Saturday, February 18, 2006

வெங்காயம், பூண்டு!

வெங்காயம், பூண்டு சாப்பிட்டதோடு பள்ளிக்கு வருதல்
அல்லாஹ் கூறுகிறான்: "ஆதத்தின் மக்களே! ஒவ்வொரு தொழுகையின் போதும் உங்களை அலங்கரித்துக் கொள்ளுங்கள்" (7:31) 'பூண்டையோ வெங்காயத்தையோ உண்டவர் நம்மை விட்டும் அல்லது நம் பள்ளியை விட்டும் விலகியிருக்கட்டும். தனது வீட்டில் உட்கார்ந்து கொள்ளட்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்'
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: புகாரி)
ஜாபிர் (ரலி) மேலும் அறிவிப்பதாவது: 'வெங்காயம், வெள்ளைப்பூண்டு மற்றும் வெறுக்கத்தக்க வாடையுடைய செடியைச் சாப்பிட்டவர் நம் பள்ளியின் பக்கம் நெருங்கவே வேண்டாம். மனிதர்கள் எதன் மூலம் தொல்லை அடைகிறார்களோ அதன் மூலம் மலக்குகளும் தொல்லை அடைகின்றனர் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்' (முஸ்லிம்)

ஒரு முறை ஜும்ஆ நாளில் உமர் (ரலி) அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். தமது உரையில் இவ்வாறு கூறினார்கள்: 'மக்களே! நீங்கள் இரண்டு செடிகளை உண்கிறீர்கள். அவ்விரண்டையும் கெட்ட வாடையுடையதாகவே நான் கருதுகிறேன். அவை வெங்காயம், வெள்ளைப் பூண்டு. நான் நபி (ஸல்) அவர்களைப் பார்த்திருக்கிறேன், பள்ளியில் ஒருவரிடம் அதன் வாடையை உணர்ந்தால், அவரை வெளியேற்றும்படி உத்தரவிடுவார்கள். பிறகு பகீஃ எனுமிடத்திற்கு அவர் வெளியேற்றப்படுவார். எனவே யாரேனும் அதைச் சாப்பிட விரும்பினால் நன்கு சமைத்துச் சாப்பிடட்டும்'
அறிவிப்பவர்: மிதான் பின் அபீதல்ஹா (ரலி) நூல்: முஸ்லிம்

சிலர் தம் வேலைகளை முடித்துக் கொண்டு அப்படியே பள்ளிக்கு வந்து விடுகின்றனர். அவர்களின் அக்குள்களிலிருந்தும், காலுறைகளிலிருந்து வெறுக்கத்தக்க வாடை வெளியேறுகிறது. இதுவும் கூடாததாகும். இதைவிடவும் மோசமானது என்னவென்றால் பீடி, சிகரெட் குடிப்பவர்கள் அதைக் குடித்து விட்டு பள்ளிக்கு வருகின்றனர். அதன் மூலம் மலக்குகளுக்கும் தொழுகின்றவர்களுக்கும் தொல்லை தருகின்றனர்.
எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.