Monday, August 04, 2008

கணுக்காலுக்குக் கீழ் ஆடை அணிதல்

மக்கள் சாதாரணமாகக் கருதக்கூடிய விஷயங்களில் இதுவும் ஒன்றாகும்.ஆனால் அது அல்லாஹ்விடம் மிகப் பெரிய விஷயமாகும். சிலர் தரையைத் தொடுமளவுக்கு ஆடை அணிகின்றனர். இன்னும் சிலர் தமது ஆடையைத் தரையோடும் இழுத்துச் செல்கின்றனர்.

அபூதர் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது: 'மறுமையில் அல்லாஹ் மூவரிடத்தில் பேசவும் மாட்டான், அவர்களைப் பார்க்கவும் மாட்டான், அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான், அவர்களுக்கு நோவினை மிக்க வேதனை உண்டு. (அவர்கள் யாரெனில்) கணுக்காலுக்குக் கீழ் ஆடை அணிபவன், செய்த தர்மத்தைச் சொல்லிக் காட்டுபவன், பொய் சத்தியம் மூலம் பொருளை விற்பவன் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்' (புகாரி)

நான் கணுக்காலுக்குக் கீழ் ஆடை அணிந்திருப்பது பெருமைக்காக அல்ல என்று கூறுபவர் தம்மைத் தாமே பரிசுத்தப்படுத்திக் கொள்கின்றார். இது ஏற்கத்தக்கதல்ல. ஏனெனில் கணுக்காலுக்குக் கீழ் ஆடை அணிபவர் விஷயத்தில் வந்திருக்கின்ற எச்சரிக்கை பொதுவானது தான். அவர் பெருமைக்காக அணிந்தாலும் சரி அல்லது வேறு நோக்கத்திற்காக அணிந்தாலும் சரி. பின்வரும் நபிமொழி இதைத்தான் அறிவிக்கிறது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'கணுக்காலுக்குக் கீழ் ஆடை அணிவது நரகத்திற்குக் கொண்டு போகும்' அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி.

ஆனால் அவர் பெருமைக்காக அணிந்தால் அவருடைய தண்டனை மிகக் கடுமையாக இருக்கும். அது குறித்து பின்வரும் நபிமொழியில் வந்துள்ளதாவது: 'பெருமைக்காக யார் தன்னுடைய ஆடையை தரையோடு இழுத்துச் செல்கின்றாரோ மறுமையில் அல்லாஹ் அவரைப் பார்க்க மாட்டான்' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல் புகாரி).

இது ஏனெனில் இதில் (கணுக்காலுக்குக் கீழ் ஆடை அணிதல், பெருமை என) விலக்கப்பட்ட இரு விஷயங்கள் ஒரு சேர அமைந்துள்ளன.

கணுக்காலுக்குக் கீழ் ஆடை அணிவது ஹராமென்பது எல்லா வகையான ஆடைகளுக்கும் பொருந்தும். இப்னு உமர் (ரலி) அறிவிக்கும் பின்வரும் நபிமொழி இதற்குச் சான்றாகும்.

'கணுக்காலுக்குக் கீழ் ஆடை அணிவதென்பது வேட்டி, சட்டை, தலைப்பாகை ஆகிய மூன்றிலும் அடங்கும். இவற்றில் ஒன்றை யாரேனும் பெருமைக்காக தரையோடு இழுத்திச் செல்கின்றாரோ அவரை மறுமையில் அல்லாஹ் பார்க்க மாட்டான்' (நபிமொழி) நூல்: அபூதாவூத்.

ஆனால் ஒரு பெண் தனது பாதத்தை மறைப்பதற்காக தம் ஆடையை கணுக்காலுக்குக் கீழ் ஒரு ஜாண் அல்லது ஒரு முழம் தொங்க விட்டுக் கொள்வது அனுமதிக்கப்பட்டுள்ளது. இது, காற்று போன்ற காரணத்தால் பாதம் வெளிப்பட்டு விடாமல் பேணிக்கையாக இருப்பதற்காகவாகும். ஆயினும் அளவு கடந்து விடக் கூடாது. உதாரணமாக திருமணத்தின் போது சில மணப்பெண்களின் ஆடைகள் பல ஜாண்கள், பல மீட்டர்கள் நீளமாக இருக்கின்றன. எந்த அளவுக்கெனில் சிலபோது மணப்பெண்ணுக்குப் பின்னால் ஒருவர் அந்த ஆடையை சுமந்து வர வேண்டியதிருக்கிறது.

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.