Monday, June 19, 2006

சூதாட்டம்

அல்லாஹ் கூறுகிறான்: "ஈமான் கொண்டவர்களே! மது, சூதாட்டம், பலி பீடங்கள், குறி பார்க்கும் அம்புகள் ஆகியவை அருவருக்கத்தக்க ஷைத்தானியச் செயல்களாகும். அவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். அதன் மூலம் நீங்கள் வெற்றி பெறலாம்" (5:90)

அறியாமைக் காலத்து மக்களிடம் சூதாட்டம் பல விதங்களில் இருந்திருக்கிறது. அவர்களிடம் இருந்த பிரபலமான ஒரு விதம் வருமாறு: ஒரு ஒட்டகத்தில் பத்து பேர் சம அளவில் பங்கு போட்டு கொள்வர். பிறகு அம்புகள் மூலம் சீட்டுக் குலுக்கிப் போட்டு ஏழு பேர்கள் மட்டும் அவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட பங்குகளை எடுத்துக் கொள்வர். எஞ்சியுள்ள மூன்று பேர்களுக்கு ஒன்றும் கிடைக்காது.

நமது காலத்தில் சூதாட்டம் பல விதத்தில் நடக்கின்றது. அவற்றுல் சில:

1. லாட்டரி: இதில் பல வகைகள் உள்ளன. சாதாரணமாக நடைமுறையில் உள்ளது இதுதான். அதாவது பணம் கொடுத்துப் பரிசு சீட்டுகளை வாங்கிக் கொள்வார்கள். குறிப்பிட்ட தேதியில் அந்தப் பரிசுச் சீட்டுகளின் பேரில் குலுக்கல்கள் நடைபெறும். முடிவில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசு, இரண்டாம் பரிசு, மூன்றாம் பரிசு என (ஆயிரங்கள் முதல் கோடிகள் வரை) பரிசுத் தொகை கிடைக்கும். இதற்கு அவர்கள் என்ன பெயரை வைத்துக் கொண்டாலும் இது ஹராம் தான்.

2. ஏதேனும் ஒரு பொருளை பணம் கொடுத்து வாங்குவது. அதனுள் என்ன இருக்கிறதென்றே தெரியாது. அல்லது ஒரு பொருளை வாங்கும் போது அதற்கு ஒரு நம்பர் அல்லது ஒரு சீட்டுக் கொடுக்கப்படும். பிறகு அதன் பேரில் குலுக்கல் நடைபெறும் அதிர்ஷ்டசாலிகளைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்படும்.

3. நமது காலத்திலுள்ள சூதாட்ட வகைகளில் வணிக இன்சூரன்சும் ஒன்றாகும். ஆயுள் இன்சூரன்ஸ், வாகன இன்சூரன்ஸ், சரக்குகளுக்கு இன்சூரன்ஸ், நெருப்பினால் ஏற்படக்கூடிய இழப்புகளின் ஈட்டுக்கு இன்சூரன்ஸ், பொது இன்சூரன்ஸ், பிறரின் தீங்கிலிருந்து பாதுகாக்க இன்சூரன்ஸ் இப்படி பலவகையான இன்சூரன்ஸ்கள் உள்ளன. எந்த அளவுக்கெனில் சில பாடகர்கள் தங்களின் குரலுக்கும், சில விளையாட்டு வீரர்கள், நடிகைகள் தங்களின் சில உறுப்புகளுக்கும் இன்சூரன்ஸ் செய்துக் கொள்கின்றனர்.

மேற்கூறப்பட்ட முறைகளைத் தவிர இன்னும் பல முறைகளும் உள்ளன. அவையனைத்தும் சூதாட்டத்தில் அடங்கும். இன்று சூதாட்டத்திற்கென தனிப்பட்ட கிளப்கள், சங்கங்கள் இருக்கின்றன. அங்கு இப்பெரும் பாவத்தைச் செய்வதற்குத் தனிப்பட்ட பச்சை நிற மேசைகள் உள்ளன. அதுப்பொல கிரிக்கெட், கால் பந்து போன்ற விளையாட்டுப் போட்டிகளில் பந்தயம் கட்டுவதும் ஒருவகை சூதாட்டமே! அதுபோல சில விளையாட்டு அரங்கங்களிலும் பொழுது போக்கு மையங்களிலும் சூதாட்டத்தின் அடிப்படையிலான பல்வேறு விளையாட்டுகள் நடைபெறுகின்றன. போட்டிகள் மூன்று வகைப்படும்:

1. மார்க்க அடிப்படையிலான போட்டிகள். இத்தகைய போட்டிகள் பரிசுகளுடனோ அல்லது பரிசுகள் இல்லாமலோ நடத்தப்படுவது ஆகுமானதாகும். உதாரணமாக ஒட்டகப் பந்தயங்கள், குதிரைப் பந்தயங்கள், துப்பாக்கி சுடும் போட்டிகள், குறிபார்(த்து இலக்கைத் தா)க்கும் போட்டிகள், போன்றவையாகும். (இத்தகைய போட்டிகள் அறப்போருக்கு உதவும்) இத்தகைய போட்டிகளில் - அரிஞர்களின் சரியான சொல்லின் பிரகாரம் - திருக் குர்ஆனை மனனம் செய்தல் போன்ற கல்விப் போட்டிகளும் அடங்கும்.

2. தன் அளவில் ஆகுமான போட்டிகள்: எடுத்துக்காட்டாக: கால்பந்து போட்டிகள், ஓட்டப்பந்தயங்கள். ஆனால் தொழுகையை வீணாக்குதல், மறைக்க வேண்டிய பகுதியை மறைக்காத வகையில் அறைகுறை ஆடை அணிதல் போன்ற ஹராமான காரியங்களை விட்டும் இவை நீங்கியிருக்க வேண்டும். பந்தயம் கட்டாமல் இத்தகைய போட்டிகள் நடத்தப்பட்டால் அவை கூடும்.

3. தன் அளவில் ஹராமான அல்லது ஹராமின் பக்கம் சேர்க்கக்கூடிய போட்டிகள்: உதாரணம்: அழகிப் போட்டிகள், முகத்தைக் காயப்படுத்தக் கூடிய குத்து சண்டைப் போட்டிகள், அதுபோல கொம்புள்ள கால்நடைகளை மோத விடுதல், சேவல்களை மோத விடுதல் போன்ற போட்டிகள் அனைத்தும் விலக்கப்பட்டவையாகும்.

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.