Thursday, May 18, 2006

வட்டி வாங்குதல்

திருக்குர்ஆனில் அல்லாஹ், வட்டி வாங்குபவர்களைத் தவிர வேறு யாருடனும் போர்ப் பிரகடனம் செய்வதாக அறிவிக்கவில்லை. அல்லாஹ் கூறுகிறான்: "நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருப்பின் (உங்களுக்கு வர வேண்டிய) வட்டிப் பாக்கியை விட்டு விடுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யாவிடின் அல்லாஹ்விடமிருந்தும் அவனுடைய தூதரிடமிருந்தும் (உங்களுக்கு எதிராக) போர் அறிவிக்கப்பட்டதென்பதை அறிந்து கொள்ளுங்கள்" (2:278,279)

அல்லாஹ்விடம் இக்குற்றம் எந்த அளவுக்கு மோசமானது என்பதை விளக்குவதற்கு இவ்விரு வசனங்களே போதும்.

தனி நபர்கள் மற்றும் அரசாங்கங்களின் நிலையை சிந்தித்துப் பார்த்தால் வட்டியின் அடிப்படையிலான கொடுக்கல் வாங்கல் எவ்வளவு மோசமான விளைவுகளை ஏற்படுத்தி இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியும். திவால், நஷ்டம், சந்தையில் தேக்கநிலை, கடனை நிறைவேற்ற முடியாமை, பொருளாதார நெருக்கடி, வேலையில்லாத் திண்டாட்டத்தின் சதவிகிதம் அதிகரிப்பு, பல நிறுவனங்கள், கம்பெனிகள் இழுத்து மூடப்படுதல், நெற்றி வியர்வையை நிலத்தில் சிந்தி நாள் முழுதும் உழைத்துப் பெற்ற ஊதியத்தை வட்டிக் கடையில் வட்டியை அடைப்பதற்காக கொட்டுவது, ஒரு சிலரிடத்தில் மட்டும் பெரும் செல்வம் குவிவதால் மனித சமுதாயதில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் (பெருமளவில்) உருவாகுதல். இவையெல்லாம் வட்டியினால் ஏற்பட்ட மோசமான விளைவுகளாகும். வட்டி கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டவர்களை அல்லாஹ் எத்தகைய போர் அறிவிப்பைக் கொண்டு எச்சரிக்கை செய்துள்ளானோ அத்தகைய போர் அறிவிப்பின் சில வடிவங்களாகக் கூட இவை இருக்கலாம்.

வட்டியில் ஈடுபடும் பிரதான நபர்கள், இடைத்தரகர்கள், உதவி செய்பவர்கள் ஆகிய அனைவருமே முஹம்மத் (ஸல்) அவர்களின் நாவால் சபிக்கப்பட்டவர்களாவர். ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது: 'வட்டி வாங்குபவனையும், கொடுப்பவனையும், அதற்கு கணக்கு எழுதுபவனையும், சாட்சியாக இருப்பவர்களையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சபித்துள்ளார்கள். அக்குற்றத்தில் அவர்கள் அனைவரும் சமம் என்று கூறியுள்ளார்கள்' (முஸ்லிம்)

இந்த ஹதீஸின் அடிப்படையில் வட்டிக் கணக்கு எழுதுவது, அதை சரி பார்ப்பது, ஒப்படைப்பது, கொடுத்து வைப்பது, பாதுகாப்பது ஆக எந்த விதத்திலும் வட்டிக்கு உதவுவதும் அதில் கூட்டு சேர்வதும் ஹராம் ஆகும். இப்பெரும் பாவம் எத்துணை மோசமானது என்பதை விளக்குவதில் நபி (ஸல்) அவர்கள் உண்மையில் ஆர்வம் காட்டியிருக்கிறார்கள்.

இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'வட்டி எழுபத்து மூன்று வகைகளைக் கொண்டது. அதில் மிகக் குறைந்த பாவம் ஒருவன் தன் தாயிடம் விபச்சாரம் செய்வதற்குச் சமமாகும். வட்டியில் மிகக் கொடியது ஒரு முஸ்லிமின் மானம் மரியாதைக்கு பங்கம் விளைவிப்பதாகும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்' (ஹாகிம்)

மேலும் கூறினார்கள்: 'ஒருவன் அறிந்து கொண்டே ஒரு திர்ஹம் வட்டியை உண்பது அறுபத்து மூன்று தடவை விபச்சாரம் செய்வதை விடக் கொடியது' அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஹன்ழலா (ரலி) நூல்: அஹ்மத்.

பொதுவாக வட்டி எல்லோருக்கிடையிலும் எல்லா நிலையிலும் ஹராமாகும். சிலர் எண்ணுவது போல் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் மத்தியில் தான் ஹராமாகும் என்பதல்ல. எத்தனையோ செல்வந்தர்கள், பெரும் பெரும் வியாபாரிகள் வட்டியினால் அனைத்தையும் இழந்து ஆண்டியானதுண்டு. யதார்த்தம் இதற்கு சான்று பகர்கின்றது.

வட்டியினால் விளையும் குறைந்த பட்ச தீங்கு யாதெனில், அது செல்வத்திலுள்ள பரக்கத்தை - அபிவிருத்தியை அழித்து விடும். என்னதான் எண்ணிக்கையில் அதிகமாக இருந்தாலும் சரியே. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'வட்டிப் பொருள் எவ்வளவு அதிகமாக இருந்தாலும் அதன் முடிவு நஷ்டமாகவே அமையும்' அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி) நூல்: ஹாகிம்.

அதுபோல வட்டி அது கூடுதலாக இருந்தால் தான் ஹராம் என்றல்ல, கூடுதலாக இருந்தாலும் சரி குறைவாக இருந்தாலும் சரி அனைத்துமே ஹராமாகும். வட்டி உண்டவன் மறுமையில் ஷைத்தானால் தீண்டப்பட்டு பைத்தியங் கொண்டவன் எழுவது போல் மண்ணறையிலிருந்து எழுவான். இவ்வளவு மோசமான பாவமாக இது இருந்தும் இதற்கு தவ்பா - பாவமீட்சி உண்டு என அல்லாஹ் அறிவித்துள்ளான். அதன் முறையை அவன் விளக்கியுமுள்ளான்.

வட்டி வாங்குபவர்களை நோக்கி அல்லாஹ் கூறுகிறான்: "நீங்கள் பாவமன்னிப்புக் கோரி (வட்டியைக் கை) விட்டால் உங்களுடைய மூலதனம் உங்களுக்கே உரியது. நீங்கள் அநீதி இழைக்கக் கூடாது. உங்கள் மீதும் அநீதி இழைக்கப்பட மாட்டாது" (2:279). இதுவே அசல் நீதியாகும்.

ஒரு முஃமினின் உள்ளம் இப்பெரும் பாவத்தை வெறுக்க வேண்டும். அது எத்துணை மோசமானது என்பதை உணர வேண்டும். எந்த அளவுக்கென்றால் நிர்பந்தமாக, பொருள் வீணாகி விடும் அல்லது திருடு போய்விடும் என்ற அச்சத்தில், வட்டியின் அடிப்படையில் இயங்கும் வங்கியில் பணம் வைத்திருப்பவர்கள் நிர்பந்தமாகத்தான் இவ்வாறு செய்கிறோம் என்று சொல்கிறார்கள். இது செத்த பிண்டத்தை அல்லது அதை விட மோசமானதை உண்பதைப் போன்றது என்றும் நாம் அவசியம் உணர வேண்டும். அத்துடன் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோர வேண்டும். மேலும் முடிந்தவரை இதற்கு மாற்றுப் பரிகாரம் காண முயல வேண்டும்.

வங்கிகளில் வட்டியை அவர்கள் கேட்டு வாங்கக் கூடாது. மாறாக அவர்களின் கணக்குகளில் வட்டி ஏற்றப்பட்டு விட்டால் ஏதேனும் ஆகுமான காரியத்தில் - தர்மமாக அல்லாமல் அதிலிருந்து விடுபட்டால் போதும் என்று - அதைச் செலவு செய்திட வேண்டும். ஏனெனில் அல்லாஹ் தூய்மையானவன், தூய்மையானதைத் தவிர வேறு எதையும் ஏற்றுக் கொள்ள மாட்டான். மட்டுமல்ல எந்த விதத்திலும் அந்த வட்டித் தொகையைப் பயன்படுத்துவது அவர்களுக்கு ஆகுமானதல்ல. உண்பதற்கோ, பருகுவதற்கோ, உடுத்துவதற்கோ, வாகனத்திற்கோ, வீட்டிற்கோ அல்லது பெற்றோர், மனைவி, மக்கள் ஆகியோருக்குச் செய்ய வேண்டிய கடமையான செலவுகளுக்கோ அல்லது ஜகாத் கொடுப்பதற்கோ, வரி செலுத்துவதற்கோ அல்லது தனக்கு நேரவிருந்த ஒரு அநீதியைத் தடுப்பதற்கோ எதற்கும் பயன்படுத்தக் கூடாது. அல்லாஹ்வின் தண்டனைக்கஞ்சி வட்டியிலிருந்து அவன் விலகிக் கொள்ள வேண்டும்.

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.