Tuesday, March 07, 2006

காரணமின்றி பெண் விவாகரத்துக் கோரல்

பெரும்பாலான பெண்கள் ஒரு சின்னப் பிரச்சனை ஏற்பட்டாலும் தங்கள் கணவன்மார்களிடம் விவாகரத்தைக் கோர விரைகின்றனர். அல்லது தான் விரும்பும் பொருளை தன் கணவன் கொடுக்காவிட்டால் மனைவி அவனிடம் விவாகரத்தைக் கோருகின்றாள். சில சமயம் அவள் சில குழப்பமூட்டுகின்ற உறவினரால் அல்லது அண்டை வீட்டாரால் இவ்வாறு நடந்து கொள்வதற்குத் தூண்டப்படுகிறாள். சில சமயம் 'நீ ஓர் ஆண் பிள்ளையாக இருந்தால் என்னை விவாகரத்துச் செய்து பார்' என்பது போன்ற உணர்வுகளைத் தூண்டக்கூடிய வார்த்தைகளால் தன் கணவனிடம் சவால் விடுகிறாள்.

விவாகரத்தால் பெரும் பிரச்சனை ஏற்படும் என்பது அறிந்ததே! குடும்பம் சிதைந்து குழந்தைகள் சின்னா பின்னமாகி விடுவர். பலனளிக்காத நேரத்தில் கைசேதப்பட வேண்டியது வரும். இதனாலும் இன்னபிற காரணங்களாலும் தான் விவாகத்துச் செய்வதை மார்க்கம் தடை செய்திருப்பதில் உள்ள தத்துவம் தெரிய வருகிறது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'எந்தப் பெண்ணாயினும் ஒரு காரணமும் இல்லாமல் தன் கணவரிடம் விவாகரத்துக் கோரினால் சுவனத்தின் வாடை அவளுக்கு ஹராமாகி விடும்' அறிவிப்பவர்: ஸவ்பான் (ரலி) நூல்: அஹ்மத்

'விவாகரத்துக் கோரக்கூடிய பெண்கள் நயவஞ்சகர்கள்' என்பதும் நபிமொழி. உக்பா பின் ஆமிர் (ரலி) அறிவிக்கும் இந்நபிமொழி தப்ரானியில் உள்ளது.

மார்க்கம் அனுமதிக்கின்ற காரணம் இருந்தால், உதாரணமாக கணவன் தொழுகையை விட்டு விடுகிறான் அல்லது போதைப் பொருளைப் பயன்படுத்துகிறான் அல்லது விலக்கப்பட்ட காரியத்தைச் செய்ய தனது மனைவியை நிர்பந்திக்கிறான் அல்லது அவளை துன்புறுத்தியோ அல்லது இறைமார்க்கம் அவளுக்கு வழங்கி இருக்கின்ற உரிமைகளைத் தர மறுத்தோ அவளைக் கொடுமைப் படுத்துகிறான். பிறகு அறிவுரைகளும், சீர்திருத்த முயற்சிகளும் அவனுக்கு எந்த பலனையும் அளிக்கவில்லையெனில் இதுபோன்ற சந்தர்ப்பங்களில் ஒரு பெண் தன்னையும் தன் மார்க்கத்தையும் காத்துக் கொள்வதற்காக விவாகரத்தைக் கோரினால் அவள் மீது எந்தக் குற்றமும் கிடையாது.

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.