இறையச்சம் இல்லாதவன் செல்வத்தை எங்கிருந்து சம்பாதிக்கிறோம் அதை எவ்வழியில் செலவு செய்கிறோம் என்பதைப் பொருட்படுத்த மாட்டான். மாறாக, அவனுடைய அக்கரை தன் செல்வத்தை அதிகப்படுத்துவதிலேயே இருக்கும். அது திருடுதல், லஞ்சம் வாங்குதல், பிறருடைய பொருளை அபகரித்தல், மோசடி செய்தல், ஹராமான வியாபாரம், வட்டி கொடுக்கல் வாங்கல், அநாதையின் சொத்தை அபகரித்தல் ஆகியவற்றின் மூலமாகவோ அல்லது ஜோதிடம், விபச்சாரம், இசை போன்ற ஹராமான காரியங்களின் பேரில் கிடைக்கக் கூடிய கூலியின் மூலமாகவோ அல்லது பொது சொத்துகளில் கை வைத்தல், பிறரிடம் வற்புறுத்திக் கேட்டு பெறுதல், தேவையின்றி யாசகம் கேட்டல் போன்ற ஹராமான வழியின் மூலமாகவோ கிடைத்தாலும் சரியே! பின்னர் அவன் அதிலிருந்தே உண்பான், உடுத்துவான், வாகனம் வாங்குவான், வீடு கட்டுவான், அதை வாடகைக்கு அமர்த்துவான், வீட்டுக்குத் தேவையான சாமான்களை வாங்குவான், ஹராமைக் கொண்டே தன் வயிற்றை நிரப்பிக் கொள்வான் . நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்: 'ஹராமிலே வளர்ந்த ஒவ்வொரு உடலுக்கும் நரகமே பொருத்தமாகும்' (தப்ரானி)மறுமையில் அவனுடைய செல்வம் பற்றி - அதை எங்கிருந்து சம்பாதித்தாய்? எவ்வழியில் செலவழித்தாய்? என்று அவனிடம் விசாரணை செய்யப்படும். அங்குதான் அவனுக்கு நஷ்டமும், நாசமும் காத்திருக்கிறது. எனவே யாரிடம் ஹராமான பொருள் எஞ்சியிருக்கிறதோ அவர் விரைந்து தன்னை அதிலிருந்து விடுவித்துக் கொள்ளட்டும். அது ஒரு மனிதனுக்குரிய உரிமையாக இருந்தால் அந்த (மறுமை) நாள் வருவதற்கு முன் அதை அவரிடம் விரைந்து திருப்பிக் கொடுத்து அவரிடம் மன்னிப்புக் கோரட்டும். அந்த மறுமை நாள் வந்து விட்டாலோ விவகாரம் திர்ஹமையோ, தீனாரையோ கொண்டு தீர்க்கப்பட மாட்டாது. மாறாக, நன்மை, தீமைகளைக் கொண்டே தீர்க்கப்படும்.
எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.