Saturday, December 31, 2005

ஹராமை ஹலாலாகவும் ஹலாலை ஹராமாகவும் ஆக்குதல்

இன்று பரவலாகக் காணப்படக்கூடிய மிகப் பெரும் இணைவைத்தலுக்கு மற்றொரு உதாரணம் அல்லாஹ் ஹராமாக்கியவற்றை ஹலாலாகவும் அல்லாஹ் ஹலாலாக்கியவற்றை ஹராமாகவும் ஆக்குவது. அல்லது ஹலால், ஹராம் ஆக்குகின்ற இந்த உரிமை அல்லாஹ்வை விடுத்து மற்றவருக்கும் இருக்கிறது என்று நம்புவது. அல்லது அஞ்ஞான காலத்தின் அடிப்படையிலான நீதிமன்றங்களையும் சட்டங்களையும் நாடிச் சென்று முழு திருப்தியுடனும் விருப்பத்துடனும் வழக்குத் தொடுப்பது. அது ஹலால் - ஆகுமானது என்று கருதுவது. இதனை அல்லாஹ் மிகப் பெரும் குஃப்ர் - இறைநிராகரிப்பு என பின்வரும் வசனத்தில் கூறியுள்ளான்:

"அவர்கள் அல்லாஹ்வை விடுத்து தங்கள் பாதிரிகளையும், துறவிகளையும் கடவுளராக ஆக்கிக் கொண்டார்கள்" (9:31)

(முன்பு கிறிஸ்தவராக இருந்த) அதிய்யுப்னு ஹாதிம் (ரலி) இந்த வசனத்தை நபி (ஸல்) அவர்கள் ஓதிடக் கேட்டபோது அந்த மக்கள் அவர்களை (பாதிரிகளையும், துறவிகளையும்) வணங்கிக் கொண்டிருக்கவில்லையே என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், சரிதான்! ஆனால் அந்த பாதிரிகளும், துறவிகளும் அல்லாஹ் ஹராமாக்கியவற்றை ஹலால் என்றும், அல்லாஹ் ஹலாலாக்கியவற்றை ஹராம் என்றும் கூறும்போது அவர்களும் அவ்வாறு ஏற்றுக் கொண்டார்களே! அதுதான் அவர்களை அவர்கள் வணங்குவதாகும். (திர்மிதி, பைஹகி)

மேலும் இணை வைப்பவர்களைப் பற்றி அல்லாஹ் குறிப்பிடும் போது, "அவர்கள் அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் விலக்கியவற்றை விலக்கப்பட்டவை என்று கருதாமலும் சத்திய மார்க்கத்தைப் பின்பற்றாமலும் இருக்கின்றார்கள்.... (9:29) என்று கூறியுள்ளான். மேலும் அல்லாஹ் கூறுகிறான்: "(நபியே! இவர்களிடம்) நீர் கேளும்: நீங்கள் எப்போதாவது யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா அல்லாஹ் உங்களுக்கு இறக்கியருளிய ரிஸ்கில் (வாழ்வாதாரத்தில்) சிலவற்றை விலக்கப்பட்டவை என்றும், வேறு சிலவற்றை ஆகுமாக்கப்பட்டவை என்றும் ஏற்படுத்திக் கொண்டீர்களே! (நபியே! இவர்களிடம்) கேளுங்கள் 'இதற்கு அல்லாஹ் உங்களுக்கு அனுமதி அளித்திருந்தானா? அல்லது நீங்கள் அல்லாஹ்வின் மீது புனைந்துரைக்கிறீர்களா?'" (10:59)

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.

Wednesday, December 21, 2005

சமாதி வழிபாடு

இறந்து போன அவ்லியாக்கள் தம் தேவைகளை நிறைவேற்றுகின்றனர், கஷ்டங்களையும், துன்பங்களையும் நீக்குகின்றனர் என்று நம்பி சிலர் அவர்களின் அடக்கஸ்தலம் சென்று அவர்களிடம் உதவி தேடுகின்றனர். பாதுகாப்புத் தேடுகின்றனர். (இவை அல்லாஹ்விடம் மட்டுமே செய்ய வேண்டிய வணக்கங்களாகும்) அல்லாஹ் கூறுகிறான்: "உமது இறைவன், 'அவனைத் தவிர வேறெவரையும் நீங்கள் வணங்காதீர்கள்' என விதித்துள்ளான்" (17:23)

அதுபோல இறந்து போன நபிமார்கள் மற்றும் இதர நல்லடியார்களிடம் துன்பங்களை நீக்கவும், தங்களுக்கு இறைவனிடம் பரிந்துரை செய்யவும் வேண்டிப் பிரார்த்திக்கின்றனர். (இதுவும் இணை வைத்தல் ஆகும்) அல்லாஹ் கூறுகிறான்: "துன்பத்திற்குள்ளானவர் இறைஞ்சும்போது அவருக்குப் பதில் அளிப்பவன் யார்? மேலும் அவருடைய துன்பத்தை நீக்குபவன் யார்? மேலும் உங்களைப் பூமியில் பிரதிநிதிகளாய் ஆக்குகிறவன் யார்? (இப்பணிகளைச் செய்ய) அல்லாஹ்வுடன் வேறு கடவுள் உண்டா? நீங்கள் மிகக் குறைவாகவே சிந்திக்கின்றீர்கள்" (27:62).

இன்னும் சிலர் நிற்கும் போதும், உட்காரும் போதும், கீழே விழும் போதும், அல்லது துன்பங்கள், துயரங்களில் மாட்டிக் கொள்ளும் போது தங்களுடைய ஷேக் அல்லது அவ்லியாக்களுடைய பெயரை திக்ராக உச்சரிக்கும் வழக்கமுடையவர்களாக உள்ளனர். யா முஹம்மத், யா அலீ, யா ஹுஸைன், யா முஹ்யுத்தீன், யா ஷாதுலி, யா ரிஃபாஈ என்றெல்லாம் கூறுகின்றனர். மேலும் ஐதுரூஸ், சைய்யதலி பாத்திமா போன்றோரையும் அழைக்கின்றனர். ஆனால் அல்லாஹ் கூறுகிறான்: "அல்லாஹ்வை விடுத்து நீங்கள் எவர்களை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடியார்கள் தாம்" (7:194)

சமாதிகளை வழிபடக்கூடியவர்களில் சிலர் அவற்றை வலம் வருகின்றனர். அவற்றின் மூலைகளையும், படிக்கட்டுகளையும் தொட்டு முத்தமிடுகின்றனர். மேனியில் தடவிக் கொள்கின்றனர். அங்குள்ள மணலை முகத்தில் பூசிக் கொள்கின்றனர். அவற்றுக்கு ஸஜ்தாவும் செய்கின்றனர். மேலும் அவற்றுக்கு முன் தாழ்ந்து, பணிந்து பயபக்தியுடன் நின்று நோய் குணமாகுதல், பிள்ளைப் பேறு கிடைத்தல், தங்களுடைய காரியங்கள் எளிதாகுதல் போன்ற தங்களுடைய நாட்டங்களையும் தேவைகளையும் கேட்கின்றனர்.

சிலபோது அவ்லியாவே! தலைவரே! நான் தொலை தூரத்திலிருந்து வந்திருக்கிறேன். என்னை ஏமாற்றி விடாதீர்கள் என்றும் கூறுகின்றனர். அல்லாஹ் கூறுகிறான்: "அல்லாஹ்வை விடுத்து கியாம நாள் வரை தனக்கு பதிலளிக்க இயலாதவர்களை அழைப்பவர்களை விட மிக வழிகெட்டவர்கள் யார் இருக்க முடியும்? தங்களை அழைப்பதையே அவர்கள் அறியாதவர்களாக இருக்கின்றார்கள்" (46:5) 'அல்லாஹ்வை விடுத்து அவனுக்கு இணையாக ஒருவரைப் பிரார்த்தித்த நிலையில் எவன் இறந்து விடுகிறானோ அவன் நரகில் நுழைவான் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி). நூல்: புகாரி.

சிலர் சமாதிகளுக்குச் சென்று மொட்டை அடித்துக் கொள்கின்றனர். இன்னும் சிலர் அவ்லியாக்களின் அடக்கஸ்தலங்களை தரிசிப்பது சம்பந்தமாக 'தர்ஹாக்களை ஹஜ் (?) செய்வது எப்படி?' என்பது போன்ற தலைப்புகளில் புத்தகங்களே வைத்திருக்கிறார்கள். (அடக்கஸ்தலங்களை தரிசிப்பது என்னவோ அவர்களுக்கு ஹஜ் செய்வதைப் போல) மற்றும் சிலர், அவ்லியாக்கள் இவ்வுலகை நிர்வகித்து கொண்டிருக்கின்றார்கள். நன்மையோ, தீமையோ செய்ய அவர்களுக்கு ஆற்றல் இருக்கிறது என்று நம்புகிறார்கள். ஆனால் அல்லாஹ் கூறுகிறான்: "அல்லாஹ் உமக்கு ஏதேனும் துன்பத்தைக் கொடுத்தால் அதனை அகற்றுபவர் அவனைத் தவிர வேறு யாரும் இல்லை. அவன் உமக்கு ஏதேனும் நன்மை அளிக்க நாடினால் அவனது அருளைத் தடுப்பவர் யாருமில்லை" (10:107)

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்!

Friday, December 16, 2005

இணை வைத்தல்

விலக்கப்பட்டவைகளில் பொதுவாகவே இதுவே மிகப் பெரியதாகும். அபூபக்ரா (ரலி) அறிவிப்பதாவது: 'பெரும் பாவங்களில் மிகப் பெரும் பாவத்தை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மூன்று முறை கேட்டார்கள்! அதற்கு நாங்கள், அல்லாஹ்வின் தூதரே! அறிவியுங்கள் என்றோம். அதற்கவர்கள், அல்லாஹ்வுக்கு இணை வைப்பது, பெற்றோரை நிந்திப்பது என்று கூறினார்கள். சாய்ந்திருந்த அவர்கள் நிமிர்ந்து உட்கார்ந்து, அறிந்து கொள்ளுங்கள்! பொய் சொல்வதும் பொய் சாட்சி கூறுவதும் தான், அறிந்து கொள்ளுங்கள்! பொய் சொல்வதும் பொய் சாட்சி கூறுவதும் தான் என்று கூறினார்கள். நிறுத்த மாட்டார்களா? என்று நான் கூறும் அளவுக்கு அவற்றைத் திரும்ப திரும்பக் கூறிக் கொண்டிருந்தார்கள். புகாரி (5976), முஸ்லிம்.

எல்லாப் பாவங்களையும் அல்லாஹ் மன்னித்து விடுவான் இணைவைத்தலைத் தவிர. எனவே இணைவைத்தலுக்கு பிரத்தியேகமாக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேட வேண்டும். அல்லாஹ் கூறுகிறான்: "திண்ணமாக அல்லாஹ் தனக்கு இணை வைக்கப்படுவதை மன்னிக்கவே மாட்டான். அதைத் தவிர ஏனையவற்றை தான் நாடியவர்களுக்கு மன்னித்து விடுவான்" (4:48)

இணை வைத்தலில் இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றி விடக்கூடிய மிகப் பெரும் இணை வைத்தலும் உண்டு. இத்தகைய இணை வைத்தலைச் செய்பவர் தவ்பா செய்யாமல் இறந்து விட்டால் நிரந்தர நரகத்தில் வீழ்வார். முஸ்லிம்கள் வாழும் பெரும்பாலான ஊர்களில் பரவலாகக் காணப்படுகின்ற இந்த இணை வைத்தலின் வகைகளை பின்வரும் அத்தியாயங்களில் இன்ஷா அல்லாஹ் பார்ப்போம்.

Saturday, December 10, 2005

முன்னுரை

எல்லாபுகழும் அல்லாஹ்வுக்கே! திண்ணமாக அல்லாஹ் சில விஷயங்களைக் கடமையாக்கியுள்ளான். அவற்றைப் பாழாக்கி விடக் கூடாது. சில வரம்புகளை நிர்ணயித்துள்ளான். அவற்றை மீறக் கூடாது. பல விஷயங்களை தடை செய்துள்ளான். அவற்றைக் குலைக்கக் கூடாது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'அல்லாஹ் தன் வேதத்தில் எவற்றை ஹலாலாக்கியுள்ளானோ அவை ஹலாலாகும். எவற்றை ஹராமாக்கியுள்ளானோ அவை ஹராமாகும். எவை பற்றி அவன் ஒன்றுமே கூறவில்லையே அவை சலுகையாகும். அல்லாஹ் அளித்திருக்கும் சலுகையை ஏற்றுக் கொள்ளுங்கள். திண்ணமாக அல்லாஹ் எதையும் மறப்பவனல்ல. பிறகு "உமது இறைவன் எதையும் மறப்பவனல்ல" (19:64) என்ற வசனத்தை ஓதிக் காட்டினார்கள்.
அறிவிப்பவர்: அபுத்தர்தா (ரலி). நூல்: ஹாகிம்.

விலக்கப்பட்டவைகள் தான் அல்லாஹ்வின் வரம்புகளாகும். அல்லாஹ் கூறுகிறான்: "இவை அல்லாஹ்வினால் ஏற்படுத்தப்பட்ட வரம்புகளாகும். எனவே அவற்றை நீங்கள் மீறாதீர்கள்" (2:187). தான் ஏற்படுத்திய வரம்புகளை மீறுபவர்களையும், தான் விலக்கிய காரியங்களைச் செய்பவர்களையும் திண்ணமாக அல்லாஹ் எச்சரித்துள்ளான். அல்லாஹ் கூறுகிறான்: "எவர்கள் அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் மாறு செய்து, அவனுடைய வரம்புகளை மீறுகிறார்களோ அவர்களை அல்லாஹ் நரகில் தள்ளுவான். அதில் அவர்கள் நிலையாக வீழ்ந்து கிடப்பார்கள். அவர்களுக்கு அங்கு இழிவுபடுத்தும் தண்டனையும் இருக்கிறது" (4:14).

விலக்கப்பட்டவைகளைத் தவிர்ப்பது கடமையாகும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்: 'நான் உங்களுக்கு எதைத் தடுத்துள்ளேனோ அதை விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள். நான் உங்களுக்கு எதை ஏவியுள்ளேனோ அதை முடிந்த அளவு செய்யுங்கள்'. அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம்.

மனோ இச்சையைப் பின்பற்றக் கூடிய, பலவீனமான உள்ளங்களுடைய, சில குறைமதியுடையோர் தொடர்ந்து ஹராமானவற்றைச் செவியுகிறபோது வெறுப்படைந்து, கடுப்பாகி இவ்வாறு கூறுவதைக் காண முடிகிறது: எல்லாம் ஹராம் தானா? நீங்கள் எதையும் ஹராமாக்காமல் விடுவதில்லை. இதனால் எங்களின் வாழ்வை சோர்வடையச் செய்து விட்டீர்கள், எங்கள் வாழ்க்கையை வெறுப்படையச் செய்து விட்டீர்கள், எங்களுடைய உள்ளங்களில் நெருக்கடியை ஏற்படுத்தி விட்டீர்கள். ஹராம் - ஹராமாக்குதல் என்பதைத் தவிர வேறு எந்த வேலையும் உங்களுக்கு இல்லை! இறைமார்க்கம் எளிமையானது. மார்க்க விஷயங்கள் விசாலமானவை. அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனும் மிக்க கருணை உள்ளவனும் ஆவான்.

இத்தகையவர்களுக்கு நாம் கூறும் பதில் இதுதான்: உண்மையில் அல்லாஹ், தான் நாடியவற்றைச் சட்டமாக்குகிறான். அவனுடைய சட்டத்தை மறுபரிசீலனை செய்பவர் யாரும் கிடையாது. அவன் யாவற்றையும் அறிந்தவன், நுண்ணறிவாளன். அவனே தான் நாடியவற்றை ஹலாலாகவும் தான் நாடியவற்றை ஹராமாகவும் ஆக்குகின்றான். அவனுடைய சட்டத்தை நாம் பொருந்திக் கொள்வதும் அதற்கு முழுமையாக கீழ்படிவதுமே அல்லாஹ்வுக்கு நாம் அடிமை பட்டிருப்பதன் அடிப்படைகளில் உள்ளவையாகும்.

இறைச்சட்டங்கள் யாவும் இறைவனுடைய ஞானம், விவேகம் மற்றும் நீதியின் மூலம் பெறப்பட்டவையாகும். அவை வீண் விளையாட்டானவையல்ல. இதோ அல்லாஹ் கூறுகிறான்: "உம்முடைய இறைவனின் வாக்கில் உண்மையும், நீதியும் முழுமையாக உள்ளன. அவனுடைய கட்டளைகளை மாற்றக் கூடியவர் எவருமிலர். அவன் அனைத்தையும் செவியேற்பவனாகவும் நன்கறிபவனாகவும் இருக்கிறான்" (6:115)

மேலும் அல்லாஹ் ஹலால் ஹராமுக்கு ஒரு அடிப்படைச் சட்டத்தை நமக்குத் தெளிவுபடுத்தியுள்ளான். "(இந்த இறைத்தூதர்) அவர்களுக்குத் தூய்மையானவற்றை ஆகுமாக்குகிறார். தூய்மையில்லாதவற்றை தடை செய்கிறார்" (7:157) என்று அவன் கூறியுள்ளான்.

எனவே தூய்மையானவை ஹலாலாகும். தூய்மையற்றவை ஹராம் ஆகும். ஹராம் ஆக்குகின்ற உரிமை அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியது. அந்த உரிமை தனக்கு இருப்பதாக எவன் வாதிடுகிறானோ அல்லது வேறொருவருக்கு இருப்பதாக ஒத்துக் கொள்கிறானோ அவன் இஸ்லாத்தை விட்டு வெளியேற்றக் கூடிய பெரிய அளவிலான நிராகரிப்பை மேற்கொண்ட நிராகரிப்பாளன் ஆவான். அல்லாஹ் கூறுகிறான்: "அல்லாஹ் அனுமதியளிக்காதவற்றை (தீனின்) இறைமார்க்கத்தின் நெறிமுறைகள் என அவர்களுக்கு வகுத்துக் கொடுக்கும் இணைக் கடவுளர்கள் அவர்களுக்கு உண்டா?" (42:21)

குர்ஆன், ஹதீஸ் பற்றி அறிந்த கல்வியாளர்களைத் தவிர வேறு எவரும் ஹலால், ஹராம் குறித்துப் பேசுவது ஆகுமானதல்ல. எவ்வித ஞானமுமின்றி ஹலால், ஹராம் என்று சட்டம் பேசுகின்றவர்கள் குறித்து கடுமையாக எச்சரிக்கை வந்துள்ளது. அல்லாஹ் கூறுகிறான்: "உங்கள் நாவுகள் இன்ன பொருள் ஹலால், இன்ன பொருள் ஹராம் என்று பொய்(சட்டங்)களைக் கூறுவது போன்று அல்லாஹ்வின் மீது பொய்களை ஏற்றிச் சொல்லாதீர்கள்" (16:116)

சந்தேகமின்றி - திட்டவட்டமாக விலக்கப்பட்டவைகள் திருக்குர்ஆனிலும் ஹதீஸிலும் கூறப்பட்டுள்ளன. சான்றாக, அல்லாஹ் கூறுகிறான்: "(நபியே!) கூறும்! வாருங்கள் இறைவன் உங்களுக்கு விலக்கியிருப்பவற்றை நான் கூறுகிறேன். யாரையும் எதனையும் அவனுக்கு இணையாக்காதீர்கள். பெற்றோருக்கு நன்மை செய்யுங்கள். வறுமைக்குப் பயந்து உங்கள் குழந்தைகளைக் கொன்று விடாதீர்கள்..." (6:151)

இவ்வாறே ஹதீஸிலும் விலக்கப்பட்டவைகள் ஏராளம் கூறப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'மது, செத்தவைகள், பன்றி, சிலைகள் ஆகியவற்றை விற்பதை திண்ணமாக அல்லாஹ் தடை செய்துள்ளான். (அபூ தாவூத்) அல்லாஹ் ஒன்றைத் தடை செய்து விட்டால் அதை விற்பதையும் தடை செய்து விடுவான் என்பதும் நபிமொழி. (தாரகுத்னி)

சில வசனங்களில் குறிப்பிட்ட சில வகையைச் சேர்ந்த ஹராம் பற்றி மட்டும் கூறப்படும். உதாரணமாக, உணவுகளில் எவை எவை ஹராம் என்று அல்லாஹ் குறிப்பிட்டதைப் போன்று. அல்லாஹ் கூறியுள்ளான்: "தானாக செத்தவைகள், இரத்தம், பன்றி இறைச்சி, அல்லாஹ் அல்லாதவரின் பெயர் கூறி அறுக்கப்பட்டவை, கழுத்து நெரித்துக் கொல்லப்பட்டவை, கீழே விழுந்து செத்தவை, கொம்பால் முட்டப்பட்டு செத்தவை, கொடிய விலங்குகளால் கடித்துக் குதறப்பட்டவை ஆகிய யாவும் உங்களுக்கு விலக்கப்பட்டுள்ளன. எவற்றை நீங்கள் உயிருடன் அறுத்து விட்டீர்களோ அவற்றைத் தவிர! இன்னும் பலிபீடங்கள் மீது அறுக்கப்பட்டவையும், குறி பார்ப்பதன் மூலம் விதிகளை நிர்ணயிப்பதும் (உங்களுக்கு விலக்கப்பட்டுள்ளன)... (5:3)

மணம் முடிக்க விலக்கப்பட்டவர்களைக் குறிப்பிடும் போது அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான்: "(பின் வரும் பெண்களை மணம்புரிவது) உங்களுக்கு விலக்கப்பட்டுள்ளது): உங்கள் தாய்மார்கள், உங்கள் புதல்விகள், உங்கள் சகோதரிகள், மற்றும் உங்கள் தந்தையின் உடன்பிறந்த சகோதரிகள், உங்கள் அன்னையின் உடன்பிறந்த சகோதரிகள், மேலும் சகோதரனின் புதல்விகள், சகோதரியின் புதல்விகள், மேலும் உங்களுக்குப் பாலூட்டிய செவிலித் தாய்மார்கள், உங்கள் பால்குடிச் சகோதரிகள், மேலும் உங்கள் மனைவியரின் தாய்மார்கள், நீங்கள் உடலுறவு கொண்ட மனைவியர் (தம் முன்னால் கணவர் மூலம்) பெற்றெடுத்து, உங்கள் மடியில் வளர்ந்துள்ள புதல்விகள், ஆனால் (திருமணமாகி) நீங்கள் அம்மனைவியருடன் உடலுறவு கொள்ளவில்லையாயின் (அவர்களை விடுத்து அவர்களின் புதல்வியரை மணந்து கொள்வதில்) உங்கள் மீது எத்தகைய குற்றமும் இல்லை.

மேலும் உங்கள் முதுகந்தண்டுகளிலிருந்து பிறந்த உங்கள் புதல்வர்களின் மனைவியரை மணம் புரிவதும், இரு சகோதரிகளை நீங்கள் ஒருசேர மனைவியராக்குவதும் (தடை செய்யப்பட்டுள்ளன). ஆனால் இதற்கு முன் நடந்து விட்டதைத் தவிர. திண்ணமாக அல்லாஹ் மன்னிப்பு வழங்குபவனாகவும் கருணை புரிபவனாகவும் இருக்கின்றான்" (4:23)

மேலும் பொருளீட்டுவதில் விலக்கப்பட்டவைகளையும் குறிப்பிட்டுள்ளான்: "அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாகவும் வட்டியை ஹராமாகவும் ஆக்கியுள்ளான்" (2:275)

தன் அடியார்கள் மீது கருணை உடையவனாகிய அல்லாஹ் தூய்மையானவற்றிலிருந்து ஏராளமானவற்றை, பல்வேறு வகையானவற்றை வரையறையில்லாமல் நமக்கு ஆகுமாக்கியுள்ளான். அதனால் தான் இவை இவையெல்லாம் ஆகுமானவை என்று அவன் விவரித்துச் சொல்லவில்லை. காரணம் அவை வரையறுக்க முடியாத அளவுக்கு ஏராளம் உள்ளன. ஆனால் எவை எவை எல்லாம் ஹராமாக்கப்பட்டவை என்று விவரமாகக் கூறியிருப்பதற்குக் காரணம் அவை இவ்வளவுதான் என அல்லாஹ்வால் வரையறுக்கப்பட்டவை என்பதாகும். மேலும் நாம் அவற்றை எளிதில் அறிந்து அவற்றை விட்டும் விலகிட வேண்டும் என்பதும் நோக்கமாகும்.

அல்லாஹ் கூறுகிறான்: "நீங்கள் நிர்பந்திக்கப்பட்ட சூழ்நிலைகளில் அன்றி பிற நேரங்களில் எவை எவை உங்களுக்கு விலக்கப்பட்டவை என்பதை அல்லாஹ் உங்களுக்கு விவரித்துக் கூறியுள்ளான்" (6:119) "மனிதர்களே! பூமியிலுள்ளவற்றில் தூய்மையான அனுமதிக்கப்பட்ட பொருட்களைப் புசியுங்கள்" (2:168)

அவனுடைய கருணையில் இதுவும் ஒன்றாகும். ஒவ்வொரு பொருளின் அசல் தன்மை ஹலாலாகும் என்று அவன் நிர்ணயித்துள்ளான். அது ஹராம் என்று அறிவிக்கக்கூடிய ஆதாரம் கிடைத்தாலே தவிர! இது அல்லாஹ்வின் அருட்கொடையையும், தனது அடியார்கள் மீதுள்ள அவனுடைய பரந்த மனப்பான்மையையுமே எடுத்துக் காட்டுகிறது. எனவே நாம் அவனுக்குக் கீழ்படிவதும் அவனைப் புகழ்ந்து அவனுக்கு நன்றி செலுத்துவதும் கடமையாகும்.

சிலருக்கு இன்னின்னவைகள் ஹராம் என்று கூறப்படுமானால் மார்க்கச் சட்டங்கள் அவர்களுக்குப் பாரமாகத் தோன்றுகின்றன. இது அவர்களுடைய பலவீனமான ஈமானையும், மார்க்க விஷயங்களில் விளக்கமின்மையையுமே காட்டுகிறது. இவர்கள் என்ன தங்களுக்கு இன்னின்னவை ஹலால் எனக் கூறப்பட வேண்டும், ஹலாலின் வகைகள் அனைத்தையும் எண்ணிக்கையோடு இவர்களுக்கு சொல்லப்பட வேண்டும் என விரும்புகிறார்களா - இறைமார்க்கம் எளிதானது தான் என மன திருப்திக் கொள்வதற்கு? அல்லது இன்னின்னவை தூய்மையானவை என பட்டியலிடப்பட வேண்டும் என்று விரும்புகிறார்களா - இறை மார்க்கத்தின்படி வாழ்வது ஒன்றும் சிரமமில்லை என்று நிம்மதியாக இருப்பதற்கு?

அறுக்கப்பட்ட ஆடு, மாடு, ஒட்டகம், முயல், மான், மழையாடு, கோழி, புறா ஆண்வாத்து, பெண்வாத்து, தீக்கோழி ஆகியவற்றின் மாமிசங்கள் ஹலாலாகும். இன்னும் செத்த வெட்டுக்கிளி, மற்றும் மீன், காய்கறிகள், கீரைகள், பழங்கள், இன்னும் ஏனைய பயனுள்ள தானியங்கள், பயிர்கள் ஆகியவையும் ஹலாலாகும் என்று சொல்ல வேண்டும் என்று விரும்புகிறார்களா?

தண்ணீர், பால், தேன், எண்ணை, வெனிகர், உப்பு, மசாலா சாமான்கள் ஆகியவையும், மரம், இரும்பு, மணல், கற்கள், பிளாஸ்டிக், கண்ணாடி, இரப்பர் ஆகியவற்றைப் பயன்படுத்துவதும் ஹலாலாகும். கால்நடைகள், கார், புகைவண்டி, கப்பல், விமானம் போன்றவற்றில் பயணம் செய்வதும் ஹலாலாகும்.

ஏ.சி, ஃபிரிஜ், வாஷிங் மிஷின், துணிகளை உலர்த்தும் இயந்திரம், திருகை, கிரைண்டர், மிக்ஸி, ஆகியவற்றை உபயோகிப்பதும், மருத்துவம், பொறியியல், கணிதம் விண்வெளி, மற்றும் வானிலை ஆராய்ச்சி, கட்டடவியல் ஆகியவற்றுக்கும், தண்ணீர், பெட்ரோல், உலோகங்கள் மற்றும் தாதுப் பொருட்களை வெளியேற்றுவதற்கும், அவற்றை சுத்தப்படுத்தி, பக்குவப்படுத்துவதற்கும் பயன்படக்கூடிய கருவிகள், அச்சு இயந்திரங்கள் மற்றும் கம்ப்யூட்டர் சாதனங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்துவதும் ஹலால் ஆகும்.

மேலும் பருத்தி, சணல், கம்பளி ஆடைகள், அனுமதிக்கப்பட்ட பிராணிகளின் தோலாலும் ரோமத்தாலும் தாயரிக்கப்பட்ட ஆடைகள், நைலான், பாலிஸ்டர் ஆடைகள் ஆகியவற்றை அணிவதும் ஹலால். மேலும் திருமணம், வியாபாரம், கொடுக்கல், வாங்கல், நற்காரியங்களுக்குப் பொறுப்பேற்றல், தன் பொறுப்பை பிறரிடம் ஒப்படைத்தல், வாடைகைக்கு விடுதல், தச்சு, கொல்லர்த் தொழில், சாதனங்களைப் பழுது பார்த்தல், ஆடு மேய்த்தல் ஆகியவற்றின் அசல் தன்மைஹலால் ஆகும் என்றெல்லாம் விபரமாகச் சொல்லப்பட வேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்களா?

இவ்வாறாக ஹலாலானவைகளை அடுக்கிக் கொண்டே சென்றால் அவற்றின் பட்டியல் முடிந்து விடுமா என்ன? இவர்களுக்கு என்ன நேர்ந்து விட்டது? இவர்கள் எந்த விஷயத்தையும் புரிந்து கொள்வதில்லையே!

இறைமார்க்கம் எளிமையானது என்று இவர்கள் எடுத்து வைக்கும் வாதத்தின் நிலை என்னவெனில் அது சத்தியமே! ஆனால் அதற்குத் தவறான பொருள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மார்க்கத்தின் எளிமை என்பதன் கருத்து மக்களின் மன இச்சைகள் மற்றும் அபிப்பிராயத்தைப் பொறுத்தல்ல. மாறாக ஷரீஅத் சட்டங்களைப் பொறுத்ததாகும். இறைமார்க்கம் எளிமையானது என்று சொல்லிக் கொண்டு (அது எளிமையானது தான் அதில் சந்தேகமில்லை) ஹராம் என விலக்கப்பட்டவைகளைச் செய்வதற்கும், சட்டபூர்வமாக அளிக்கப்பட்ட சலுகைகளைச் செய்வதற்கும் பெரிய வேறுபாடு உள்ளது. சட்டபூர்வமான சலுகைகளுக்கு உதாரணம்: தொழுகைகளைச் சேர்த்து தொழுதல் (ஜம்வு), சுருக்கித் தொழுதல் (கஸ்ர்), பயணத்தில் நோன்பை விடுதல், காலுறைகள் மீது மஸஹ் செய்தல் (இந்தச் சலுகை பயணத்தில் உள்ளவர்களுக்கு மூன்று நாட்களும், ஊரில் தங்கியிருப்பவர்களுக்கு ஒரு நாளும் ஆகும்), தண்ணீரைப் பயன்படுத்த முடியாது போனால் தயம்மும் செய்தல், நோயாளி ஜம்வு செய்து தொழுதல், மழைக் காலங்களில் ஜம்வு செய்தல், நிச்சயதார்த்தம் பேசிய ஆண் நிச்சயதார்த்தம் பேசப்பட்ட பெண்ணைப் பார்ப்பதை ஆகுமாக்குவது, சத்தியத்தை முறித்தற்குரிய பரிகாரமான அடிமையை விடுவித்தல், ஏழைகளுக்கு உணவு அளித்தல், உடை அளித்தல் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றைச் செய்தல், நிர்பந்தமான நேரத்தில் இறந்தவைகளை உண்ணுதல்.

ஒரு முஸ்லிம் இதையும் அறிந்து கொள்வது அவசியமாகும். அதாவது சில விஷயங்கள் விலக்கப்பட்டிருப்பதில் சில தத்துவங்கள் இருக்கின்றன. அவை வருமாறு:

1) விலக்கப்பட்டவைகளைக் கொண்டு அல்லாஹ் தன் அடியார்களை சோதிக்கின்றான். இது விஷயத்தில் அவர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்று பார்க்கின்றான்.

நரகவாசிகளை விட்டும் சுவனவாசிகள் வேறுபட்டிருப்பதன் காரணங்களில் ஒன்று என்னவெனில் நரகவாசிகள் (இவ்வுலகில்) மனோ இச்சைகளில் மூழ்கிக் கிடக்கின்றார்கள். அம்மனோ இச்சைகளால் தான் நரகம் சூழ்ந்துள்ளது. சொர்க்கவாசிகள் (இவ்வுலகில்) மனதிற்கு விருப்பமில்லாத காரியங்களை சகித்துக் கொள்கிறார்கள். மனதிற்கு விருப்பமில்லாத காரியங்களால் தான் சொர்க்கம் சூழ்ந்துள்ளது. இச்சோதனை இல்லையெனில் இறைவனுக்குக் கீழ்ப்படிபவன் யார்? இறைவனுக்கு மாறு செய்னவன் யார்? என்பது தெளிவாகாமல் போய்விடும்.

நம்பிக்கையாளர்கள் இறைச்சட்டங்களை எடுத்து நடப்பதால் ஏர்படக்கூடிய சிரமங்களை நற்கூலி கிடைக்கும் என்ற எண்ணத்துடனும், அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடைவதற்காக அவனுடைய கட்டளைகளை ஏற்று நடக்க வேண்டும் என்ற நோக்குடனும் பார்க்கின்றனர். இதனால் அச்சிரமங்கள் அவர்களுக்கு எளிதாகின்றன.

ஆனால் நயவஞ்சகர்களோ இறைச்சட்டங்களைப் பின்பற்றுவதால் ஏற்படுகின்ற கஷ்டங்களை துன்பம், தொல்லை மற்றும் இழப்புகளாகப் பார்க்கின்றனர். அதனால் அவற்றைப் பின்பற்றுவது அவர்களுக்குச் சிரமமாகத் தோன்றுகின்றது.

2) இறைவனுக்குக் கீழ்படிந்து வாழ்பவன் விலக்கப்பட்டவற்றைத் தவிர்ந்து கொள்வதன் மூலம் ஈமானின் இன்பத்தை சுவைப்பான். எவ்வாறெனில் அல்லாஹ்வுக்காக எதையேனும் ஒருவன் தவிர்த்துக் கொண்டால் அதற்குப் பகரமாக அதைவிடச் சிறந்ததை அல்லாஹ் அவனுக்குக் கொடுப்பான். மேலும் அவனது உள்ளத்தில் ஈமானின் இன்பத்தை அவன் உணர்வான்.

வாசக நேயர்களே! இச்சிறிய நூலில் ஷரீஅத் தடை செய்துள்ள பல்வேறு காரியங்களை திருக்குர்ஆன் மற்றும் நபிமொழியின் ஆதாரங்களுடன் நாங்கள் குறிப்பிட்டுள்ளதைக் காண்பீர்கள். விலக்கப்பட்ட இக்காரியங்கள் பெரும்பாலான முஸ்லிம்களிடையே பரவலாகக் காணப்படுபவையாகும். பெரும்பாலும் அவர்கள் செய்யக் கூடியவையாகும். இவற்றைக் குறிப்பிடுவதின் நோக்கம் மக்களுக்கு நலம் நாடுவதையும், தெள்ளத் தெளிவாக எடுத்துச் சொல்வதையும் தவிர வேறு இல்லை.

எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் எங்களுக்கும் எங்களுடைய சகோதர முஸ்லிம்களுக்கும் நேர்வழியையும் அதற்கான உதவியையும் அவன் விதித்த வரம்புகளை மீறாமல் வாழும் பாக்கியத்தையும் வேண்டுகிறோம். அவன் விலக்கப்பட்டவற்றை விட்டும் நம்மைத் தூரமாக்குவானாக! தீமைகளை விட்டும் நம்மைப் பாதுகாப்பானாக! அல்லாஹ் மிகச் சிறந்த பாதுகாவலனும் கருணையாளர்களிலேயே மிகவும் கருணையாளனும் ஆவான்.

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.

Friday, December 09, 2005

முதல் பக்கம்

மக்களின் பார்வையில் சாதாரணமாகி விட்ட
தீமைகள்!


எச்சரிக்கை!

தொகுப்பு
வெளிநாட்டவர் அழைப்பு மையம்
ஜுல்பி - சவூதி அரேபியா

வெளியீடு
ஜம்இய்யா இஹ்யாவுத்துராதுல் இஸ்லாமிய்யா
லஜ்னா காரல் ஹிந்திய்யா
ரவ்லா - குவைத்
Phone: 2574912-3-4 EX 108

வெளியீட்டாளர்களின் அனுமதியுடன் இந்த நூல் தளத்தில் பதியப்படுகிறது.