்டு வந்துள்ளது. அது பின்வரும் நபிமொழியில் இவ்வாறு உள்ளது: 'போதை தரக்கூடிய அனைத்தும் மதுவாகும். போதை தரக்கூடிய அனைத்தும் ஹராமாகும்' அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: முஸ்லிம்.

புத்தியை பேதலிக்கச் செய்து, போதையை ஏற்படுத்தக் கூடிய அனைத்தும் - அது குறைவாக இருந்தாலும் அதிகாமாக இருந்தாலும் - ஹராமாகும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'போதை தரக்கூடியது அதிகமாக இருந்தாலும், குறைவாக இருந்தாலும் ஹராமாகும்' அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: அபூதாவூத்.

மதுவுக்கு எத்தனை பெயர்கள் இருந்தாலும் எத்தனை வகைகள் இருந்தாலும் எல்லாம் ஒன்றுதான். எல்லாம் மது தான். எல்லாவற்றுக்கும் (ஹராம் எனும்) ஒரே சட்டம் தான்.

இறுதியாக மது அருந்துபவர்களுக்கு இதோ நபி (ஸல்) அவர்கள் செய்த ஓர் அறிவுரை.

'எவன் மது அருந்தி அதனால் அவனுக்குப் போதை ஏற்பட்டால் அவனுடைய நாற்பது நாட்களின் காலைத் தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அவ்வாறே அவன் மரணமடைந்து விட்டால் நரகம் புகுவான். அவன் தவ்பா செய்தால் அவனுடைய தவ்பாவை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான். தவ்பா செய்து மீண்டும் மது அருந்தி, போதை ஏற்பட்டால் (மீண்டும்) அவனுடைய நாற்பது நாட்களின் காலைத் தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அப்படியே அவன் மரணமடைந்தால் நரகம் புகுவான். அவன் தவ்பா செய்தால் அவனுடைய தவ்பாவை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான்.
தவ்பா செய்து மீண்டும் மது அருந்தி, போதை ஏற்பட்டால் (மீண்டும்) அவனது நாற்பது நாட்களின் காலைத் தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அப்படியே அவன் மரணமடைந்தால் நரகம் புகுவான். அவன் தவ்பா செய்தால் அவனுடைய தவ்பாவை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான். திரும்பவும் அவன் மது அருந்தி போதை ஏற்பட்டால் மறுமை நாளில் அவனுக்கு 'ரத்கதுல் கபால்' என்ற பானத்தைப் புகட்டுவது அல்லாஹ்வின் மீது கடமையாகுமென நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே! 'ரத்கதுல் கபால்' என்றால் என்ன? என்று வினவினர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் 'நரகவாசிகளின் சீழ்' என பதிலளித்தார்கள்' அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), நூல்: இப்னு மாஜா.

மது போன்ற போதைப் பொருட்களைப் பயன்படுத்துபவர்களின் நிலையே இதுவானால் அதைவிடக் கடுமையான போதையுடைய பொருட்களைப் பயன்படுத்துபவர்களின் நிலை, அதற்கு அடிமையானவர்களின் நிலை எதுவோ?

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.