Thursday, March 30, 2006

மனைவியருக்கிடையில் அநீதமாக நடத்தல்

அல்லாஹ் தனது வேதத்தில் நமக்கு அறிவுறுத்திய விஷயங்களில் மனைவியருக்கிடையே நீதமாக நடந்துக் கொள்ள வேண்டும் என்பதும் ஒன்றாகும். அல்லாஹ் கூறுகிறான்: "நீங்கள் எவ்வளவுதான் விரும்பினாலும் மனைவியரிடையே நேர்மையாக நடந்து கொள்வது சாத்தியமாகாது. ஆனால் (ஒரே மனைவியின் பக்கம்) முற்றிலும் சாய்ந்து மற்றவளை அந்தரத்தில் விடப்பட்டவள் போன்று ஆக்கி விடாதீர்கள். நீங்கள் உங்கள் நடத்தையைச் சீராக்கிக் கொண்டு அல்லாஹ்வுக்கு அஞ்சி வாழ்ந்தால் திண்ணமாக அல்லாஹ் மன்னிப்பு வழங்குபவனாகவும் கருணையுள்ளவனாகவும் இருக்கிறான்" (4:129)

அல்லாஹ் விரும்பும் நீதம் என்பது மனைவியருடன் இரவு தங்குவதில் நீதமாக நடந்து கொள்வதும், உணவு, உடை, உறைவிடம் ஆகியவற்றில் ஒவ்வொருவருக்கும் உரிய உரிமையை வழங்குவதும் ஆகும். நீதம் என்பது என்பு செலுத்துவதில் அல்ல. ஏனெனில் அதில் மனிதன் நீதமாக நடந்து கொள்ள முடியாது.

மக்களில் சிலர் தம்மிடம் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியர் இருக்கும்போது ஒரு மனைவியின் பக்கமே முற்றிலும் சாய்ந்து மற்றவளை கவனிக்காமல் விட்டு விடுகின்றனர். அந்த ஒருத்தியிடம் மட்டும் அதிக இரவுகள் தங்குகின்றனர். அல்லது மற்றவளை விட்டு விட்டு ஒருத்திக்கு மட்டும் செலவு செய்கின்றனர். இது ஹராம் - தடுக்கப்பட்டதாகும். அவர் மறுமையில் எந்த நிலையில் வருவார் என்பதை பின்வரும் நபிமொழி கூறுகிறது. அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'ஒருவருக்கு இரு மனைவியர் இருந்து ஒரு மனைவியின் பக்கம் அவர் (முழுமையாகச்) சாய்ந்து விட்டால் மறுமையில் அவரது ஒரு புஜம் சாய்ந்த நிலையில் வருவார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்' (அபூதாவூத், தாரமி)

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.