Friday, February 03, 2006

தீயவர்களிடம் அமர்தல்

நயவஞ்சகர்கள், தீயவர்களிடம் அமர்தல்
அதாவது நயவஞ்சகர்கள் மற்றும் தீயவர்களிடம் என்பது மகிழ்வுடன் அல்லது அவர்களுக்கு மகிழ்வூட்டுவதற்காகவாகும்.

உறுதியான ஈமான் இல்லாத பெரும்பாலோர் கெட்டவர்களுடன், தீயவர்களுடன் அமர்ந்து கலந்துறவாட விரும்புகிறார்கள். ஏன் அல்லாஹ்வின் மார்க்கத்தையும் அதைப் பின்பற்றி நடக்கக் கூடியவர்களையும் குறை கூறக்கூடியவர்களுடனும், கேலி செய்யக் கூடியவர்களுடனும் கலந்துறவாடுகின்றனர். இத்தகைய செயல் சந்தேகமில்லாமல் விலக்கப்பட்டதும் ஈமானை மாசுபடுத்தக்கூடியது ஆகும்.

அல்லாஹ் கூறுகிறான்: "(நபியே!) நம் வசனங்கள் பற்றிக் குறை கூறிக் கொண்டிருப்போரை நீர் கண்டால் அவர்கள் அதனை விட்டு வேறு பேச்சில் ஈடுபடும் வரை நீர் அவர்களை விட்டும் ஒதுங்கி விடும். மேலும் எப்பொழுதேனும் ஷைத்தான் உம்மை மறதியில் ஆழ்த்தி விட்டால் அத்தவறை உணர்ந்து கொண்ட பிறகு அக்கிரமம் செய்யும் இக்கூட்டத்தாரோடு நீர் உட்காராதீர்" (6:68)

இந்நிலையில் அவர்களுடன் அமர்வது கூடாது. அவர்கள் நெருங்கிய உறவினர்களாக இருந்தாலும் சரியே. அல்லது அவர்களுடைய பழக்கவழக்கங்கள் மென்மையாகவும் பேச்சுகள் இனிமையாகவும் இருந்தாலும் சரியே. ஆனால் அவர்களை சரியான மார்க்கத்தின் பால் அழைக்கவும் அவர்களின் தவறான கொள்கைக்கு மறுப்புக் கொடுக்கவும் எவர்கள் விரும்புகிறார்களோ அவர்களைத் தவிர. அத்தகையவர்கள் அவர்களுடன் அமர்வது கூடும். ஆயினும் அப்படி அவர்களுடன் அமர்ந்து அவர்களுடைய போக்கை விரும்புவதோ அல்லது வாய் மூடி மௌனமாக இருப்பதோ கூடாததாகும். அல்லாஹ் கூறுகிறான்: "நீங்கள் அவர்கள் மீது திருப்திக் கொண்டாலும் அல்லாஹ் பாவிகளான இத்தகைய மக்கள் மீது (ஒரு போதும்) திருப்தி கொள்ளமாட்டான்" (9:96)
எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.