Monday, July 03, 2006

லஞ்சம் கொடுப்பதும், வாங்குவதும்

உரிமையை அழிப்பதற்கோ, பொய்யைச் செல்லுபடியாக்குவதற்கோ - மக்களிடையே தீர்ப்புச் சொல்லக்கூடிய நீதிபதிக்கு லஞ்சம் கொடுப்பது குற்றமாகும். காரணம் இது தீர்ப்பில் நேர்மை தவறுவதற்கும் நியாயம் கிடைக்க வேண்டியவர்களுக்கு அநீதி இழைப்பதற்கும் இட்டுச் செல்லும். மேலும் இது குழப்பத்தை உருவாக்கும். அல்லாஹ் கூறுகிறான்: "மேலும் நீங்கள் ஒருவர் மற்றவரின் பொருளை தவறான முறையில் உண்ணாதீர்கள். மேலும் பிற மனிதர்களுடைய பொருள்களில் ஏதேனும் ஒரு பகுதியை அநீதமான முறையில் தின்பதற்காக - அது தவறு என நீங்கள் அறிந்திருந்தும் - அதற்குரிய வாய்ப்பைப் பெற அதிகாரிகளைஅணுகாதீர்கள்" (2:188)

(ஒரு விவகாரத்தில்) தீர்ப்புப் பெறுவதற்காக லஞ்சம் கொடுப்பவனையும் லஞ்சம் வாங்குபவனையும் அல்லாஹ் சபிப்பானாக! என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்' அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்:அஹ்மத்.

ஆனால் நீதியை அடைவதோ அநீதியைத் தடுப்பதோ லஞ்சம் கொடுக்காமல் சாத்தியம் ஆகாதெனில் இத்தகைய (நிர்பந்தமான) சூழ்நிலையில் லஞ்சம் கொடுப்பவன் இந்த எச்சரிக்கையில் சேரமாட்டான்.

இந்தக் காலத்தில் லஞ்சம், பெருமளவு பெருகி விட்டது. எந்த அளவுக்கு எனில் சில ஊழியர்களுக்கு அவர்களுடைய ஊதியத்தை விடக் கூடுதல் வருமானமாக லஞ்சம் ஆகிவிட்டது. அதுமட்டுமல்ல பல கம்பெனிகளுடைய வரவு, செலவு கணக்கு (பட்ஜெட்)களில் பல்வேறு (மறைமுகமான) பெயர்களில் லஞ்சம் கொடுக்கல், வாங்கல்கள் பதிவு செய்யப்படுகிறது. பெரும்பாலான கொடுக்கல், வாங்கல்கள் எப்படி மாறி விட்டன என்றால் அவை ஆரம்பமாவதும் லஞ்சம் மூலமாகத்தான் முடிவதும் லஞ்சம் மூலமாகத்தான். அதனால் ஏழைகள் பெரும் துன்பங்களுக்கு ஆளாகின்றனர். இதனால் (மனிதர்களிடம் ஒப்படைக்கப்பட்ட) பல்வேறு பொறுப்புகள் பாழாகி விட்டன. தொழிலாளிகள் கெட்டுப் போவதற்கும் அதனால் முதலாளிகள் நஷ்டம் அடைவதற்கும் இதுதான் காரணம். அது மட்டுமல்ல லஞ்சம் கொடுப்பவருக்குத் தான் வேலை சிறப்பாக முடித்துக் கொடுக்கப்படுகிறது. எவர் லஞ்சம் கொடுக்கவில்லையோ அவருடைய வேலை சிறப்பாக முடித்துக் கொடுக்கப்படுவதில்லை. அல்லது அவருடைய வேலை தாமதப்படுத்தப்படுகிறது.

லஞ்சம் கொடுத்தவர்கள் லஞ்சம் கொடுக்காதவர்களுக்குப் பிறகு வந்தும் அவர்களுக்கு வெகு முன்பாகவே வேலையை முடித்து விட்டுச் சென்று விடுகின்றனர். முதலாளிகளுக்குச் சேரவேண்டிய பணங்கள் லஞ்சம் காரணமாக முகவர்களின் பாக்கெட்டுகளில் சேர்ந்து விடுகிறது. இதுபோன்ற காரணங்களால் தான் இந்தத் தீமையிலும் இது சம்பந்தபட்டவற்றிலும் பங்கு பெறுபவர்களை அல்லாஹ் தனது அருளை விட்டும் தூரமாக்கட்டும் என நபி (ஸல்) அவர்கள் சபித்திருப்பதில் ஆச்சரியமில்லை.

அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'லஞ்சம் கொடுப்பவர் மீதும் லஞ்சம் வாங்குபவர் மீதும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டுமாக! என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்' (இப்னுமாஜா)

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.