அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்.'மதுப்பழக்கத்திற்கு அடிமையான நிலையில் ஒருவன் மரணமடைந்து விட்டால் அவன் விக்கிரக ஆராதனை செய்தவன் போலவே அல்லாஹ்வை சந்திப்பான்' என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: தப்ரானி.நம்முடைய இக்காலத்தில் மதுவும், போதைப் பொருள்களும் பல்வேறு வகைகளில் காணக் கிடைக்கின்றன. அரபியிலும் வேறு மொழிகளிலும் அவற்றுக்குப் பல்வேறு பெயர்கள் உள்ளன. மதுவை-கள் என்றும், சாராயம் என்றும், விஸ்கி, பீர், பிராந்தி, ஒயின், ரம், ஆல்கஹால், வோட்கா (Vodka), அரக் (Arrack), ஷாம்பேன் (Chanpagne) என்றெல்லாம் கூறிக் கொள்கின்றனர்.'என்னுடைய சமுதாயத்தில் சிலர் நிச்சயம் மது அருந்துவார்கள். ஆனால் அதற்கு வேறு பெயரைக் கூறிக் கொள்வார்கள்' (நபிமொழி. அறிவிப்பவர்: அபூமாலிக் அல்-அஷ்அரி (ரலி), நூல்: இப்னுமாஜா) என்று யாரைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறினார்களோ அத்தகையவர்கள் இச்சமுதாயத்தில் தோன்றி விட்டனர். இவர்கள் மது என்ற பெயரை மூடி மறைத்து விட்டு அதற்குப் பகரமாக 'உற்சாகமூட்டும் பானங்கள்' எனக் கூறி மக்களை ஏமாற்றுகின்றனர். அல்லாஹ் கூறுகிறான்: "அவர்கள் அல்லாஹ்வையும் இறைநம்பிக்கை கொண்டவர்களையும் ஏமாற்றுகின்றனர். ஆனால் (உண்மையில்) அவர்கள் தம்மைத்தாமே ஏமாற்றிக் கொள்கின்றனரேயன்றி வேறில்லை. அவர்கள் அதை உணர்வதில்லை" (2:9).
இவ்விஷயத்துக்கு முடிவு கட்டக்கூடிய, விளையாட்டுத்தனமான இத்தகைய குழப்பத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் அழித்து ஒழிக்கக்கூடிய மாபெரும் சட்டத்தை இஸ்லாம் கொண்டு வந்துள்ளது. அது பின்வரும் நபிமொழியில் இவ்வாறு உள்ளது: 'போதை தரக்கூடிய அனைத்தும் மதுவாகும். போதை தரக்கூடிய அனைத்தும் ஹராமாகும்' அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: முஸ்லிம்.புத்தியை பேதலிக்கச் செய்து, போதையை ஏற்படுத்தக் கூடிய அனைத்தும் - அது குறைவாக இருந்தாலும் அதிகாமாக இருந்தாலும் - ஹராமாகும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'போதை தரக்கூடியது அதிகமாக இருந்தாலும், குறைவாக இருந்தாலும் ஹராமாகும்' அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: அபூதாவூத்.மதுவுக்கு எத்தனை பெயர்கள் இருந்தாலும் எத்தனை வகைகள் இருந்தாலும் எல்லாம் ஒன்றுதான். எல்லாம் மது தான். எல்லாவற்றுக்கும் (ஹராம் எனும்) ஒரே சட்டம் தான்.இறுதியாக மது அருந்துபவர்களுக்கு இதோ நபி (ஸல்) அவர்கள் செய்த ஓர் அறிவுரை.
'எவன் மது அருந்தி அதனால் அவனுக்குப் போதை ஏற்பட்டால் அவனுடைய நாற்பது நாட்களின் காலைத் தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அவ்வாறே அவன் மரணமடைந்து விட்டால் நரகம் புகுவான். அவன் தவ்பா செய்தால் அவனுடைய தவ்பாவை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான். தவ்பா செய்து மீண்டும் மது அருந்தி, போதை ஏற்பட்டால் (மீண்டும்) அவனுடைய நாற்பது நாட்களின் காலைத் தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அப்படியே அவன் மரணமடைந்தால் நரகம் புகுவான். அவன் தவ்பா செய்தால் அவனுடைய தவ்பாவை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான்.
தவ்பா செய்து மீண்டும் மது அருந்தி, போதை ஏற்பட்டால் (மீண்டும்) அவனது நாற்பது நாட்களின் காலைத் தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அப்படியே அவன் மரணமடைந்தால் நரகம் புகுவான். அவன் தவ்பா செய்தால் அவனுடைய தவ்பாவை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான். திரும்பவும் அவன் மது அருந்தி போதை ஏற்பட்டால் மறுமை நாளில் அவனுக்கு 'ரத்கதுல் கபால்' என்ற பானத்தைப் புகட்டுவது அல்லாஹ்வின் மீது கடமையாகுமென நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே! 'ரத்கதுல் கபால்' என்றால் என்ன? என்று வினவினர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் 'நரகவாசிகளின் சீழ்' என பதிலளித்தார்கள்' அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), நூல்: இப்னு மாஜா.மது போன்ற போதைப் பொருட்களைப் பயன்படுத்துபவர்களின் நிலையே இதுவானால் அதைவிடக் கடுமையான போதையுடைய பொருட்களைப் பயன்படுத்துபவர்களின் நிலை, அதற்கு அடிமையானவர்களின் நிலை எதுவோ?
எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.