Saturday, August 12, 2006

தேவையின்றி யாசகம் கேட்பது


'ஒருவன் தனக்குப் போதுமான அளவு வசதி இருந்தும் யாசகம் கேட்டால் அவன் நரகத்தின் கங்குகளையே அதிகப்படுத்திக் கொள்கிறான்' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 'யாசகம் கேட்காத அளவுக்கு போதுமான வசதி என்றால் என்ன?' எனத் தோழர்கள் கேட்டனர். அதற்கு அவர்கள், 'ஒரு பகல், ஓர் இரவு உண்பதற்குப் போதுமான அளவு' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஹன்ழலா (ரலி), நூல்: அபூதாவூத்.

'தனக்கு போதுமான அளவு வசதி இருந்தும் யாசகம் கேட்பவன் மறுமையில், முகத்தில் சதை பிராண்டப்பட்டவனாக வருவான்' என்பதும் நபிமொழி. அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி), நூல்: அஹ்மத்.

யாசிப்போர்களில் சிலர் பள்ளிகளில் மக்களுக்கு முன்னால் நின்று கொண்டு தங்களின் பிரச்சனைகளைக் கூறி திக்ரு, தஸ்பீஹ் செய்வதற்கு இடைஞ்சலை ஏற்படுத்துகின்றனர். இன்னும் சிலர் போலி ஆவணங்களைத் தயாரித்து வைத்துக் கொண்டு, பொய்களையும், கட்டுகதைகளையும் அவிழ்த்து விடுகின்றனர். சிலபோது யாசகம் கேட்பதற்கு தம் குடும்பத்தவர்களையும் அழைத்து வந்து பல பள்ளிகளில் நிறுத்தி விடுகின்றனர். பின்னர் எல்லோரையும் ஓரிடத்தில் ஒன்று கூட்டி வசூலானதைச் சேகரித்து பிறகு வேறு வேறு பள்ளிகளுக்குச் செல்கிறார்கள். இவர்கள் எந்த அளவு வசதியாக இருக்கிறார்கள் என்பதை அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறிய முடியாது. அவர்கள் இறந்த பின்னரே அவர்களுடைய சொத்து எவ்வளவு என்று தெரிய வரும்.

இவர்களைத் தவிர உண்மையிலேயே தேவையுள்ளவர்களும் உள்ளனர். அவர்கள் எத்தகையவர்கள் எனில் அவர்களின் நிலையை அறியாதவர் அவர்களின் சுயமரியாதையைக் கண்டு அவர்கள் தன்னிறைவு பெற்றவர்கள் என எண்ணிக் கொள்வர். அவர்கள் மக்களிடத்தில் வற்புறுத்திக் கேட்கவும் மாட்டார்கள். அவர்களின் நிலை அறிந்து அவர்களுக்கு தர்மம் கொடுக்கப்படுவதும் இல்லை.

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.

Sunday, August 06, 2006

பிள்ளைகளிடையே பாரபட்சம்

அன்பளிப்பு வழங்குவதில் பிள்ளைகளுக்கிடையே பாரபட்சம்


சிலர் தங்களுடைய பிள்ளைகளில் சிலரை விடுத்து சிலருக்கு மட்டும் அன்பளிப்புகள், வெகுமதிகள் வழங்குகின்றனர். ஷரீஅத் ரீதியிலான தக்க காரணம் இல்லையெனில், சரியான கூற்றின் பிரகாரம் இவ்வாறு செய்வது ஹராமாகும். உதாரணமாக தம் பிள்ளைகளில் ஒருவனுக்கு மற்ற பிள்ளைகளூக்கு ஏற்படாத ஒரு தேவை ஏற்பட்டு விட்டதெனில் - உதாரணமாக அவன் நோயாளியாக இருக்கிறான், அல்லது அவனுக்கு கடன் இருக்கிறது, அல்லது திருக்குர்ஆனை மனனம் செய்ததற்காக அவனுக்கு வெகுமதி கொடுக்க வேண்டி இருக்கிறது, அல்லது அவன் வேலையில்லாமல் இருக்கிறான், அல்லது அவன் குடும்பம் பெரிதாக இருக்கிறது, அல்லது அவன் படித்துக் கொண்டு இருக்கிறான் - அவனுக்குப் படிப்புச் செலவு இருக்கிறது, இன்னும் இதுபோன்ற மார்க்கம் அனுமதிக்கின்ற ஏதாவது ஒரு காரணம் இருந்தால் அந்தப் பிள்ளைக்கு மட்டும் அன்பளிப்பு வழங்குவதில் தவறில்லை. ஆனால் அப்படிக் கொடுக்கும் போது அதுபோன்ற தேவை மற்ற பிள்ளைகளுக்கும் வந்தால் அவனுக்கும் கொடுப்பேன் என அந்த தந்தை எண்ணிக் கொள்ள வேண்டும்.

இவை அனைத்திற்கும் பொதுவான ஆதாரம்: அல்லாஹ் கூறுகிறான்: "நீதி செலுத்துங்கள். இதுவே இறையச்சத்திற்கு மிக நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்" (5:8). குறிப்பான ஆதாரம் நுஃமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸாகும். அவருடைய தந்தை அவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அழைத்து வந்து, 'நான் என்னுடைய இந்த மகனுக்கு ஒரு அடிமையை அன்பளிப்புச் செய்துள்ளேன் என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இது போன்று உமது எல்லா பிள்ளைகளுக்கும் அன்பளிப்புச் செய்துள்ளீரா? எனக் கேட்டார்கள். அதற்கவர் இல்லை என்று கூறவும், அப்படியாயின் அந்த அன்பளிப்பை திரும்பப் பெறுவீராக!' என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

மற்றொரு அறிவிப்பில், 'அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். பிள்ளைகளிடையே நீதி செலுத்துங்கள் எனக் கூறினார்கள். பிறகு அவர் திரும்பிச் சென்று தான் அன்பளிப்புச் செய்ததை திரும்பப் பெற்றுக் கொண்டார்' என வந்துள்ளது. ஸஹீஹ் முஸ்லிமுடைய ஒரு அறிவிப்பில், 'அப்படியானால் என்னை இதற்கு சாட்சியாக்காதீர். அநியாயத்துக்கு நான் சாட்சியாக இருக்க மாட்டேன்' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக உள்ளது. இமாம் அஹ்மத் (ரஹ்) அவர்களின் கருத்தாவது: அன்பளிப்பு ஒரு ஆணுக்கு இரு பெண்களின் பங்கிற்குச் சமமானது கொடுக்கப்பட வேண்டும் - சொத்துப் பங்கீட்டில் கொடுக்கப்படுவது போன்று.

சில குடும்பங்களின் நிலையை பார்க்கின்றபொழுது இப்படியும் சில தந்தையர்களைக் காண முடிகிறது. அவர்கள் தம் பிள்ளைகளுக்கு அன்பளிப்புகள் வழங்குவதில் பாரபட்சம் காட்டுகின்றனர். இது விஷயத்தில் அவர்கள் அல்லாஹ்வை அஞ்சுவதில்லை. இதனால் பிள்ளைகளின் உள்ளங்களில் பொறாமையை மூட்டி விடுகின்றனர். அவர்களிடையே வெறுப்பையும், பகைமையையும் விதைத்து விடுகின்றனர்.

சிலபோது, தனது பிள்ளை உடன் பிறந்த சகோதரனைப் போல் இருந்தால் அவனுக்குக் கொடுப்பதும், தன் மனைவியின் சகோதரனைப் போல் இருந்தால் கொடுக்காமல் இருப்பதும் உண்டு. (சவுதி போன்ற நாடுகளில் இப்படி நடக்கிறது) அல்லது தனது மனைவியரில் ஒருத்தியினுடைய பிள்ளைகளுக்குக் கொடுப்பதும் ஒருத்தியினுடைய பிள்ளைகளுக்கு கொடுக்காமல் இருப்பதும் உண்டு. சில சமயம் தமது மனைவியரில் ஒருத்தியின் பிள்ளைகளை குறிப்பிட்ட பள்ளியிலும் ஒருத்தியினுடைய பிள்ளைகளை வேறொரு பள்ளியிலும் சேர்த்து விடுகின்றனர். இவ்வாறு செய்வது அவர்களுக்கே பாதகமாக மாறி விடும். காரணம் புறக்கணிக்கப்பட்டவன் பெரும்பாலும் எதிர்காலத்தில் தன்னுடைய தந்தையிடம் நல்ல முறையில் நடந்து கொள்ள மாட்டான்.

தம் பிள்ளைகளுக்கு அன்பளிப்புகள் வழங்குவதில் பாரபட்சம் காட்டியவருக்கு நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்: 'அவர்கள் உம்மிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளவதில் சமமாக இருக்க வேண்டும் என்பதை நீர் விரும்பவில்லையா?" அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர் (ரலி) நூல்: அஹ்மத், முஸ்லிம்.

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.