Monday, August 04, 2008

அனுமதியின்றி வீட்டுக்குள் எட்டிப் பார்த்தல்

"இறை நம்பிக்கை கொண்டவர்களே! உங்களுடைய வீடுகளைத் தவிர மற்றவர்களின் வீடுகளில் அந்த வீட்டாரின் இசைவைப் பெறாமலும் அவர்களுக்கு ஸலாம் கூறாதவரையும் நுழையாதீர்கள்" (24:27)

அனுமதி கோருவதற்குக் காரணம் அந்த வீட்டிலுள்ளவர்களின் தனிப்பட்ட செயல்களை காரியங்களை பார்த்து விடக் கூடாது என்பதற்காகத்தான் என்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தெளிவு படுத்தியுள்ளார்கள். 'அனுமதி கோருதல் ஏற்படுத்தப்பட்டது பார்வையின் காரணமாகத்தான்' என்பது நபிமொழி. (புகாரி)

இன்று வீடுகள் கட்டிடங்கள் நெருக்கமாகவும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தும் இருக்கின்றன. ஜன்னல்களும் வாசல்களும் நேருக்கு நேர் உள்ளன. இதனால் அக்கம் அக்கத்தில் வசிப்போரின் தனிப்பட்ட நடவடிக்கைகள் பரஸ்பரம் பார்வையில் படும் சாத்தியக்கூறு அதிகம் உள்ளன. பெரும்பாலோர் தங்கள் பார்வையைத் தாழ்த்திக் கொள்வதில்லை. சில பொழுது உயரமான கட்டிடத்தில் குடியிருப்பவர்கள் சிலர் தம் ஜன்னல் வழியாகவும் மாடி வழியாகவும் தமக்குக் கீழே இருக்கின்ற அண்டை வீடுகளை எட்டிப் பார்க்கின்றனர். இது நம்பிக்கைத் துரோகமாகும். மட்டுமல்ல இது அண்டை வீட்டாரின் கண்ணியத்தைக் குலைக்கக் கூடியதாகவும் தகாத காரியத்தின் பால் இட்டுச் செல்லக் கூடியதாகவும் இருக்கின்றது. இதனால் எத்தனையோ துன்பங்களும் குழப்பங்களுமே ஏற்பட்டுள்ளன. இச்செயல் எந்த அளவுக்கு ஆபத்தானது என்பதற்குச் சான்றாக பிறருடைய வீட்டில் எட்டிப் பார்ப்பவருடைய கண்ணுக்கான நஷ்டயீட்டை ஷரீஅத் தளர்த்தியிருப்பதே போதுமானதாகும்.

இதோ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்: 'ஒருவர் பிறருடைய வீட்டில் அனுமதியின்றி எட்டிப் பார்த்தால் அவருடைய கண்ணைப் பறிப்பது அவ்வீட்டாருக்கு ஆகுமானதாகும்' அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்.

அஹ்மதுடைய ஒரு அறிவிப்பில் 'அவருடைய கண்ணைப் பறித்து விடுங்கள். அதற்கு நஷ்டயீடோ, பழிக்குப் பழியோ கிடையாது' என்றும் உள்ளது.

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.