Saturday, February 24, 2007

கடன்

திருப்பிக் கொடுக்க வேண்டுமென்ற நோக்கமில்லாமல் கடன் கேட்பது

மனித உரிமைகளுக்கு அல்லாஹ்விடம் அதிக முக்கியத்துவம் உண்டு. ஒரு மனிதன் அல்லாஹ்வுக்குச் செய்ய வேண்டிய கடமைகளிலிருந்து தவறினால் தவ்பா செய்வதம் மூலம் பரிகாரம் பெறலாம். ஆனால் மனித உரிமைகளில் தவறிழைத்தால் அந்த (மறுமை) நாள் வருவதற்கு முன் அவற்றை நிறைவேற்றாத வரை தப்பிக்க முடியாது.

அந்நாளில் விவகாரம் திர்ஹமையோ, தீனாரையோ கொண்டு தீர்க்கப்பட மாட்டாது. மாறாக, நன்மை, தீமைகளைக் கொண்டே தீர்க்கப்படும். அல்லாஹ் கூறுகிறான்: "அடைக்கலப் பொருள்களை அவற்றிற்கு உரியவர்களிடம் நீங்கள் ஒப்படைத்து விட வேண்டும் என அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான்" (4:58)

சமுதாயத்தில் பரவலாக காணப்படும் தீமைகளில் ஒன்று தான் கடன் வாங்குவதைச் சாதாரணமாகக் கருதும் போக்கும். சிலர் மிக அவசியத் தேவைக்காகக் கடன் வாங்குவதில்லை. அவர்கள் கடன் வாங்குவதெல்லாம் இருக்கும் வளத்தை அதிகப்படுத்தும் ஆர்வத்தில்தான். மேலும் வாகனம், வீட்டின் அலங்காரப் பொருள் போன்ற அழியும் உலக சாதனங்களை - குப்பைகளைப் புதிது புதிதாகப் பயன்படுத்துவதில் பிறருடன் போட்டி போடும் எண்ணத்தில் தான் கடன் வாங்குகின்றனர். இத்தகையவர்கள் பெரும்பாலும் தவணை முறையில் கொடுக்கல், வாங்கல் செய்யும் வியாபாரங்களில் (Instalment) ஈடுபட்டு விடுகின்றனர். அவை பெரும்பாலும் ஹராமாகவோ அல்லது ஹராமா ஹலாலா என சந்தேகம் கொள்ளும் வியாபாரமாகவோ தான் இருக்கின்றன.

கடன் வாங்குவதை சர்வசாதாரணமாக நினைப்பது திருப்பிக் கொடுப்பதைக் கால தாமதம் செய்வதன் பால், அல்லது அடுத்தவர்களுடைய பணத்தை பாழாக்கி அதை அழிப்பதன் பால் இட்டுச் செல்லும். இச்செயலின் முடிவு பற்றி எச்சரித்தவர்களாக நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியுள்ளார்கள்: 'யார் திருப்பிக் கொடுத்திட வேண்டுமென்ற நோக்கோடு மக்களின் பொருள்களை (கடனாக) வாங்குகிறாரோ அதனை அல்லாஹ் திருப்பிக் கொடுத்து விடுகிறான். (அதாவது அவர் திருப்பிக் கொடுக்க அல்லாஹ் அவருக்கு உதவுகிறான்) அப்பொருளை நாசப்படுத்திடும் நோக்கில் வாங்கினால் அதனை அல்லாஹ் நாசமாக்கி விடுவான்' அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) (புகாரி).

ஆம்! கடன் விஷயத்தில் மக்கள் ரொம்பவும் அலட்சியமாக இருக்கின்றனர். அதை இலேசாகவும் கருதுகின்றனர். ஆனால் அதுவோ அல்லாஹ்விடத்தில் மிகப் பெரிய விஷயமாக இருக்கிறது. மட்டுமின்றி ஒரு உயிர்தியாகிக்கு - மிகப்பெரும் பாக்கியம், அளப்பரிய கூலி, மிக உயர்ந்த அந்தஸ்து இவையெல்லாம் இருந்தும் கூட கடனை நிறைவேற்றாத குற்றத்திலிருந்து அவர் தப்பிக்க முடியாது.

இதற்கு ஆதாரம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற்யுள்ளார்கள்; 'சுப்ஹானல்லாஹ்! கடன் விஷயத்தில் எவ்வளவு கடுமையான எச்சரிக்கையை அல்லாஹ் இறக்கி வைத்திருக்கிறான் தெரியுமா? என்னுடைய உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது சத்தியமாக! ஒருவர் அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டு, பின்னர் உயிர் கொடுக்கப்பட்டு, மீண்டும் கொல்லப்பட்டு மீண்டும் உயிர்ர்ப்பிக்கப்படுகிறார் எனில் அவர் மீது கடன் பாக்கி இருந்தால் அக்கடனை நிறைவேற்றாத வரை அவர் சொர்க்கம் செல்ல மாட்டார்'அறிவிப்பவர்: முஹம்மத் பின் ஜஹ்ஸ் (ரலி) நூல்: நஸயீ.

இத்தனைக்குப் பிறகும் கடன் விஷயத்தில் அலட்சியமாக இருப்பவர்கள் திருந்துவார்களா?

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.