Showing posts with label எச்சரிக்கை. Show all posts
Showing posts with label எச்சரிக்கை. Show all posts

Monday, August 04, 2008

Backgam Mon எனும் ஒருவகை சூதாட்டம்

மக்களிடையே பரவலாக வழக்கத்திலுள்ள பெரும்பாலான விளையாட்டுகள் ஹராமான காரியங்களை உள்ளடக்கியுள்ளன. அதில் ஒன்று Backgam Mon எனும் ஒருவகை விளையாட்டாகும். இதை விளையாட ஆரம்பித்தால் இது போன்ற பல விளையாட்டுகளுக்கு இது இட்டுச் செல்லும். பல சூதாட்டங்களுக்கு வழி திறந்து விடுகின்ற Backgam Mon எனும் இந்த விளையாட்டு குறித்து நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு எச்சரித்துள்ளார்கள்: 'யார் Backgam Mon எனும் விளையாட்டை விளையாடுகின்றாரோ அவர் பன்றியின் இறைச்சியிலும் இரத்தத்திலும் கையை நுழைத்தவராவார். அறிவிப்பவர்: புரைதா (ரலி), நூல்: முஸ்லிம்.

'Backgam Mon விளையாட்டை விளையாடியவர் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மாறு செய்து விட்டார்' என்பதும் நபிமொழி. அறிவிப்பவர்: அபூமூஸா (ரலி), நூல்: அஹ்மத்

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.

கப்ரின் மீது அமர்தல், மிதித்தல், அடக்கஸ்தலங்களில் மல ஜலம் கழித்தல்.

'உங்களில் ஒருவர் நெருப்பின் மீது அமர்ந்து அது அவருடைய ஆடையை எரித்து தோலையும் பதம் பார்ப்பது கப்ரின் மீது அமர்வதை விட சிறந்தது' என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்.

கப்ருகளை மிதித்தல்: சிலர் இவ்வாறு செய்கின்றனர். இறந்தவர்களை அடக்கம் செய்யும் போது நீங்கள் அவர்களைக் காணலாம். அருகிலுள்ள கப்ருகளை மிதிப்பதை சற்றும் பொருட்படுத்த மாட்டார்கள். சிலபோது செருப்புக் கால்களுடன் மிதிப்பார்கள் - அங்கு அடக்கம் செய்யப்பட்டோருக்கு எந்த மரியாதையையும் கொடுக்காமல் இவ்வாறு செல்வார்கள். இது எவ்வளவு பெரிய பாவம் என்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியுள்ளார்கள்: 'நெருப்பின் மீதோ அல்லது (கூரிய) வாளின் மீதோ நான் நடப்பது அல்லது எனது செருப்பை எனது காலுடன் சேர்த்து நான் தைத்து விடுவது ஒரு முஸ்லிமின் கப்ரின் மீது நான் நடப்பதை விடவும் எனக்கு விருப்பமானதாகும்' அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி), நூல்: முஸ்லிம்.

அப்படியானால் அடக்கச்தலத்தைக் கைப்பற்றி அதில் வியாபார நோக்குடன் கடைகளை அல்லது வீடுகளைக் கட்டுபவரின் நிலை என்ன? சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

கப்ருகளில் மல ஜலம் கழிப்பது: சில துர்ப்பாக்கியசாலிகள் இதைச் செய்கின்றனர். அவர்களுக்கு மல ஜலத்தினுடைய தேவை ஏற்பட்டால் சுவர் ஏறிக் குதித்து அல்லது வேறு வழியாக அடக்கஸ்தலத்திற்குள் நுழைந்து தனது அசுத்தம் மற்றும் துர்நாற்றத்தின் மூலம் அங்கு அடக்கப்பட்டிருப்பவர்களுக்கு துன்பம் தருகின்றனர்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'அடக்கஸ்தலங்களில் மல ஜலம் கழிப்பதும், கடைவீதிக்கு மத்தியில் (வெட்கமின்றி) மல ஜலம் கழிப்பதும் என்னைப் பொருத்த வரையில் ஒரு பொருட்டே அல்ல (இரண்டும் சமம் தான்.) (இப்னு மாஜா) அதாவது கடைவீதியில் மக்களின் முன்னிலையில் மானம் திறந்த நிலையில் மல ஜலம் கழிப்பது எந்த அளவு மோசமானதோ, அதுபோல அடக்கஸ்தலத்தில் மல ஜலம் கழிப்பதும் மோசமான செயலாகும். இன்னும் சிலர் அடக்கஸ்தலங்களில் குறிப்பாக பாழடைந்த மற்றும் சுற்றுப்புறச் சுவர்கள் இடிந்து விட்ட அடக்கஸ்தலங்களில் அசுத்தங்களையும், குப்பைக் கூழங்களையும் வீசுகின்றனர். நபிமொழியில் வந்திருக்கின்ற எச்சரிக்கையில் இவர்களுக்கும் பங்குண்டு. அடக்கஸ்தலங்களைத் தரிசிக்கச் செல்லும் போது கவனிக்க வேண்டிய ஒழுக்கங்களில் இதுவும் ஒன்றாகும். அதாவது கப்ருகளுக்கு மத்தியில் செல்ல நாடும் போது பாதணிகளைக் கழற்றி விட வேண்டும்.

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.

கணுக்காலுக்குக் கீழ் ஆடை அணிதல்

மக்கள் சாதாரணமாகக் கருதக்கூடிய விஷயங்களில் இதுவும் ஒன்றாகும்.ஆனால் அது அல்லாஹ்விடம் மிகப் பெரிய விஷயமாகும். சிலர் தரையைத் தொடுமளவுக்கு ஆடை அணிகின்றனர். இன்னும் சிலர் தமது ஆடையைத் தரையோடும் இழுத்துச் செல்கின்றனர்.

அபூதர் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது: 'மறுமையில் அல்லாஹ் மூவரிடத்தில் பேசவும் மாட்டான், அவர்களைப் பார்க்கவும் மாட்டான், அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான், அவர்களுக்கு நோவினை மிக்க வேதனை உண்டு. (அவர்கள் யாரெனில்) கணுக்காலுக்குக் கீழ் ஆடை அணிபவன், செய்த தர்மத்தைச் சொல்லிக் காட்டுபவன், பொய் சத்தியம் மூலம் பொருளை விற்பவன் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்' (புகாரி)

நான் கணுக்காலுக்குக் கீழ் ஆடை அணிந்திருப்பது பெருமைக்காக அல்ல என்று கூறுபவர் தம்மைத் தாமே பரிசுத்தப்படுத்திக் கொள்கின்றார். இது ஏற்கத்தக்கதல்ல. ஏனெனில் கணுக்காலுக்குக் கீழ் ஆடை அணிபவர் விஷயத்தில் வந்திருக்கின்ற எச்சரிக்கை பொதுவானது தான். அவர் பெருமைக்காக அணிந்தாலும் சரி அல்லது வேறு நோக்கத்திற்காக அணிந்தாலும் சரி. பின்வரும் நபிமொழி இதைத்தான் அறிவிக்கிறது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'கணுக்காலுக்குக் கீழ் ஆடை அணிவது நரகத்திற்குக் கொண்டு போகும்' அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி.

ஆனால் அவர் பெருமைக்காக அணிந்தால் அவருடைய தண்டனை மிகக் கடுமையாக இருக்கும். அது குறித்து பின்வரும் நபிமொழியில் வந்துள்ளதாவது: 'பெருமைக்காக யார் தன்னுடைய ஆடையை தரையோடு இழுத்துச் செல்கின்றாரோ மறுமையில் அல்லாஹ் அவரைப் பார்க்க மாட்டான்' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல் புகாரி).

இது ஏனெனில் இதில் (கணுக்காலுக்குக் கீழ் ஆடை அணிதல், பெருமை என) விலக்கப்பட்ட இரு விஷயங்கள் ஒரு சேர அமைந்துள்ளன.

கணுக்காலுக்குக் கீழ் ஆடை அணிவது ஹராமென்பது எல்லா வகையான ஆடைகளுக்கும் பொருந்தும். இப்னு உமர் (ரலி) அறிவிக்கும் பின்வரும் நபிமொழி இதற்குச் சான்றாகும்.

'கணுக்காலுக்குக் கீழ் ஆடை அணிவதென்பது வேட்டி, சட்டை, தலைப்பாகை ஆகிய மூன்றிலும் அடங்கும். இவற்றில் ஒன்றை யாரேனும் பெருமைக்காக தரையோடு இழுத்திச் செல்கின்றாரோ அவரை மறுமையில் அல்லாஹ் பார்க்க மாட்டான்' (நபிமொழி) நூல்: அபூதாவூத்.

ஆனால் ஒரு பெண் தனது பாதத்தை மறைப்பதற்காக தம் ஆடையை கணுக்காலுக்குக் கீழ் ஒரு ஜாண் அல்லது ஒரு முழம் தொங்க விட்டுக் கொள்வது அனுமதிக்கப்பட்டுள்ளது. இது, காற்று போன்ற காரணத்தால் பாதம் வெளிப்பட்டு விடாமல் பேணிக்கையாக இருப்பதற்காகவாகும். ஆயினும் அளவு கடந்து விடக் கூடாது. உதாரணமாக திருமணத்தின் போது சில மணப்பெண்களின் ஆடைகள் பல ஜாண்கள், பல மீட்டர்கள் நீளமாக இருக்கின்றன. எந்த அளவுக்கெனில் சிலபோது மணப்பெண்ணுக்குப் பின்னால் ஒருவர் அந்த ஆடையை சுமந்து வர வேண்டியதிருக்கிறது.

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.