Monday, August 04, 2008

நடை, உடை, பாவனையில் ஆண், பெண்ணுக்கும் பெண், ஆணுக்கும் ஒப்பாகுதல்.

அல்லாஹ் மனிதர்களுக்கு ஏற்படுத்தியிருக்கின்ற இயற்கை சுபாவம் என்னவெனில் ஒரு ஆண், எந்த ஆண்மையின் மீது அல்லாஹ் அவனைப் படைத்தானோ அந்த ஆண்மையையும் ஒரு பெண், எந்தப் பெண்மையின் மீது அல்லாஹ் அவளைப் படைத்தானோ அந்தப் பெண்மையையும் பேணி பாதுகாப்பதாகும். இது, மனிதர்களின் வாழ்க்கை எந்தக் காரண காரியங்களைக் கொண்டல்லாமல் சீர் பெற முடியாதோ அந்தக் காரணக் காரியங்களில் ஒன்றாகும்.

எனவே ஆண்கள் பெண்களுக்கும் பெண்கள் ஆண்களுக்கும் ஒப்பாக பாவித்து நடப்பது இயற்கைக்கு முரணானதாகும். மேலும் இது குழப்பத்தின் வாயில்களைத் திறந்து விடுவதாகவும், சமுதாயத்தில் பிளவு ஏற்படுவதற்குக் காரணமாகவும் அமையும். இச்செயல் மார்க்கத்திலும் விலக்கப்பட்டதாகும். ஏனெனில் ஒரு செயலைச் செய்வது சாபத்திற்குரியது என மார்க்க ஆதாரம் கூறினால் அது ஹராம் என்பதையே குறிக்கும். மட்டுமல்ல அது பெரும் பாவமுமாகும். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கக்கூடிய ஒரு நபிமொழியில் இவ்வாறு வந்துள்ளது: 'ஆண்களில் பெண்களைப் போல் ஒப்பனை செய்து கொள்பவர்களையும் பெண்களில் ஆண்களைப் போல் ஒப்பனை செய்து கொள்பவர்களையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சபித்துள்ளார்கள்' (புகாரி)

'பெண்களைப் போலவே நடக்கும் ஆண்களையும் ஆண்கள் போல நடக்கும் பெண்களையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சபித்துள்ளார்கள்' எனவும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி, திர்மிதி)

ஒப்புமை என்பது அங்க அசைவுகளிலும் இருக்கலாம். நடையிலும் இருக்கலாம். உதாரணமாக உடலில், நடையில், பேச்சில் பெண்களைப் போல் நடந்து கொள்ளுதல். மேலும் ஒப்புமை உடையிலும் இருக்கலாம். அதுபோல பெண்கள் அணியக்கூடிய நகைகள், வளையல்கள், காதணிகள், காலணிகள் போன்றவற்றை ஆண் அணிவதும் கூடாது - ஹிப்பி வகையறாக்களிடம் இந்நிலை பரவி உள்ளதைப் போல. அதுபோன்றே ஆண்களுக்குரிய ஆடையை பெண்கள் அணிவதும் ஆகுமானதன்று. மாறாக பெண்கள் உடை, நடை, பாவனைகளில் ஆண்களுக்கு மாறாக நடந்து கொள்வது கடமையாகும். இதர்கு பின்வரும் நபிமொழி சான்றாகும்.

பெண்ணுடைய ஆடையைஅணிகின்ற ஆணையும் ஆணுடைய ஆடையை அணிகின்ற பெண்ணையும் அல்லாஹ் சபிப்பானாக! (நபிமொழி) அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: அபூதாவூத்.

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.