Monday, August 04, 2008

கப்ரின் மீது அமர்தல், மிதித்தல், அடக்கஸ்தலங்களில் மல ஜலம் கழித்தல்.

'உங்களில் ஒருவர் நெருப்பின் மீது அமர்ந்து அது அவருடைய ஆடையை எரித்து தோலையும் பதம் பார்ப்பது கப்ரின் மீது அமர்வதை விட சிறந்தது' என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்.

கப்ருகளை மிதித்தல்: சிலர் இவ்வாறு செய்கின்றனர். இறந்தவர்களை அடக்கம் செய்யும் போது நீங்கள் அவர்களைக் காணலாம். அருகிலுள்ள கப்ருகளை மிதிப்பதை சற்றும் பொருட்படுத்த மாட்டார்கள். சிலபோது செருப்புக் கால்களுடன் மிதிப்பார்கள் - அங்கு அடக்கம் செய்யப்பட்டோருக்கு எந்த மரியாதையையும் கொடுக்காமல் இவ்வாறு செல்வார்கள். இது எவ்வளவு பெரிய பாவம் என்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியுள்ளார்கள்: 'நெருப்பின் மீதோ அல்லது (கூரிய) வாளின் மீதோ நான் நடப்பது அல்லது எனது செருப்பை எனது காலுடன் சேர்த்து நான் தைத்து விடுவது ஒரு முஸ்லிமின் கப்ரின் மீது நான் நடப்பதை விடவும் எனக்கு விருப்பமானதாகும்' அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி), நூல்: முஸ்லிம்.

அப்படியானால் அடக்கச்தலத்தைக் கைப்பற்றி அதில் வியாபார நோக்குடன் கடைகளை அல்லது வீடுகளைக் கட்டுபவரின் நிலை என்ன? சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

கப்ருகளில் மல ஜலம் கழிப்பது: சில துர்ப்பாக்கியசாலிகள் இதைச் செய்கின்றனர். அவர்களுக்கு மல ஜலத்தினுடைய தேவை ஏற்பட்டால் சுவர் ஏறிக் குதித்து அல்லது வேறு வழியாக அடக்கஸ்தலத்திற்குள் நுழைந்து தனது அசுத்தம் மற்றும் துர்நாற்றத்தின் மூலம் அங்கு அடக்கப்பட்டிருப்பவர்களுக்கு துன்பம் தருகின்றனர்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'அடக்கஸ்தலங்களில் மல ஜலம் கழிப்பதும், கடைவீதிக்கு மத்தியில் (வெட்கமின்றி) மல ஜலம் கழிப்பதும் என்னைப் பொருத்த வரையில் ஒரு பொருட்டே அல்ல (இரண்டும் சமம் தான்.) (இப்னு மாஜா) அதாவது கடைவீதியில் மக்களின் முன்னிலையில் மானம் திறந்த நிலையில் மல ஜலம் கழிப்பது எந்த அளவு மோசமானதோ, அதுபோல அடக்கஸ்தலத்தில் மல ஜலம் கழிப்பதும் மோசமான செயலாகும். இன்னும் சிலர் அடக்கஸ்தலங்களில் குறிப்பாக பாழடைந்த மற்றும் சுற்றுப்புறச் சுவர்கள் இடிந்து விட்ட அடக்கஸ்தலங்களில் அசுத்தங்களையும், குப்பைக் கூழங்களையும் வீசுகின்றனர். நபிமொழியில் வந்திருக்கின்ற எச்சரிக்கையில் இவர்களுக்கும் பங்குண்டு. அடக்கஸ்தலங்களைத் தரிசிக்கச் செல்லும் போது கவனிக்க வேண்டிய ஒழுக்கங்களில் இதுவும் ஒன்றாகும். அதாவது கப்ருகளுக்கு மத்தியில் செல்ல நாடும் போது பாதணிகளைக் கழற்றி விட வேண்டும்.

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.