Monday, March 13, 2006

ழிஹார்

அறியாமைக் காலத்தில் பயன்படுத்தப்பட்ட - இந்த சமுதாயத்திலும் பரவி இருக்கின்ற பல வார்த்தைகளில் ழிஹாரும் ஒன்று. அதாவது ஒரு கணவன் தன் மனைவியிடம் 'நீ எனக்கு என் தாயைப் போன்றவள்', 'நீ எனக்கு என் சகோதரியைப் போன்றவள்' என்பன போன்ற மோசமான வார்த்தைகளைக் கூறுவர். இதற்கு ழிஹார் எனப்படும். பெண்ணுக்கு இதிலே அநீதியிருப்பதால் இறைமார்க்கம் இதை அறுவருப்பாகக் கருதுகிறது. இது பற்றி அல்லாஹ் இவ்வாறு கூறியுள்ளான்:

"உங்களில் எவர்கள் தம் மனைவியரை ழிஹார் செய்கின்றார்களோ அவர்களின் மனைவியர் அவர்களுக்கு அன்னையராகி விட மாட்டார்கள். அவர்களைப் பெற்றெடுத்தவரே அவர்களின் அன்னையராவர். அவர்கள் வெறுக்கத்தக்க பொய்யான சொல்லையே கூறுகின்றனர். திண்ணமாக அல்லாஹ் பெரிதும் பிழை பொறுப்பவனும் மன்னிப்பவனும் ஆவான்" (58:2)

இது விஷயத்தில் இறைமார்க்கம் பரிகாரத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த பரிகாரம், தவறுதலாக ஒருவரைக் கொலை செய்து விட்டால் அதற்கு செய்ய வேண்டிய பரிகாரத்தைப் போல, இன்னும் ரமழான் பகலில் (நோன்பு வைத்துக் கொண்டு) ஒருவர் தம் மனைவியிடம் தாம்பத்தியத்தில் ஈடுபட்டு விட்டால் அதற்குச் செய்ய வேண்டிய பரிகாரத்திற்கு ஒத்த கடுமையான பரிகாரமாகும். ழிஹார் செய்தவர் இந்தப் பரிகாரத்தைச் செய்யாதவரை மனைவியுடன் இல்லறம் நடத்தக் கூடாது.

அல்லாஹ் கூறுகிறான்: "எவர்கள் தம் மனைவியரை ழிஹார் செய்து பின்னர் தாங்கள் கூறிய சொல்லை விட்டும் திரும்பி விடுகின்றார்களோ அவர்கள் - இருவரும் ஒருவரையொருவர் தொடும் முன்பாக அடிமையை விடுதலை செய்ய வேண்டும். இவ்வாறே உங்களுக்கு அறிவுரை கூறப்படுகிறது. மேலும் நீங்கள் எவற்றைச் செய்கின்றீர்களோ அவற்றை அல்லாஹ் மிகவும் அறிந்தவனாக இருக்கின்றான். இனி எவருக்கேனும் அடிமை கிடைக்கவில்லை எனில், அவ்விருவரும் தொடும் முன் இரண்டு மாதம் தொடர்ந்து நோன்பு நோற்க வேண்டும். ஒருவர் இதற்கு சக்தி பெறாவிட்டால், அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். இந்தக் கட்டளை ஏன் அளிக்கப்படுகிறதென்றால், அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர் மீதும் நீங்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான். இவை அல்லாஹ்வினால் நிர்ணயிக்கப்பட்ட வரம்புகளாகும். மேலும் நிராகரிப்பவர்களுக்கு துன்புறுத்தும் தண்டனை இருக்கின்றது" (58:34)

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.