Sunday, June 25, 2006

திருடுதல்

அல்லாஹ் கூறுகிறான்: "திருடுபவர் ஆணாயினும் சரி, பெண்ணாயினும் சரி அவர்களின் கரங்களைத் துண்டித்து விடுங்கள். இது அவர்களுடைய சம்பாதனைக்கான கூலியாகும். மேலும் அல்லாஹ் வழங்கும் படிப்பினை மிக்க தண்டனையுமாகும். அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தோனும் நுண்ணறிவுள்ளோனுமாவான்" (5:38)

திருட்டுக் குற்றங்களில் மிகப்பெரும் குற்றம் பழமையான அல்லாஹ்வின் ஆலயத்தை ஹஜ் மற்றும் உம்ரா செய்பவர்களிடம் திருடுவதாகும். இத்தகைய திருடர்கள் இப்புவியின் மிகச்சிறந்த இடமான மஸ்ஜிதுல் ஹராமிலும் அதைச் சுற்றிய இடங்களிலும் கூட அல்லாஹ்வின் வரம்புகளுக்கு எந்த மதிப்பும் அளிப்பதில்லை. சூரிய கிரகணத் தொழுகை பற்றிய ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்: 'நரகம் என்னிடம் கொண்டு வரப்பட்டது. எப்போதெனில் அதன் ஜுவாலை என்மீது பட்டு விடுமோ என அஞ்சி நான் (தொழுகையில்) சற்று பின்னால் நகர்ந்ததை நீங்கள் பார்த்த சமயத்தில் (கொண்டு வரப்பட்டது).

அப்போது அங்குசத்தை வைத்திருக்கும் ஒருவன் நரகில் தன்னுடைய குடலை இழுத்துச் செல்வதைக் கண்டேன். தன்னுடைய அங்குசத்தைக் கொண்டு ஹாஜிகளிடம் திருடியவன் தான் அவன். ஹாஜிக்கு இது தெரிந்து விட்டால், உங்கள் சாமான் என்னுடைய அங்குசத்தில் தெரியாமல் கொழுவிக் கொண்டது என்று (சமாதானம்) கூறிவிடுவான். ஹாஜிக்கு இது தெரியாவிட்டால் சாமானை எடுத்துச் சென்று விடுவான். (முஸ்லிம்)

பொதுச் சொத்தைத் திருடுவது மோசமான திருட்டாகும். இதைச் செய்பவர்களில் சிலர், மற்றவர்கள் செய்வது போலவே நாங்களும் செய்கிறோம் என்று கூறுகின்றார்கள். இது எல்லா மக்களிடமிருந்து திருடுவது என்பதை அவர்கள் உணர்வதில்லை. ஏனென்றால் பொதுச் சொத்து என்பது மக்கள் எல்லோருக்கும் சொந்தமானது. இறையச்சம் இல்லாதவர்களுடைய இத்தகைய செயலை மற்றவர்கள் செய்கிறார்கள் என்பதைக் காட்டி நியாயப்படுத்த முடியாது.

இன்னும் சிலர் காஃபிர்களுடைய சொத்தை - அவர்கள் காஃபிர்களாக இருக்கிறார்கள் என்பதை ஆதாரமாகக் கொண்டு - திருடுகின்றனர். இதுவும் சரியல்ல. ஏனெனில் எந்தக் காஃபிர்கள் முஸ்லிம்களுடன் போர் தொடுக்கின்றார்களோ அவர்களுடைய சொத்துக்கள் தான் முஸ்லிம்களுக்கு ஆகுமானதே தவிர அனைத்து காஃபிர்களுடைய சொத்துக்கள், நிறுவனங்கள், கம்பெனிகள் ஆகுமானவை அல்ல.

திருடக்கூடிய வழிமுறைகளில் சில: அடுத்தவர்களுடைய சட்டைப் பையில் அவர்களுக்குத் தெரியாமல் கையைப் போட்டு (பிட்பாக்கெட் அடித்து) விடுகின்றனர். சிலர் அடுத்தவர்களின் வீட்டில் அவர்களை சந்திக்கும் நோக்கில் நுழைந்து திருடி விடுகின்றனர். இன்னும் சிலர் விருந்தாளிகளுடைய பைகளில் திருடி விடுகின்றனர். வேறுசிலர் வியாபாரஸ்தலங்களில் நுழைந்து அங்குள்ள பொருட்களை தம்முடைய சட்டைப்பைகளில் அல்லது ஆடைகளில் மறைத்து விடுகின்றனர். சில பெண்கள் கூட இவ்வாறு செய்கின்றனர்.

இன்னும் சிலர் குறைவான அல்லது அற்பமான பொருட்களைத் திருடுவதை இலேசாகக் கருதுகின்றனர். ஆனால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'திருடுபவனை அல்லாஹ் சபிப்பானாக! (ஒரு) முட்டையைத் திருடினாலும் அவனுடைய கை துண்டிக்கப்படும். கயிற்றைத் திருடினாலும் அவனுடைய கை துண்டிக்கப்படும் எனக் கூறியுள்ளார்கள்' அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி.

ஒருவன் ஒரு பொருளைத் திருடி விட்டால் அல்லாஹ்விடம் அவன் பாவமன்னிப்புக் கோருவதும் அப்பொருளை உரியவரிடம் திருப்பிக் கொடுப்பதும் அவசியமாகும். பகிரங்கமாக அவரிடம் கொடுத்தாலும் சரி அல்லது தனிப்பட்ட முறையில் இரகசியமாக அவரை சந்தித்துக் கொடுத்தாலும் சரி. ஆனால் உரியவரிடமோ அல்லது அவருடைய மறைவுக்குப்பின் அவருடைய வாரிசுகளிடமோ அப்பொருளை ஒப்படைக்க முடியவில்லையெனில், அவரைத் தேடுவதில் மிகுந்த முயற்சி எடுத்தும் இயலவில்லையெனில் உரியவர் பேரில் அப்பொருளை தர்மம் செய்து விட வேண்டும். அதற்கான கூலி உரியவருக்குக் கிடைக்க எண்ணிக் கொள்ள வேண்டும்.

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.