Showing posts with label வேதனை. Show all posts
Showing posts with label வேதனை. Show all posts

Monday, August 04, 2008

சபித்தல்

பெரும்பாலோர் கோபப்படும் பொழுது தமது நாவுகளைக் கட்டுப்படுத்த முடியாமல் உடனே சாபமிட்டு விடுகின்றனர். அந்த நேரத்தில் மனிதர்கள், உயிரினங்கள், திடப்பொருட்கள், காலங்கள், நாட்கள், நேரங்கள் யாவற்றையும் சபித்து விடுகின்றனர். இன்னும் சொல்வதானால் சிலவேளை தங்களையும் தங்கள் குழந்தைகளையும் கூட சபித்து விடுகின்றனர். மட்டுமல்ல கணவன் மனைவியையும் மனைவி கணவனையும் சபிக்கின்றனர். இது தீய ஆபத்தான செயலாகும்.

'....ஒரு மூமினை சபித்தவன் அவனை கொலை செய்தவன் போலாவான்' என்பது நபிமொழி. ஸாபித் பின் ழஹ்ஹாக் (ரலி) அவர்கள் அறிவிக்கும் இந்த ஹதீஸ் புகாரியில் உள்ளது.

பெண்கள் அதிகம் சபிக்கின்றார்கள். அதுவே அவர்கள் நரகில் நுழைவதற்குக் காரணமாக அமைகின்றது என்பதை நபி (ஸல்) அவர்களும் தெளிவுபடுத்தி உள்ளார்கள். அதுபோல சபிக்கின்றவர்கள் மறுமையில் பரிந்துரை செய்பவர்களாக இருக்க மாட்டார்கள். இதில் ஆபத்தானது என்னவெனில் அநியாயமாக ஒருவன் ஒருவனை சபித்தால் அவனது சாபம் அவன் மீதே திரும்பி விடுகின்றது. அந்த நேரத்தில் அவன் தனக்கெதிராக தானே இறையருளை விட்டும் தூரமாவதற்குப் பிரார்த்தித்தவனாகின்றான்.

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.

ஒட்டுக் கேட்டல்

அல்லாஹ் கூறுகிறான்: "துருவித் துருவி ஆராயாதீர்கள்" (49:12). இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'யாரேனும் மக்களின் செய்தியை அவர்கள் விரும்பாத நிலையில் ஒட்டுக் கேட்டால் மறுமையில் அவனுடைய காதுகளில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றப்படும்' நபிமொழி (தப்ரானி)

அவர்களுக்கு தெரியாமல் அவர்களுடைய செய்தியை ஒட்டுக் கேட்டு அவர்களுக்கு இடைஞ்சலை ஏற்படுத்துவதற்காக பிறரிடம் எடுத்துச் சொன்னால் அவன் துருவித் துருவி ஆராய்தல் (அல்லது ஒட்டுக் கேட்டல்) எனும் பாவத்துடன் (கோள் சொல்லுதல் எனும்) இன்னொரு பாவத்தையும் செய்தவனாவான். 'கோள் சொல்பவன் சுவர்க்கம் செல்ல மாட்டான்' என்பது நபிமொழி. (புகாரி)

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.

சிறுநீரிலிருந்து தற்காத்துக் கொள்ளாதிருத்தல்

இறைமார்க்கத்தின் சிறப்பம்சம் என்னவெனில் மனிதனுடைய விவகாரங்களைச் சீர் செய்யக்கூடிய அனைத்தையும் அது கூறியுள்ளது. அவற்றில் ஒன்று அசுத்தத்தை நீக்குவது. அதனால் தான் தண்ணீரைக் கொண்டு சுத்தம் செய்வதும், கற்களைக் கொண்டு சுத்தம் செய்வதும் சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமா? தூய்மையும் சுத்தமும் எப்படி ஏற்படுமென்ற விபரத்தையும் இம்மார்க்கம் விவரித்துள்ளது. மக்களில் சிலர், அசுத்தத்தை நீக்குவதில் கவனக் குறைவாக இருக்கின்றனர். அதுதான் ஆடையிலோ, உடம்பிலோ பட்டுவிடுவதற்குக் காரணமாக இருக்கின்றது. மட்டுமல்ல தொழுகை கூடாமல் போவதற்குக் காரணமும் அதுதான். மேலும் கப்ரு வேதனைக்கான காரணங்களில் அதுவும் ஒன்றாகும் என்று நபி (ஸல்) அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது: 'நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் ஒரு தோட்டத்தின் பக்கமாகச் சென்று கொண்டிருந்த போது கப்றில் வேதனை செய்யப்படும் இரண்டு மனிதர்களின் சப்தத்தைச் செவியுற்றார்கள். அப்போது இவ்விருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள். (ஆனால்) ஒரு பெரிய விஷயத்திற்காக இவ்விருவரும் வேதனை செய்யப்படவில்லை என்று கூறிவிட்டு, ஆம்! (இதைத் தொடர்ந்து வேறொரு அறிவிப்பில் 'அது பெரிய விஷயம் தான்' என்று வந்துள்ளது) அவ்விருவரில் ஒருவர் சிறுநீர் கழிக்கும் போது (சிறுநீர் துளி தன்னில் படாமல்) பேணுதலாக இருக்கவில்லை. மற்றொருவர் கோள் சொல்லித் திரிபவராக இருந்தார் என்று கூறினார்கள். (புகாரி) இன்னும் சொல்வதானால், 'பெரும்பாலும் கப்ரு வேதனை சிறுநீர் விஷயத்தில் பேணுதல் இல்லாதனாலேயே ஏற்படுகிறது' எனவும் நபி (ஸல்) அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

சிறுநீரிலிருந்து தற்காத்துக் கொள்ளாதிருத்தல் என்பது பின்வரும் அனைத்து நிலைகளையும் உள்ளடக்கும். ஒருவன் சிறுநீர் கழிக்கும் போது அது முழுமையாக வெளியேறி விடுவதற்கு முன்பே அவசர அவசரமாக எழுந்து விடுதல். அல்லது சிறுநீர் கழிக்கும் போது அது தன் மீது தெறிக்கும் விதத்தில் அல்லது தன் பக்கம் அது திரும்பி வரும் இடத்தில் அமர்ந்து சிறுநீர் கழித்தல், அல்லது சிறுநீர் கழித்து விட்டு தண்ணீரால் அல்லது கல், காகிதம் போன்றவற்றால் சுத்தம் செய்யாமல் எழுந்து விடுதல், அல்லது அரைகுறையாக சுத்தம் செய்தல்.

இன்று நமது காலத்தில் காஃபிர்கள் செய்வது போன்று செய்யும் நிலை ஏற்பட்டிருக்கிறது. எவ்வாறெனில் சில கழிப்பிடங்களில் சிறுநீர் கழிப்பதற்கென சுவரை ஒட்டி சில இடங்கள் இருக்கும். கதவுகள் இல்லாமல் அவை திறந்து காணப்படும். அங்கு நம்மவர்கள் வருவோர் போவோர் முன்னிலையில் கொஞ்சமும் வெட்கமின்றி சிறுநீர் கழிக்கின்றனர். பிறகு சுத்தம் செய்யாமலேயே ஆடையணிந்து கொண்டு சென்று விடுகின்றனர். இவர்கள் ஒரே நேரத்தில் மோசமான விலக்கப்பட்ட இரு காரியங்களை செய்கின்றனர். ஒன்று: மக்களின் பார்வையை விட்டும் தம் மானத்தை மறைப்பதில்லை. இரண்டு: தம்மீது சிறுநீர் படுவதிலிருந்து காத்துக் கொள்வதில்லை, சுத்தம் செய்வதில்லை.

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.

உயிருள்ளவற்றின் உருவங்களை வரைதல்

ஆடைகள், சுவர்கள், காகிதங்கள் போன்றவற்றில் உயிருள்ளவற்றின் உருவங்களைத் தீட்டுவது ஹராமாகும். 'மறுமையில் அல்லாஹ்விடத்தில் கடுமையான வேதனைக்குரியவர்கள் உருவங்களைத் தீட்டுபவர்களே' என்பது நபிமொழி. அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி), நூல்: புகாரி.

'நான் படைப்பதைப் போன்று படைக்க முற்படுபவனை விட அநியாயக்காரன் யார் இருக்க முடியும்? ஒரு வித்தையேனும் அல்லது ஒரு சிறு எறும்பையேனும் அவர்கள் படைக்கட்டுமே! (முடியுமா?)' என அல்லாஹ் கூறுவதாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி, முஸ்லிம்.

'உருவங்கள் வரையக் கூடியவர்கள் அனைவரும் நரகம் செல்வர். அல்லாஹ் அவன் வரைந்த ஒவ்வொரு உருவத்துக்கும் உயிரைக் கொடுப்பான். பிறகு அது அவனை நரகில் வேதனை செய்யும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். எனவே நீ வரைந்து தான் ஆக வேண்டுமென்றால் மரங்களையும், உயிரற்றவைகளையும் வரைவீராக!' என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம்).

இந்த நபிமொழிகள் யாவும் உயிருள்ள மனிதர்கள் மற்றும் ஏனைய உயிரினங்களின் - அவற்றுக்கு நிழல் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி - உருவங்களை வரைவது ஹராம் என அறிவிக்கின்றன. அவ்வுருவங்கள் அச்சிடப்பட்டாலும் சரி, வரையப்பட்டாலும் சரி, குடைந்தெடுக்கப்பட்டாலும் சரி, பொறிக்கப்பட்டாலும் சரி, செதுக்கப்பட்டாலும் சரி, அல்லது அச்சில் வார்த்தெடுக்கப்பட்டாலும் சரி ஹராம் தான். இவ்வனைத்தையும் உள்ளடக்கும் வகையில் ஹதீஸ்கள் பொதுவாக வந்துள்ளன.

முஸ்லிமைப் பொறுத்தவரையில் மார்க்க ஆதாரத்துக்கு அவன் கீழ்ப்படிய வேண்டும். உருவங்கள் வரைவதிலிருந்து தவிர்ந்து கொள்ள வேண்டும். அதை நான் வணங்கவா போகிறேன்? அதற்கு நான் சிரம் பணியவா போகிறேன்? என்று குதர்க்கம் பேசக் கூடாது. நம்முடைய இந்தக் காலத்தில் உருவப்படங்கள் பல்கிப் பெருகியிருப்பதன் விளைவால் ஏற்பட்ட ஒரே ஒரு தீமையை மட்டும் ஒரு புத்திசாலி தெளிந்த நோக்குடன் சிந்தித்துப் பார்த்தால் இதை ஏன் ஷரீஅத் தடை செய்திருக்கின்றது என்பதன் தத்துவம் தெரியவரும். அது இதுதான், அதனால் பெரும் தீமைகள் விளைகின்றன. உணர்ச்சிகள் தூண்டப்படுகின்றன, இச்சைகள் கிளரப்படுகின்றன. உண்மையைச் சொல்வதானால் சில உருவப்படங்களின் காரணமாக மானக்கேடான காரியங்களில் வீழ்ந்திட நேரிடுகின்றது. (ஏன் ஏக இறைவனை விடுத்து உருவங்களை வழிபடுவதன் பால் இந்த உருவ(பட)ங்களே இழுத்துச் செல்கின்றன என்றால் அது மிகையாகாது.)

எனவே ஒரு முஸ்லிம் உயிருள்ளவற்றின் உருவப்படங்களை தன் வீட்டில் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ள கூடாது. அவற்றை அகற்றி விடுவது அவசியமாகும். காரணம் அவனுடைய வீட்டில் மலக்குகள் நுழைவதற்கு அது தடையாக ஆகிவிடக் கூடாது என்பதற்காக. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'நாய் மற்றும் உருவப்படங்கள் உள்ள வீட்டில் வானவர்கள் நுழையமாட்டார்கள்' அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி.

சில வீடுகளில் உருவச் சிலைகளைக் காணலாம். அவற்றுள் சில, காஃபிர்கள் வணங்கக் கூடிய தெய்வங்களாக உள்ளன. இவை அன்பளிப்பாகக் கடைத்துள்ளன, அலங்காரத்திற்காக வைத்துள்ளோம் என்று கூறுகின்றனர். மற்றவைகளை விட இவை கடுமையான ஹராமாகும். அதுபோல சுவரில் மாட்டப்படாத உருவப்படங்களை விட சுவரில் மாட்டப்பட்ட உருவப்படங்கள் கடுமையான ஹராமாகும். ஏனெனில் எத்தனையோ உருவப்படங்கள் மதிப்பு, மரியாதைக்கு இட்டுச் செல்வதைப் பார்க்கிறோம். எத்தனையோ உருவப்படங்கள் மறந்து போன துக்கத்தையும், துயரத்தையும் மீண்டும் ஞாபகப்படுத்துகின்றன. எத்தனையோ உருவப்படங்கள் முன்னோர்கள் குறித்து பெருமையடிப்பதன் பால் இட்டுச் செல்கின்றன. மேலும் உருவப்படங்களை ஞாபகார்த்தமாக வைத்திருக்கிறோம் என்றும் கூற முடியாது. ஏனெனில் உண்மையில் முஸ்லிமான நண்பர், உறவினர் தொடர்பான உள்ளத்தின் உண்மையான நினைவு கூறல் என்பது அவருக்காக மன்னிப்பையும் அருளையும் வேண்டிப் பிரார்த்திப்பதாகும்.

ஆகவே ஒரு முஸ்லிம் இத்தகைய உருவங்களை அகற்றுவதோ அல்லது அழிப்பதோ அவசியமாகும். ஆனால் அப்படி அகற்றுவது முடியாத காரியமாக இருந்தாலேத் தவிர! அதில் அளவு கடந்த சிரமம் இருந்தாலே தவிர! உதாரணமாக சரக்குகள் உள்ள பாக்கெட்டுகள், கேன்கள், டின்கள், பயனுள்ள புத்தகங்கள், அகராதிகள் போன்ற பல்வேறு பொருட்களில் உருவங்களைப் போடுவது இன்று உலகெங்கும் பரவியுள்ள தீமையாகி விட்டது! என்றாலும் அவற்றை நீக்குவதற்கு முடிந்த அளவு முயற்சிக்க வேண்டும். சில பொருட்களிலுள்ள தவறான படங்களையும் தவிர்க்க வேண்டும். அல்லது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

சில அவசியத் தேவைகளுக்காக உருவப்படங்களைப் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்வதில் தவறில்லை. உதாரணமாக பாஸ்போர்ட், அடையாள அட்டை போன்ற அரசு ஆவணங்களில் உள்ள உருவங்களைப் போல. சில அறிஞர்கள், மதிப்பளிக்கப்படாமல் கால்களால் மிதிபடக்கூடிய உருவங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளனர். அல்லாஹ் கூறுகிறான்: "உங்களால் முடிந்த வரை அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்" (64:16).

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.

கணுக்காலுக்குக் கீழ் ஆடை அணிதல்

மக்கள் சாதாரணமாகக் கருதக்கூடிய விஷயங்களில் இதுவும் ஒன்றாகும்.ஆனால் அது அல்லாஹ்விடம் மிகப் பெரிய விஷயமாகும். சிலர் தரையைத் தொடுமளவுக்கு ஆடை அணிகின்றனர். இன்னும் சிலர் தமது ஆடையைத் தரையோடும் இழுத்துச் செல்கின்றனர்.

அபூதர் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது: 'மறுமையில் அல்லாஹ் மூவரிடத்தில் பேசவும் மாட்டான், அவர்களைப் பார்க்கவும் மாட்டான், அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான், அவர்களுக்கு நோவினை மிக்க வேதனை உண்டு. (அவர்கள் யாரெனில்) கணுக்காலுக்குக் கீழ் ஆடை அணிபவன், செய்த தர்மத்தைச் சொல்லிக் காட்டுபவன், பொய் சத்தியம் மூலம் பொருளை விற்பவன் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்' (புகாரி)

நான் கணுக்காலுக்குக் கீழ் ஆடை அணிந்திருப்பது பெருமைக்காக அல்ல என்று கூறுபவர் தம்மைத் தாமே பரிசுத்தப்படுத்திக் கொள்கின்றார். இது ஏற்கத்தக்கதல்ல. ஏனெனில் கணுக்காலுக்குக் கீழ் ஆடை அணிபவர் விஷயத்தில் வந்திருக்கின்ற எச்சரிக்கை பொதுவானது தான். அவர் பெருமைக்காக அணிந்தாலும் சரி அல்லது வேறு நோக்கத்திற்காக அணிந்தாலும் சரி. பின்வரும் நபிமொழி இதைத்தான் அறிவிக்கிறது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'கணுக்காலுக்குக் கீழ் ஆடை அணிவது நரகத்திற்குக் கொண்டு போகும்' அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி.

ஆனால் அவர் பெருமைக்காக அணிந்தால் அவருடைய தண்டனை மிகக் கடுமையாக இருக்கும். அது குறித்து பின்வரும் நபிமொழியில் வந்துள்ளதாவது: 'பெருமைக்காக யார் தன்னுடைய ஆடையை தரையோடு இழுத்துச் செல்கின்றாரோ மறுமையில் அல்லாஹ் அவரைப் பார்க்க மாட்டான்' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல் புகாரி).

இது ஏனெனில் இதில் (கணுக்காலுக்குக் கீழ் ஆடை அணிதல், பெருமை என) விலக்கப்பட்ட இரு விஷயங்கள் ஒரு சேர அமைந்துள்ளன.

கணுக்காலுக்குக் கீழ் ஆடை அணிவது ஹராமென்பது எல்லா வகையான ஆடைகளுக்கும் பொருந்தும். இப்னு உமர் (ரலி) அறிவிக்கும் பின்வரும் நபிமொழி இதற்குச் சான்றாகும்.

'கணுக்காலுக்குக் கீழ் ஆடை அணிவதென்பது வேட்டி, சட்டை, தலைப்பாகை ஆகிய மூன்றிலும் அடங்கும். இவற்றில் ஒன்றை யாரேனும் பெருமைக்காக தரையோடு இழுத்திச் செல்கின்றாரோ அவரை மறுமையில் அல்லாஹ் பார்க்க மாட்டான்' (நபிமொழி) நூல்: அபூதாவூத்.

ஆனால் ஒரு பெண் தனது பாதத்தை மறைப்பதற்காக தம் ஆடையை கணுக்காலுக்குக் கீழ் ஒரு ஜாண் அல்லது ஒரு முழம் தொங்க விட்டுக் கொள்வது அனுமதிக்கப்பட்டுள்ளது. இது, காற்று போன்ற காரணத்தால் பாதம் வெளிப்பட்டு விடாமல் பேணிக்கையாக இருப்பதற்காகவாகும். ஆயினும் அளவு கடந்து விடக் கூடாது. உதாரணமாக திருமணத்தின் போது சில மணப்பெண்களின் ஆடைகள் பல ஜாண்கள், பல மீட்டர்கள் நீளமாக இருக்கின்றன. எந்த அளவுக்கெனில் சிலபோது மணப்பெண்ணுக்குப் பின்னால் ஒருவர் அந்த ஆடையை சுமந்து வர வேண்டியதிருக்கிறது.

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.