Thursday, May 24, 2007

பொய் சாட்சி சொல்லுதல்

அல்லாஹ் கூறுகிறான்: "எனவே விக்கிரகங்கள் எனும் அசுத்தத்திலிருந்து தவிர்ந்து கொள்ளுங்கள். பொய்யான பேச்சுகளிலிருந்தும் விலகியிருங்கள். அல்லாஹ்வுக்கு எதனையும் இணையாக்காது, அவனுக்கே ஒருமனப்பட்டவர்களாய்த் திகழுங்கள்" (22:30,31)

அபூபக்ரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ''பெரும் பாவங்களில் மிகப் பெரும் பாவத்தை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மூன்று முறை கேட்டார்கள்! அதற்கு நாங்கள், அல்லாஹ்வின் தூதரே! அறிவியுங்கள் என்றோம். அதற்கவர்கள், அல்லாஹ்வுக்கு இணை வைப்பது, பெற்றோரை நிந்திப்பது என்று கூறினார்கள். சாய்ந்திருந்த அவர்கள் நிமிர்ந்து உட்கார்ந்து, அறிந்து கொள்ளுங்கள்! பொய் சொல்வதும் பொய் சாட்சி கூறுவதும் தான், அறிந்து கொள்ளுங்கள்! பொய் சொல்வதும் பொய் சாட்சி கூறுவதும் தான் என்று கூறினார்கள். நிறுத்த மாட்டார்களா? என்று நான் கூறும் அளவுக்கு அவற்றைத் திரும்ப திரும்பக் கூறிக் கொண்டிருந்தார்கள். புகாரி (5976), முஸ்லிம்.

பொய் சாட்சி சொல்வதைப் பற்றிய எச்சரிக்கை இங்கு திரும்பத் திரும்பக் கூறப்பட்டிருப்பதற்குக் காரணம் மக்கள் அதை சாதாரணமாக எண்ணுவதும், அதன்பால் தூண்டக்கூடிய பகைமை, பொறாமை போன்ற காரணங்கள் அதிகமாக இருப்பதாலும், அதனால் பெரும் தீமைகள் விளைவதாலும் தான். பொய் சாட்சியால் எத்தனை உரிமைகள் பாழாகியுள்ளன! எத்தனை நிரபராதிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்! அதுமட்டுமா பொய் சாட்சியினால் எத்தனையோ பேர் தங்களுக்கு உரிமை இல்லாதவற்றை அடைந்துள்ளனர்! எத்தனையோ பேருக்கு போலியான குடும்ப உறவு ஏற்பட்டுள்ளது.

பொய் சாட்சி சொல்வதை சாதாரணமாகக் கருதுவதில் இதுவும் அடங்கும். சிலர் நீதிமன்றங்களில் தான் சந்திக்கும் (முன் பின் தெரியாத) ஒருவரிடம் எனக்கு நீ சாட்சி சொல், உனக்கு நான் சாட்சி சொல்கிறேன் என்று கூறுகின்றனர். பிறகு உண்மை நிலவரம் என்ன, சூழ்நிலை என்ன என்று தெரிந்திருக்க வேண்டிய விஷயங்களிலும் கூட எதுவும் தெரியாமலேயே ஒருவருக்கு ஒருவர் சாட்சி கூறிக் கொள்கின்றனர்.

உதாரணமாக இவந்தான் இந்த நிலத்துக்கு அல்லது இந்த வீட்டுக்குச் சொந்தக்காரன், அல்லது இவன் குற்றமற்றவன் என்று சாட்சி சொல்லிக் கொள்கின்றனர். ஆனால் அவனை (முதல் முறையாக) நீதிமன்ற வாசலிலோ அல்லது தெருவிலோ தான் சந்தித்திருப்பார்கள். இது பொய்யான, போலியான சாட்சியாகும் சாட்சி கூறுவதென்பது "நாங்கள் அறிந்ததை வைத்தே சாட்சி சொல்கிறோம்" (12:81) என்று திருக்குர்ஆனில் சொல்லப்பட்டிருப்பது போல அமைய வேண்டும்.

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.

தங்கம், வெள்ளிப் பாத்திரங்கள்

தற்காலத்தில் வீட்டிற்குத் தேவையான சாமான்களை விற்பனை செய்யும் கடைகளில் எந்தக் கடையிலும் தங்கம், வெள்ளிப் பாத்திரங்கள் அல்லது தங்கம், வெள்ளி முலாம் பூசப்பட்ட பாத்திரங்கள் இல்லாமலில்லை. அவ்வாறே செல்வந்தர்களுடைய வீடுகளும், பல ஹோட்டல்களும், இன்னும் சொல்வதானால் இந்த தங்கம், வெள்ளிப் பாத்திரங்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் சிலர், சிலருக்கு வழங்கும் உயர்ந்த அன்பளிப்புப் பொருள்களாகவும் ஆகி விட்டன.


இன்னும் சிலர் தங்களுடைய வீடுகளில் அவற்றை வைத்துக் கொள்வதில்லை. ஆயினும் மற்றவர்களுடைய வீடுகளிலும் அவர்களின் வலிமா-விருந்துகளிலும் கலந்து கொள்ளும்போது அவற்றைப் பயன்படுத்துகின்றனர். இவையனைத்தும் மார்க்கத்தில் ஹராமாக்கப்பட்ட காரியங்களாகும். இப்பாத்திரங்களைப் பயன்படுத்துவது பற்றி நபி (ஸல்) அவர்கள் மூலம் கடுமையான எச்சரிக்கையும் வந்துள்ளது. அவர்கள் கூறியதாவது:

'நிச்சயமாக தங்கம்,வெள்ளிப் பாத்திரங்களில் உண்பவன் அல்லது பானம் அருந்துபவன் தன் வயிற்றினுள் நரக நெருப்பையே நிரப்புகிறான்' அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி), நூல்: முஸ்லிம்.

இந்தச் சட்டம் உணவுக்காகப் பயன்படுத்தப்படும் எல்லா வகைப் பண்ட - பாத்திரங்களையும் எடுத்துக் கொள்ளும். உதாரணமாக தட்டு, கரண்டி வகைகள், கத்திகள், விருந்தினருக்காகப் பயன்படுத்தப்படும் பாத்திரங்கள், திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் இனிப்புப் பணடங்களை வைக்கப் பயன்படுத்தப்படுகின்ற டப்பாக்கள் போன்றவை.

இன்னும் சிலரோ நாங்கள் இப்பாத்திரங்களைப் பயன்படுத்துவதில்லை. ஆனால் கண்ணாடிப் பெட்டிகளில் அழகுக்காக மட்டுமே வைத்துக் கொள்கிறோம் என்கின்றனர். இதுவும் கூடாது. ஏனெனில் இது உபயோகப்படுத்துவதற்கான வழியைத் திறந்து விடும் என்பதற்காக.

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.

ஒரு துளியேனும் மது அருந்துதல்

அல்லாஹ் கூறுகிறான்: "இறைநம்பிக்கை கொண்டவர்களே! சூதாட்டம், பலிபீடங்கள், குறிபார்க்கும் அம்புகள் ஆகியவை அருவருக்கத்தக்க ஷைத்தானியச் செயல்களாகும். அவற்றைத் தவிர்ந்து கொள்ளுங்கள். அதன் மூலம் நீங்கள் வெற்றி பெறலாம்" (5:90)மதுவைத் தவிர்ந்துக் கொள்ளும்படி கட்டளையிட்டிருப்பது அது ஹராம் என்பதற்கு பலமான ஆதாரமாகும். மதுவை அடுத்து அல்லாஹ் பலிபீடங்களை கூறியுள்ளான். அவை காஃபிர்களுடைய கடவுள்களான விக்கிரகங்களாகும். (விக்கிரகங்கள் எந்த அளவுக்கு ஹராமோ அதுபோல மதுவும் ஹராமாகும் என்பதை இது காட்டுகிறது) இனி, அல்லாஹ் அது ஹராம் என்று கூறவில்லையே! அதைத் தவிர்ந்து கொள்ளுங்கள் என்று தானே கூறியுள்ளான் என்று கூறுபவர்களூக்கு எந்த ஆதாரமும் எஞ்சியிருக்கவில்லை.மது அருந்துபவனுக்கு நபிமொழியிலும் கடுமையான எச்சரிக்கை வந்துள்ளது. 'போதைப் பொருளை அருந்துபவனுக்கு 'தீனதுல் கபால்' எனும் பானத்தைப் புகட்டுவதாக அல்லாஹ்விடம் ஒரு வாக்குறுதி உள்ளது' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது, 'அல்லாஹ்வின் தூதரே! 'தீனதுல் கபால்' என்றால் என்ன?' எனத் தோழர்கள் கேட்டதும் அல்லாஹ்வின் தூதரவர்கள், 'நரகவாசிகளின் வியர்வை அல்லது நரகவாசிகளின் சீழ் என பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்.'மதுப்பழக்கத்திற்கு அடிமையான நிலையில் ஒருவன் மரணமடைந்து விட்டால் அவன் விக்கிரக ஆராதனை செய்தவன் போலவே அல்லாஹ்வை சந்திப்பான்' என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: தப்ரானி.நம்முடைய இக்காலத்தில் மதுவும், போதைப் பொருள்களும் பல்வேறு வகைகளில் காணக் கிடைக்கின்றன. அரபியிலும் வேறு மொழிகளிலும் அவற்றுக்குப் பல்வேறு பெயர்கள் உள்ளன. மதுவை-கள் என்றும், சாராயம் என்றும், விஸ்கி, பீர், பிராந்தி, ஒயின், ரம், ஆல்கஹால், வோட்கா (Vodka), அரக் (Arrack), ஷாம்பேன் (Chanpagne) என்றெல்லாம் கூறிக் கொள்கின்றனர்.'என்னுடைய சமுதாயத்தில் சிலர் நிச்சயம் மது அருந்துவார்கள். ஆனால் அதற்கு வேறு பெயரைக் கூறிக் கொள்வார்கள்' (நபிமொழி. அறிவிப்பவர்: அபூமாலிக் அல்-அஷ்அரி (ரலி), நூல்: இப்னுமாஜா) என்று யாரைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறினார்களோ அத்தகையவர்கள் இச்சமுதாயத்தில் தோன்றி விட்டனர். இவர்கள் மது என்ற பெயரை மூடி மறைத்து விட்டு அதற்குப் பகரமாக 'உற்சாகமூட்டும் பானங்கள்' எனக் கூறி மக்களை ஏமாற்றுகின்றனர். அல்லாஹ் கூறுகிறான்: "அவர்கள் அல்லாஹ்வையும் இறைநம்பிக்கை கொண்டவர்களையும் ஏமாற்றுகின்றனர். ஆனால் (உண்மையில்) அவர்கள் தம்மைத்தாமே ஏமாற்றிக் கொள்கின்றனரேயன்றி வேறில்லை. அவர்கள் அதை உணர்வதில்லை" (2:9).

இவ்விஷயத்துக்கு முடிவு கட்டக்கூடிய, விளையாட்டுத்தனமான இத்தகைய குழப்பத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் அழித்து ஒழிக்கக்கூடிய மாபெரும் சட்டத்தை இஸ்லாம் கொண்டு வந்துள்ளது. அது பின்வரும் நபிமொழியில் இவ்வாறு உள்ளது: 'போதை தரக்கூடிய அனைத்தும் மதுவாகும். போதை தரக்கூடிய அனைத்தும் ஹராமாகும்' அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: முஸ்லிம்.புத்தியை பேதலிக்கச் செய்து, போதையை ஏற்படுத்தக் கூடிய அனைத்தும் - அது குறைவாக இருந்தாலும் அதிகாமாக இருந்தாலும் - ஹராமாகும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'போதை தரக்கூடியது அதிகமாக இருந்தாலும், குறைவாக இருந்தாலும் ஹராமாகும்' அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: அபூதாவூத்.மதுவுக்கு எத்தனை பெயர்கள் இருந்தாலும் எத்தனை வகைகள் இருந்தாலும் எல்லாம் ஒன்றுதான். எல்லாம் மது தான். எல்லாவற்றுக்கும் (ஹராம் எனும்) ஒரே சட்டம் தான்.இறுதியாக மது அருந்துபவர்களுக்கு இதோ நபி (ஸல்) அவர்கள் செய்த ஓர் அறிவுரை.

'எவன் மது அருந்தி அதனால் அவனுக்குப் போதை ஏற்பட்டால் அவனுடைய நாற்பது நாட்களின் காலைத் தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அவ்வாறே அவன் மரணமடைந்து விட்டால் நரகம் புகுவான். அவன் தவ்பா செய்தால் அவனுடைய தவ்பாவை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான். தவ்பா செய்து மீண்டும் மது அருந்தி, போதை ஏற்பட்டால் (மீண்டும்) அவனுடைய நாற்பது நாட்களின் காலைத் தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அப்படியே அவன் மரணமடைந்தால் நரகம் புகுவான். அவன் தவ்பா செய்தால் அவனுடைய தவ்பாவை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான்.

தவ்பா செய்து மீண்டும் மது அருந்தி, போதை ஏற்பட்டால் (மீண்டும்) அவனது நாற்பது நாட்களின் காலைத் தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அப்படியே அவன் மரணமடைந்தால் நரகம் புகுவான். அவன் தவ்பா செய்தால் அவனுடைய தவ்பாவை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான். திரும்பவும் அவன் மது அருந்தி போதை ஏற்பட்டால் மறுமை நாளில் அவனுக்கு 'ரத்கதுல் கபால்' என்ற பானத்தைப் புகட்டுவது அல்லாஹ்வின் மீது கடமையாகுமென நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே! 'ரத்கதுல் கபால்' என்றால் என்ன? என்று வினவினர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் 'நரகவாசிகளின் சீழ்' என பதிலளித்தார்கள்'
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), நூல்: இப்னு மாஜா.மது போன்ற போதைப் பொருட்களைப் பயன்படுத்துபவர்களின் நிலையே இதுவானால் அதைவிடக் கடுமையான போதையுடைய பொருட்களைப் பயன்படுத்துபவர்களின் நிலை, அதற்கு அடிமையானவர்களின் நிலை எதுவோ?

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.