Showing posts with label விரோதம். Show all posts
Showing posts with label விரோதம். Show all posts

Monday, August 04, 2008

இரண்டு பேர் இரகசியம் பேசுதல்

அதாவது மூவரில் ஒருவரைப் புறக்கணித்து விட்டு இருவர் மட்டும் இரகசியம் பேசுதல். இது சபைக்குக் கேடு விளைவிப்பவைகளில் ஒன்றாகும். மேலும் முஸ்லிம்களுக்கு மத்தியில் பிரிவினையையும், விரோதத்தையும், குரோதத்தையும் தோற்றுவிப்பதற்காக ஷைத்தான் செய்யும் ஒரு சூழ்ச்சி ஆகும்.

இதன் சட்ட நிலையையும் காரணத்தையும் தெளிவுபடுத்தியவாறு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'நீங்கள் மூன்று பேர் இருந்தால் ஒருவரைப் புறக்கணித்து விட்டு இருவர் மட்டும் இரகசியம் பேசாதீர்கள் - மற்றவர்களும் வந்து நீங்கள் எல்லோரும் கலந்திருந்திடும் வரையில்! ஏனெனில் அது அவருக்கு மனம் வருந்தச் செய்யும்' அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி), நூல்: புகாரி.

நால்வர் இருக்கும் போது மூவர் மட்டும் இரகசியம் பேசுவதையும், ஐவர் இருக்கும் போது நால்வர் மட்டும் இரகசியம் பேசுவதையும், இப்படியாக ஒருவரை விட்டு விட்டு மற்றவர்கள் சேர்ந்து இரகசியம் பேசுவதையும் இது உள்ளடக்கும். இதுபோல மூன்றாமவருக்குத் தெரியாத மொழியில் இருவர் இரகசியம் பேசுவதையும் இது உள்ளடக்கும். இப்படியாக ஒருவரை விட்டு விட்டு மற்றவர்கள் இரகசியம் பேசுவது ஒரு வகையில் அவரை அற்பமாகக் கருதுவதாக அமையும். அல்லது தன்னைப் பற்றி அவர்கள் தவறாகப் பேசுகிறார்களோ என்பது போன்று அவர் எண்ணத் தோன்றும் என்பதில் ஐயமில்லை.

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.

கோள் சொல்லுதல்

மக்களிடையே குழப்பம் விளைவிப்பதற்காக ஒருவர் கூறியதை இன்னொருவரிடம் சொல்வதே கோள் ஆகும். கோள் சொல்லித் திரிவதை சிலர் தொழிலாகக் கொண்டுள்ளனர். இது மக்களிடையே விரோதத்தையும் குரோதத்தையும் மூட்டி விடுவதற்கும் அவர்களுக்கிடையே உள்ள நல்லுறவைத் துண்டிப்பதற்கும் மிகப் பெரிய காரணமாகும். இவ்வாறு செய்பவனை அல்லாஹ் இழித்துரைத்துள்ளான்:

"அதிகமாக சத்தியம் செய்கின்ற அற்பமான எந்த மனிதனுக்கும் நீர் அடங்கி விடாதீர். அவன் குறைகூறி திரிபவனாகவும் கோள் சொல்லித் திரிபவனாகவும் இருக்கின்றான்" (68:10,11) 'கோள்ச் சொல்லித் திரிபவன் சொர்க்கம் செல்ல மாட்டான்' என்பது நபிமொழி. அறிவிப்பவர்: ஹுதைஃபா (ரலி), நூல்: புகாரி.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது: 'நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் ஒரு தோட்டத்தின் பக்கமாகச் சென்று கொண்டிருந்த போது கப்றில் வேதனை செய்யப்படும் இரண்டு மனிதர்களின் சப்தத்தைச் செவியுற்றார்கள். அப்போது இவ்விருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள். (ஆனால்) ஒரு பெரிய விஷயத்திற்காக இவ்விருவரும் வேதனை செய்யப்படவில்லை என்று கூறிவிட்டு, ஆம்! (இதைத் தொடர்ந்து வேறொரு அறிவிப்பில் 'அது பெரிய விஷயம் தான்' என்று வந்துள்ளது) அவ்விருவரில் ஒருவர் சிறுநீர் கழிக்கும் போது (சிறுநீர் துளி தன்னில் படாமல்) பேணுதலாக இருக்கவில்லை. மற்றொருவர் கோள் சொல்லித் திரிபவராக இருந்தார் என்று கூறினார்கள். (புகாரி)

கோள் சொல்வதில் மிக மோசமானது கணவனைப் பற்றி மனைவியிடத்திலும், மனைவியைப் பற்றி கணவனிடத்திலும் குறை கூறித் திரிவதாகும். அவ்விருவருக்கிடையே உள்ள நல்லுறவைக் கெடுப்பதற்கான முயற்சியாகும் இது. அதுபோல பணியாளர்கள் தம் சக பணியாளர்களைப் பற்றி - அவர்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்துவதற்காக - மேனேஜரிடம் அல்லது ஏனைய பொறுப்பாளர்களிடம் கோள் சொல்கின்றனர். இதுவும் மோசமானதாகும். இவையனைத்துமே விலக்கப்பட்டவையாகும்.

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.